என் மகனா இப்படி?

என் மகனா இப்படி?

சிவகாமிக்கு நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது. வெளியே தலைகாட்ட முடியவில்லை.

அந்த ஸ்டோரில் இருந்த பதினைந்து வீட்டுக்காரர்களும் மொத்தமாக அவளைச் சூழ்ந்து கை கொட்டிச் சிரிக்கிறாற் போல் ஓர் பிரமை.

தனது ஒரே மகனை ஆசை ஆசையாக வளர்த்து, கல்லூரியில் படிக்க வைத்து, ஆயிரமாயிரம் கற்பனைக் கோட்டைகள் கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகிறாள் கணவனை இழந்த சிவகாமி.

சமையல் வேலைக்குச் சென்று வத்தல், வடாம், முறுக்கு செய்து விற்று, கிடைக்கும் வருவாயில் ஒரே மகன் சபேசனை கண்ணும் கருத்துமாய் வளர்த்து ஆளாக்க அவள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமா?

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சென்ற இருநாட்களான அவனைப் பற்றிய ‘கிசுகிசு’ ஸ்டோர் முழுக்கப் பரவுகிறதென்றால்?

சிவகாமியின் காதுபடப் பேசுபவர்களும், ஜாடையாகப் பேசுபவர்களும், நேரிடையாகக் கேட்பவர்களுமாக அனைவருக்கும் மத்தியில் அவன் அணுஅணுவாய் செத்துக் கொண்டிருக்கிறாள்.

விஷயம் என்னவென்றால், சபேசன் தண்ணி அடிக்கிறானாம்! என்ன ஆச்சு சபேசனுக்கு? தன்னுடைய ஒரே மகனா இப்படி?

துஷ்டர்களைக் கண்டால் தூர விலகி ஓடும் பட்டதாரியான சபேசனா இந்தப் பழக்கத்திற்கு ஆளாகியிருக்கிறான்?

எவ்வளவு நாட்களாய் இந்தப் பழக்கமோ? கடவுளே! யாரோடு சகவாசம் வைத்துக் கொண்டு இப்படி ஆகிவிட்டான்?

அவனைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொண்டு எவ்வளவு நம்பிக்கையுடன் இருந்தேன்? இனியும் நான் உயிரோடு இருக்கத்தான் வேண்டுமா?

சிவகாமி மனம் நொந்து கொண்டிருந்தாள். பட்டதாரி மகனின் அச்செயலை நேரிலேயே பார்க்கச் சொல்லி சிவகாமியை அழைத்துக் கொண்டு கிளம்பினர் அந்த ஸ்டோர்வாசிகள் சிலர்.

அவர்கள் பஜார் வழியாகக் கூட்டிச் சென்றபோது ஆங்காங்கே தென்பட்ட மதுபானக் கடைகளை ஒருவித கலவரத்துடனும், அச்சத்துடனும் பார்த்துக் கொண்டே சென்றாள் சிவகாமி. எந்தக் கடையில் தன் மகனைப் பார்க்க நேரிடுமோ என்கிற பயம்.

பஜார் கோடியில் ஒற்றை மாட்டு வண்டி ஒன்று வருவதைச் சுட்டிக்காட்டி சிவகாமியிடம் ஏதோ கூறினர் ஸ்டோர்வாசிகள்.

வண்டி அருகில் வந்ததும், அதை ஓட்டி வந்தது சபேசன்தான் என்பது சிவகாமிக்குத் தெளிவாகியது.

“அம்மா, தப்பா நினைக்காதீங்கம்மா. வேலை கிடைக்கிறது குதிரைக் கொம்பாய் இருக்கிற இக்காலத்துல ஏதாவது ஒரு வேலை செஞ்சு சம்பாதிக்கணும்னு ஆசைப்பட்டேன். இரண்டு மைல்கள் தள்ளியிருக்கிற கிணற்றிலிருந்து டிரம், டிரம்மாய் குடி தண்ணீர் இறைச்சு சப்ளை செஞ்சால் ஒருநாளைக்கு சாப்பாடு போக ஐநூறு ரூபாய் தர்றாங்கம்மா! வண்டியும் மாடும்கூட அவங்களோடது தான். ஓட்டலுக்கு வண்டியிலே தண்ணி அடிக்கிறது கேவலமாக தெரியலேம்மா…!” என்றான் சபேசன்.

பட்டதாரியாக இருந்தும் உழைத்துச் சம்பாதிக்கப் புறப்பட்டிருக்கும் தன் மகனைக் கண்களில் நீர் மல்கப் பெருமையுடன் பார்த்துக் கொண்டு நின்றாள் சிவகாமி.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998