என்ன பயிர் செய்தன?

குழந்தைகளே, என்ன பயிர் செய்தன தலைப்பில் நாம் புத்திசாலியாக செயல்பட வேண்டியதன் அவசியம் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். இதற்காக ஒரு குட்டி கதையை நான் சொல்லப் போகிறேன். தொடர்ந்து படியுங்கள்.

மேல் பாகம் எனக்கு ‍ கீழ் பாகம் உனக்கு

முன்னொரு காலத்தில் காகம் கண்ணாயிரமும், குருவி குப்புசாமியும் நண்பர்களாய் இருந்தன. இதில் காகம் கண்ணாயிரம் புத்திசாலியாகவும், ஏமாற்றுக்குணமும் கொண்டதாக இருந்தது.

ஒரு சமயம் காகம் கண்ணாயிரமும், குருவி குப்புசாமியும் இணைந்து வயலில் பயிர் செய்ய நினைத்தன.

காகம் கண்ணாயிரம் குருவி குப்புசாமியிடம் “நண்பனே, இந்த முறை நாம் விளைவிக்கும் பயிரின் மேல் பகுதியை நான் எடுத்துக் கொள்கிறேன். நீ பயிரின் கீழ் பகுதியை எடுத்துக் கொள் என்று கூறியது.” குருவி குப்புசாமியும் காகம் கண்ணாயிரத்தின் உடன்படிக்கைக்கு உடன்பட்டது.

காகம் கண்ணாயிரமும், குருவி குப்புசாமியும் வயலில் நன்கு வேலை செய்தன. அவர்களின் உழைப்பினால் பயிரும் நன்கு வளர்ந்தது. பயிரின் அறுவடைக்காலம் நெருங்கியது. அறுவடைக்குப் பின் காகம் கண்ணாயிரம் அதிக லாபம் ஈட்டியது. குருவி குப்புசாமி லாபம் ஏதும் கிடைக்கவில்லை.

கேள்வி

காகம் கண்ணாயிரமும், குருவி குப்புசாமியும் என்ன பயிர் செய்தன?.

விடை

நெல்லை பயிர் செய்தன. நெற்பயிரின் மேற்பகுதியில் நெற்கதிர்கள் இருந்ததால் காகம் கண்ணாயிரம் நெற்கதிரை அறுவடை செய்து அதிக லாபம் ஈட்டியது.

 

Paddy

 

குருவி குப்புசாமி நெற்பயிரின் கீழ்பாகமான வேரினை அறுவடை செய்ததால் லாபம் ஏதும் கிடைக்கவில்லை. லாபம் ஏதும் கிடைக்காததால் குருவி குப்புசாமி மிகவும் ஏமாற்றத்துடன் இருந்தது.

 

கீழ் பாகம் எனக்கு ‍மேல் பாகம் உனக்கு

காகம் கண்ணாயிரம் குருவி குப்புசாமியிடம் “நண்பனே கவலைப்படாதே. இம்முறை நாம் பயிர் செய்யும் பயிரில் நீ பயிரின் மேல்பாகத்தை எடுத்துக் கொள். நான் பயிரின் கீழ்பாகத்தை எடுத்துக் கொள்கிறேன்.” என்று கூறியது.

குருவி குப்புசாமியும் போனமுறை போன்று நாம் ஏமாந்து விடக்கூடது என்று மனதிற்குள் எண்ணியவாறு அரைகுறை மனதுடன் காகத்தின் பேச்சிற்கு உடன்பட்டது.

இம்முறையும் இருவரும் கடுமையாக உழைத்தன. பயிரின் அறுவடையின் போது காகம் கண்ணாயிரம் பயிரின் அடிப்பகுதியையும், குருவி குப்புசாமி பயிரின் மேல்பகுதியையும் தங்கள் பங்குகளாக ஒப்பந்தப்படி எடுத்துக் கொண்டன. இம்முறையும் காகம் அதிக லாபத்தை சம்பாரித்தது. குருவி லாபம் ஏதும் இல்லாமல் இருந்தது.

கேள்வி

காகம் கண்ணாயிரமும், குருவி குப்புசாமியும் இரண்டாவது முறையாக என்ன பயிர் செய்தன?

விடை

நிலக்கடலையைப் பயிர் செய்தன. நிலக்கடலையின் கீழ்பகுதியில் நிலக்கடலைகள் இருந்ததால் காகம் கண்ணாயிரம் நிலக்கடலைகளை அறுவடை செய்து அதிக லாபம் ஈட்டியது.

 

Groundnut

 

குருவி குப்புசாமி நிலக்கடலையின் மேற்பகுதியை அறுவடை செய்து லாபம் ஏதும் ஈட்டவில்லை.

 

நடுப் பாகம் எனக்கு மேல் பாகம் கீழ் பாகம் உனக்கு ‍

இரண்டாவது முறையாகவும் குருவி குப்புசாமி ஏமாற்றம் அடைந்ததால் மிகவும் சோர்வுடன் அமர்ந்திருந்தது. இதனைக் கண்ட காகம் கண்ணாயிரம் குருவி குப்புசாமியை சமாதானப்படுத்தி மறுபடியும் பயிர் செய்ய சம்மதிக்க வைத்தது.

குருவி குப்புசாமி “இம்முறை பயிர் செய்யும் பயிரின் மேல்பாகத்தையும், கீழ்பாகத்தையும் எடுத்துக் கொள்வேன். நீ பயிரின் நடுபாகத்தை வைத்துக் கொள்.” என்று காகம் கண்ணாயிரத்திடம் கூறியது.

காகம் கண்ணாயிரமும் குருவி குப்புசாமியின் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது. இருவரும் இணைந்து பயிரினை பயிர் செய்தன. அறுவடை காலம் நெருங்கியது.

குருவி குப்புசாமி தனக்கு கிடைக்கப்போகும் லாபத்தை எண்ணி மகிழ்ந்தது. ஆனால் அறுவடையின் முடிவில் வழக்கம் போல் காகம் கண்ணாயிரம் அதிக லாபம் ஈட்டியது.

கேள்வி

காகம் கண்ணாயிரமும், குருவி குப்புசாமியும் என்ன பயிர் செய்தன?

விடை

கரும்பினை பயிர் செய்தன. காகம் கண்ணாயிரம் ஒப்பந்தப்படி கரும்பின் இனிப்பான நடுப் பாகத்தை எடுத்துக் கொண்டது. குருவி குப்புசாமி கரும்பின் மேல்பாகமான தோகையையும், கீழ்பாகமான வேரினையும் எடுத்து ஏமாந்தது.

 

கரும்பு

 

பின் குருவி குப்புசாமி காகம் கண்ணாயிரத்திடம் “இனி நாம் இருவரும் தனித்தனியாக பயிர் செய்வோம்” என்று கூறி ஏமாற்றத்துடன் சென்றது.

இக்கதை தரும் கருத்து

எக்காரியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும். அடுத்தவர்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. வாழ்வில் புத்திசாலியாகச் செயல்பட வேண்டும்.

வ.முனீஸ்வரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.