மந்தையில் சாய்கிறாள்…
முந்தி சரிந்து மூச்சுத் திணறி
மார்பறுந்து கைகால்கள் வெட்டப்பட்டு
மந்தையில் சாய்கிறாள்…
( மந்தை என்றால் ஊரின் பொது இடம் என்று பொருள்)
புவியுடலின் நரம்புப் பின்னலவள்…
வானச்சேலையின்
பின்னல் நூலவள்…
சிலிர்த்துக் கொண்ட மனிதப் பதரிடம்…
ஈனஓசையில் புலம்பல் வார்த்தைகள்…
மேற்கு மலையில்
நிலை கொண்டு நின்ற என்
ஒரு கால் வெட்டினாய்…
நிலை தடுமாறித் தரையில் விழுந்தேன்!
நீயோ
பசுமை வார்த்தை
பேசிக் கொண்டு
தேயிலைச் செடிகள் நட்டாய்…
அருகே ஒருவன் ஆடிக்கொண்டே ஆறுதல் பேசினான்…
வசனக் கோடரி வீசியபடி என்
மறுகால் வெட்டினான்…
மொத்தமாய் நானும்
சரிந்து விழுந்தேன்…
பருவ மேகமதைத்
தடுக்க நானில்லாமல்
கருணை மழையோ சாரலானது…
எந்திரப் புரட்சி எனும் பெயரால்…
என் கருணைக் கரமொன்றை
ஸ்டெர்லைட் கோடரி வெட்டி வீழ்த்தியது…
என் இரத்த வாடையே
உன் சுவாசக் காற்றில்
நாற்றமெடுத்தது…
வளர்ச்சி வசதி கோடரி வீசி
நால்வழிச் சாலையில்
ஒற்றை வரிசையாய்க்
கிடந்த மறு கை வெட்டப்பட்டது…
அசைய முடியா என் நிலையால்
உனக்காய்க் கிடந்த
ஆறும் குளமும்
அற்றுப் போனது…
காற்றைக் கழுவும் என்
மார்பை அறுத்துத்
தங்கும் விடுதிகள் கட்டப்பட்டன…
காற்றின் கந்தகத் துகள்கள் கூடி
உன் சுவாச மூச்சும்
திணறிப்போனது…
வானப்பெண்ணின் ஓசோன் சேலை கிழிந்த பிறகும்
பூமிக் குடிநீர் குடிக்கும் தரத்தை இழந்த பிறகும்
மிச்சமிருக்கும் இதய இயக்கமும்
எட்டு வழிக்காய்ப் பிடுங்கப்பட்டால்…
உயிர்களுக்கிங்கே சுழற்சி யில்லை…
உனக்குமிங்கே வாழ்வுமில்லை…
வேர்முதல் பூவரை உனக்கே தரும் எனை
அழித்து முடித்து
நெகிழிக் கோடி போர்த்துவாயானால்…
அழிவின் விளிம்பு அதுவே மனிதா…
மண் எம் தொடக்கம்…
இயற்கையை நாங்கள் மீறுவதில்லை..
அழியும் நாங்கள் பூமியின் பிள்ளை…
அழிந்தாலும் மீண்டும் பிறப்போம்…
இயற்கையை மீறும் மனிதா!
நீயோ இயற்கையின் எச்சம்…
என்னழிவு உனக்கும் விறகு…
எண்ணிப் பார்த்து விடியல் பழகு…
மு.சரவணக் குமார்
ஈரோடு
94880 76070
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!