விரலில் எஞ்சியிருந்த
பட்டாம்பூச்சியின்
வண்ணத் துகள்களால்
உனக்கொரு ஓவியம் வரைந்து
கொடுத்தேன்!
அந்த சித்திரத்தின் ஒரு
மூலையில்
குறைந்திருந்த நிறத்தைச் சுட்டி
என்னை வைதாய்!
முழுமை செய்யச் சொன்னாய்!
நான் சென்ற நேரம்
அதே இடத்தில் இருந்தது அதே
பட்டாம்பூச்சி;
இம்முறை
உடலெங்கும் சோர்வு படறக்
கவிழ்ந்து கிடந்தது.
அதன் இறக்கைகளைப் பிய்த்து
வேண்டிய மட்டும்
வண்ணம் சேகரித்துச் செல்ல முடிவு
செய்தேன்.
என்னைக் கண்டதும்
மீண்டும் விரலில் வந்து அமர்ந்தது.
அது
என்னிடம்
நிறம் குறைந்த தன்னைக்
கொன்று விடும் படிக் கூறியது.
அதை அங்கேயே விட்டுவிட்டேன்;
இப்பொழுது
நான் கொலை செய்ய வேண்டியது
என்னையா? உன்னையா?
– சங்கர் (கோபிசெட்டிபாளையம்)
shankar46nk@gmail.com