எப்படி இருந்த உலகம் இப்ப இப்படி ஆயிருச்சே?

பரபரப்பா பம்பரம் போல

படுவேகமா எந்திரம் போல

சுற்றிக் கொண்டும் சுழன்று கொண்டும்

சுகமாய் இருந்த இவ்வுலகத்தை

பாழாய்ப்போன பயங்கரக் “கொரோனா”

பொட்டிப்பாம்பாய் பொட்டிக்குள்ள சுருட்டிப் போட்டிடுச்சே

இப்படிச் சுருட்டிப் போட்டிடுச்சே!

எப்படி இருந்த உலகம் இப்ப இப்படி ஆயிருச்சே?

 

பட்டாம்பூச்சிபோல பல வண்ணக் கனவோட

பாடி-ஆடி-கூடித்திரிந்த பய-புள்ளைங்கக் கூட்டத்திற்கு

பயங்கர மரண பயத்தக் காட்டி

பதுங்க வச்சிடுச்சே

இப்படிப் பதுங்க வச்சிடுச்சே!

எப்படி இருந்த உலகம் இப்ப இப்படி ஆயிருச்சே?

 

படிப்பும் போயி பொழப்பும் போயி

வேலையும் போயி

வந்தக் கொஞ்ச-நஞ்ச வருமானமும் குறைந்து போயி

வருங்காலமும் வத்திப் போயி

வாட்டி வதச்சிடுச்சே

இப்படிப் போட்டு வாட்டி வதச்சிடுச்சே!

எப்படி இருந்த உலகம் இப்ப இப்படி ஆயிருச்சே?

 

உசுரக் குடுத்து கஷ்டப் பட்டு

உழைச்சுக் குடிச்ச கால்வயித்துக் கஞ்சிக்கும்

கடைசியில இப்ப பங்கம் வந்துடுச்சே

இப்படிப் பங்கம் வந்துடுச்சே!

எப்படி இருந்த உலகம் இப்ப இப்படி ஆயிருச்சே?

 

வாழ்வாதாரம் போயி

மானம் போயி மருவாதி போயி

மனசுத் தடுமாறுது வாழ்க்கைத் தடம் மாறுது

இப்படி வாழ்க்கைத் தடம் மாறுது!

எப்படி இருந்த உலகம் இப்ப இப்படி ஆயிருச்சே?

 

மருந்தும் இல்ல மாத்திரையும் இல்ல

தடுப்பூசியும் இல்ல

மப்புல மமதயில கொரோனா

மல்லுக் கட்டுது

இப்படி மல்லுக்கு நிக்குது!

எப்படி இருந்த உலகம் இப்ப இப்படி ஆயிருச்சே?

 

மருத்துவ சிகிச்சையும்

மருந்து-மாத்திர-தடுப்பூசியும்

மக்களுக்குக் கிடைக்க

மருத்துவ உலகமும் அறிவியல் உலகமும்

கொரொனாவுக்கு எதிரா ஒன்னு சேர்ந்து

களத்துல நின்னு உசுரக் கொடுத்துப் போராடுது

இப்படி உசுரக் கொடுத்துப் போராடுது!

எப்படி இருந்த உலகம் இப்ப இப்படி ஆயிருச்சே?

 

உதவும் குணம் கொண்டவங்க

தன்னார்வலருங்க தம்மால முடிஞ்சத

தகுதி தராதரம் பாக்காம

தவிக்கிற-தத்தளிக்கிற-தடுமாறும் மக்களுக்கு

தயங்காம செய்யுறாங்க உளமாற உதவுறாங்க

தல வணங்குது

இந்த உலகமே அவங்களத் தல வணங்குது!

எப்படி இருந்த உலகம் இப்ப இப்படி ஆயிருச்சே?

 

இன்னொரு பக்கம் …

இந்த இக்கட்டானச் சூழலை

இவங்களுக்குச் சாதகமாக்கி

இதுதான் சமயமுன்னு

 

இரக்கமில்லாத அரக்கர்கள்

மனிதநேயமில்லாத மிருகங்கள்

கருணையில்லாத கல்நெஞ்சக் காரர்கள்

பணத்தாச பிடிச்ச பேய்கள்

மகத்தான மருத்துவத்த வியாபாரமா செய்யும்

சில-பல மருத்துவ-வியாபாரிகள்

பொதுநல-அரசியல சுயநலத்-தொழிலா செய்யும்

சில-பல அரசியல்-வியாதிகள்

பொய்யப் புரட்டச் சொல்லி

பொதுமக்களைப் பயமுறுத்தி

லாவகமா லட்ச லட்சமா

லகரங்களைக் கரக்குறாங்க

இப்படிப் பல ரகமா பகல்-கொள்ளை அடிக்குறாங்க!

 

கொரோனாவும்

குற்றம் புரியும் இவங்களுக்கு

குடை பிடிக்குது

இப்படி நல்லாவே குடை பிடிக்குது!

 

கொடுமை கொடுமைன்னு

கோவிலுக்கு போகலாம்னு பார்த்தா

கோவிலும் மூடிக் கிடக்குது

கோவிலில் தெய்வமும் வாடிக் கிடக்குது!

எப்படி இருந்த உலகம் இப்ப இப்படி ஆயிருச்சே?

 

ஊரடங்கால

உலகம் அடங்கி-முடங்கிப் போயிடுச்சோ இல்லையோ?

உசுருங்க பல அடங்கி-முடங்கி மாண்டும் போயிடுச்சே!

ஆணவம் புடிச்சக் கொரோனா அடியோடு அழியனும் – அதுக்கு

அறிவியலும்-மருத்துவமும் அதனுடன் போராடி ஜெயிக்கனும்!

எப்படி இருந்த உலகம் இப்ப இப்படி ஆயிருச்சே?

கவிஞர் ராசி. பாஸ்கர்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.