என்னைத் துரத்திய பச்சை

ஒரு பத்திரிகையின் ஒரு திரைப்பட விளம்பரம் என்னைக் கவர்ந்தது. படத்தின் பெயர் பச்சை நிறமே என்பது.

சட்டெனப் பச்சை நிறத்தைப் பற்றியும் பச்சை என்ற சொல்லாட்சியைப் பற்றியும் நினைத்துப் பார்த்தேன். எனக்கே மலைப்பாகி விட்டது.

பச்சையில் இத்தனை விவகாரம் இருக்கிறதா? என்பதை நினைக்க நினைக்க ஆச்சரியம் பொங்கி வழிந்தது.

சிவகாசியில் பட்டாசுத் தொழிலில் உள்ளவர்கள் பச்சை உப்பு, சிவப்பு உப்பு என்று சில இரசாயன வேதிப் பொருட்களைக் கூறுவார்கள். அந்த உப்பு வெள்ளையாகவே இருக்கும்.

அது இருக்கும் கவர்தான் பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் இருக்கும். பச்சை நிற ஒளிக்கற்றைகளை வெளிவிடும் வெண்மை நிற வேதிப் பொருட்களுக்குப் பெயர்தான் பச்சை உப்பாம்.

சிவப்பு நிற ஒளிக்கற்றைகளை வெளிவிடும் வெண்மை நிற வேதிப் பொருட்களுக்குப் பெயர்தான் சிவப்பு உப்பாம். இதைப்பற்றி யோசித்துக் கொண்டே டவுனுக்குச் செல்ல புறப்பட்டேன்.

தெருவில் நடந்து செல்லும் இருவர் இப்படிப் பேசிக் கொண்டு செல்கிறார்கள் அந்த குழந்தை – ‘பச்சக் குழந்தை‘ அதற்கு என்ன தெரியும்? என்று.

இந்த இடத்தில் ‘பச்சை’ என்பதற்கு என்ன பொருள்? என்று யோசித்துக் கொண்டே நான் பைக்கில் செல்லும்போது குழாயடியில் தண்ணீர் பிடிப்பவர்களிடையே காரசாரமான வாக்குவாதம் பலர் ஏகக்குரலில் ஒரே நேரத்தில் பார்வையாளர்களுக்குத் தங்கள் பக்கத்து நியாயத்தை எடுத்துக் கூறுகிறார்கள்.

அதில் ஒரு பெண் நீ சொல்வது ‘பச்சைப் பொய்’ என்று சொன்னார். சட்டென ‘பச்சைப்’ பொய் என்றால் என்ன? என்று யோசித்தேன்.

இதற்கிடையில் மற்றொரு பெண் வந்து அடியே! உன் ரகசியமெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நெனச்சியா? தெருவெல்லாம் ‘பச்சைப் பச்சையாய்ப்’ பேசிக் கிழிச்சிடுவேன் கிழிச்சி என்றாளே பார்க்கலாம்!

பார்வையாளனாக சுவாரசியமாக நின்றிருந்த எனக்குச் சட்டென ஒரு குழப்பம்… இந்தப் ‘பச்சை’க்கு என்ன பொருள்?

யோசித்தக் கொண்டே வண்டியின் ஆக்சிலேட்டரைக் கூட்டும் போது ரேசன் கடைக்காரர் குறுக்கே வந்து சார்! நம்ம கடையில் நல்ல ‘பச்சரிசி’ வந்திருக்கு வேணும்னா சொல்லுங்க வாங்கித் தர்ரேன் என்றார். பச்சரிசி என்னை நச்சரித்தது.

தீடீரென்று தோன்றிய இந்தச் சிந்தனையிலிருந்து விடுபடுமுன் எனது செல்போன் சிணுங்கியது.

பேசியவர் ‘சார் இப்போ பச்சப்பழ நாடார் கடைக்கு அருகில் நிற்கிறேன் நீங்கள் அங்கே வந்து விடுங்கள்’ என்று கூறிவிட்டுப் போனை வைத்து விட்டார்.

‘அது என்ன பச்சப்பழம்’ என்று யோசித்துக் கொண்டே வண்டியின் வேகத்தைக் கூட்டும் போது என் பழைய மாணவர் எதிரே வந்தார்.

சம்பிரதாய மரியாதை உரையாடல் முடிந்தபின் என்ன வேலை பார்க்கிறாய்? என்று கேட்டேன். ‘பச்சையப்பன்’ கல்லூரியில் ஆசிரியராக இருப்பதாகக் கூறினார். பச்சை நிறம் என்னைத் துரத்துவது போல் இருந்தது.

பச்சப்பழ நாடார் கடையில் நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவரின் மனைவியிடமிருந்து அவருக்குச் செல்போன் அழைப்பு வந்தது.

சரோஜினி டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரில் என்னை இறக்கி விட்டுடுங்க வீட்டில் போன் செய்து ‘Green Tea‘ வாங்கிட்டு வாங்க என்கிறாள்’ என்றார்.அவரை ஸ்டோரில் இறக்கி விட்டுவிட்டு எனது வீடு வந்து சேர்ந்தேன்.

மாடிப்படி ஏறிக் கொண்டிருக்கும் போது டி.வி.யில் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்று பழைய பாடல் ஒன்று ஒலித்ததே பார்க்கலாம்.

நான் பேய் அறைந்தவன் போல் அரண்டுவிட்டேன். வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாததுமாய் என் மனைவி ‘நான் பல் டாக்டரிடம் போக வேண்டும் பல்லில் பச்சத் தண்ணீர் பட்டால் கூடக் கூச்சமாக இருக்கிறது’ என்றாள். இந்தப் பச்சைத் தண்ணீர் பற்றி யோசித்துக் கொண்டே வராண்டாவில் இருந்து பத்திரிகையை எடுத்தேன்.

அதில் சென்னைச் சட்டக்கல்லூரியில் கலவரம் தொடர்பாக வந்திருந்த கட்டுரை என்னைக் கவர்ந்தது. படிக்க ஆரம்பித்தேன். முதல் வாக்கியமே என்னை அதிர வைத்தது. ‘இது பச்சையான சாதிச் சண்டை…’ என்று தொடங்கியது.

வீட்டின் அறையில் இருந்த தொலைக்காட்சியில் யாரோ உடல் ஆரோக்யம் தொடர்பாகப் பேசிக் கொள்வது வராண்டாவில் இருந்த எனக்குத் தெளிவாகக் கேட்டது.

அதில் ‘கேரட், பீட்ரூட் போன்ற பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்…’ என ஒருவர் கூறியதும் எனக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. கேரட்டும் பீட்ரூட்டும் என்ன பச்சைக் காய்கறிகளா?

உணர்வுகளை எல்லாம் எழுத வேண்டும் என்று வராண்டாவில் இருந்த மேஜையை இழுத்தப் போட்டு வெள்ளைத் தாளை எடுத்துப் ‘பச்சை நிறமே’ என்று தலைப்பிட்டேன்.

அதன் பின்னர்தான் உணர்ந்தேன் எனது ‘பேனா மையின் நிறம் பச்சை’ என்பதை. எனக்கு எல்லாமே பச்சைப் பச்சையாகவே தெரிந்தது. காரணம் நானும் உங்களைப் போல ‘பச்சைத் தமிழன்’ தானே!

அது என்ன பச்சைத் தமிழன்?

– சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்