எப்படிப் பேச வேண்டும்?

எப்படிப் பேச வேண்டும்?

எப்படிப் பேச வேண்டும்? எப்படிப் பேசக் கூடாது? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

எப்படிப் பேச வேண்டும்?

1.ஞயம்பட உரை

கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேச வேண்டும்.

2.மொழிவது அறமொழி

சொல்லுவதைச் சந்தேகமின்றி தெளிவாகத் திருத்தமுடன் சொல்ல வேண்டும். நாம் நன்மை தரக்கூடிய சொற்களையே சொல்ல வேண்டும்.

3.மேன்மக்கள் சொற்கேள்

நல்லொழுக்கம் உடைய சான்றோர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். அதனால் நாம் நல்ல விசயங்களைத் தெரிந்து கொள்வதோடு எப்படிப் பேச வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்கிறோம்.

எப்படிப் பேசக் கூடாது?

1.ஔவியம் பேசேல்

ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

2.கண்டொன்று சொல்லேல்

பார்க்காததைத் பார்த்தது போலப் பேசாதே. (பொய்ச் சாட்சி சொல்லாதே).

3.வஞ்சகம் பேசேல்

உண்மைக்குப் புறம்பான கவர்ச்சிகரமான சொற்களைப் பேசி ஏமாற்றாதே.

4.கோதாட்டு ஒழி

கபட நாடகம் ஆடுவதை நிறுத்து.

5.சித்திரம் பேசேல்

பொய்யான வார்த்தைகளை உண்மை போலப் பேசாதே.

6.சுளிக்கச் சொல்லேல்

கேட்பவருக்குக் கோபமும் அருவெறுப்பும் உண்டாகும்படி பேசாதே.

7.சையெனத் திரியேல்

பெரியோர்கள் “ச்சீ” என வெறுக்கும் படி வீணாய் பேசித் திரியாதே.

8.சொற்சோர்வு படேல்

பிறருடன் பேசும் பொழுது நம்பிக்கை இழக்கச் செய்யும் வார்த்தைகளைப் பேசாதே.

9.தெய்வம் இகழேல்

இறைவனை இகழ்ந்து பேசாதே.

10.நொய்ய உரையேல்

அற்பமான வார்த்தைகளைப் பேசாதே.

11.பழிப்பன பகரேல்

பொய், கடுஞ்சொல், பயனில்லாத சொற்களைப் பேசாதே.

12.பிழைபடச் சொல்லேல்

குற்றம் உண்டாகும்படி எதையும் பேசாதே.

13.மிகைபடச் சொல்லேல்

சாதாரணமான விஷயத்தை உயர்ந்த வார்த்தைகளால் மிகைப் படுத்திப் பேசாதே.

14.வல்லமை பேசேல்

உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பெருமையாகப் பேசாதே.

15.வாதுமுற் கூறேல்

பெரியோர்கள் முன்பாக முரண் பட்டு வாதிடாதே.

16.வெட்டெனப் பேசேல்

யாருடனும் கத்தி வெட்டு போலக் கடினமாகப் பேசாதே.

17.ஓரஞ் சொல்லேல்

ஒரு சார்பாகப் பேசாமல் நடுநிலையுடன் பேசு.

நாம் மற்றவரிடம் பேசும்போது இவற்றை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

இவை அனைத்தும் ஒளவையார் ஆத்திசூடியில் சொல்லி வைத்தவை.

பேசும்போது ஒளவையாரின் மேற்கூறிய பேசும் முறைகள் பற்றி நினைவில் வைத்துக் கவனமாகப் பேசுவது மிகவும் நல்லது.

ஒளவையார் பற்றி மேலும் அறிய