எப்போது கவிதை வரும்?

எப்போது கவிதை வரும்?
எல்லாமே நன்றாக இருந்தாலா?
உன்னதம் உச்சத்தில் இருந்தாலா?
இல்லை! இல்லை!
உன்னுள்ளே உயிரிருந்தால்
உன்னுயிர் உன்னுடன்
உருப்படியாய் சண்டையிட்டால்
உன்னுள்ளே அசாத்திய தைரியமிருந்தால்
கவிதை வரும்!

எது நடந்திட்டாலும்
‘எனக்கென்ன’
என்றில்லாமல்
ஏதோ ஒன்று உன்னைத் தூண்டினால்
எமனையும் எதிர்த்து உதைக்கின்ற
ஏதேச்சையான துணிவு வரும்!
ஏதோ வந்து விட்டேம் என்றின்றி
ஏதாவது செய்தாவது
அல்லது எல்லாம் வல்ல
இறைவனைப் பாடியாவது இந்த
ஏனோ தானோ வாழ்வை
எதிர்த்து மாற்ற
எதிர் நீச்சல் போட்டால்
கவிதை வரும்!

மனித உணர்வின்
மாண்பு புண்படும் போதும்
மாசற்ற குழந்தையுள்ளம்
கூலித் தொழிலாளியாய்க்
குறுகும் போதும்
குடியுயர்ந்த நாட்டிலே
குடியுரிமை நீங்கி
குடிமக்கள் பலரைக்
குலை குலையாய்ப்
பிய்த்தெரியும் போதும்
‘கொலை வாளினை எடுடா’
எனக் கவிதை வரும்!

சிறு குழந்தையாய்
உன்னோடு தொட்டுப் பழகி
சிறுசிறு சண்டையிட்டவள்
விடலைப் பருவமடையும் போது
உன்னைக் கண்டால்
வரும் ஒரு கூச்சம்!
அந்த அழகியலின்
அற்புதத்தை புரிந்து கொடண்டால்
அன்பாய்க் கவிதை வரும்!

நட்பாய் அறிமுகமானது
நாட்கள் பல கடந்து
இவன்தான் என்னவன்
இனி வாழ்ந்திடாலாம்
அணைத்திடலாம்
என்றே காதலிலும்
கவிதை வரும்!

அதோடு அவனே
உற்ற துணைய் ஆனப் பின்னே
காமம் புரிந்து
சண்டையுற்று
கசப்பில்லா இல்வாழ்வு
கயமையின்றி வாழ்ந்திட்டால்
கவிதை வரும்!

காமமுற்ற கணவன்
கடுஞ்சொல்லால்
கடுப்பாகி பிரிந்திட்டாலும்
இரண்டும் ஒன்றுதான்
என்றேங்கி
வருவானே எனக்
காத்திருந்தால்
கவிதை வரும்!

உலகத்தை
உலுக்கிட்ட
உருக்கிட்ட
உருவாக்கிட்ட
உயர் போராட்டங்கள்
உள்ளுர புரிந்து கொண்டால்
பிரஞ்சுப் புரட்சி முதல்
இரஷ்யப் செம்புரட்சி ஊடாக
செஞ்சீனப் புரட்சி வரை
உலகத்தை சிறந்த
உறைவாக
முன்னிலும் சிறந்த
உறைவாக மாற்றிட்ட
புரட்சிகளைப் புரிந்து கொண்டால்
கவிதை வரும்!

உன்னத உலகம்
உள்ளது உனக்கென்றே
உயர் பொதுவுடைமை எல்லாமென
உயர் புதிய கொள்கை வகுத்திட்ட
மார்க்சை புரிந்து கொண்டால்
கவிதை வரும்!

புரையோடிருந்த சீனத்தை
சிறம் கொண்டு எழுப்பிய
செஞ்சீன மாவோவின்
நெடும்பயணம் அறிந்திருந்தால்
அப்பயணம் புரிந்து கொண்டால்
கவிதை வரும்!

‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்றே
வரலாற்றை விடுதலை செய்த
பிடல் காஸ்ட்ரோவை
அவனது புரட்சித் தோழன்
சேவை
புரட்சியோடு புரிந்து கொண்டால்
புதுக்கவிதை வரும்!

சாதாரண‌ வக்கீல்கள்
மோகன்தாஸ் காந்தியும் நெல்சன் மண்டேலாவும்
மாண்பு மிக்க மாமனிதர்களானதும்
துப்பாக்கியை தூசியாக்கி
துர்பாக்கிய வன்முறை தள்ளி
அந்த வ‌லுவான சாம்ராஞ்யங்களை
சரித்த கதை தெரிந்து கொண்டால்
கட்டாயம் கவிதை வரும்!

வரலாறு சாதாரண
மனிதர்கள் படைப்பதன்று
மாமனிதர்கள் விதைப்பதென்பதனை
உடைத்து
சாதரண மனிதன்
அசாதரண செயல் செய்து
அவதார புருஷனாய் அவதரித்தால்
கவிதை வரும்!

உள்ளக் கிளர்ச்சியில்
உளமார சிரித்திட்டாலும்
உணர்வுடன் காரணமின்றி
உள்ளே துக்கம் அடைத்திட்டால்
கவிதை வரும்!

ஊரே உன்னை எதிர்த்திட்டாலும்
ஓடி ஒளியாமல்
ஓங்கியே நின்று நீ நியாயம் கேட்டிட்டால்
உயரே நின்று உன் குரல் ஒளித்திட்டால்
உனக்குள்ளே ஒரு கவிதை வரும்!

ஏழ்மையில் வறுமையில் உழன்றாலும்
போராடிப் போராடி
ஒரு வேலை உணவு பெற்றிட்டால்
பெற்றிட்டால்
அற்புதக் கவிதை வரும்!

மக்கள் மதித்திட்ட
மாண்புமிகு தலைவன்
மாண்பான பாதை காட்டிட்ட
மாபெரும் தலைவன்
மறைந்திட்டால்
மறக்க முடியாத
துக்கம் தொண்டையை
அடைத்திட்டால்
தூய‌ கவிதை வரும்!

பாரதியோடு அவனது தாசனையும்
நல்ல கண்ணதாசனையும்
வியக்க வைக்கும் வாலியையும்
புலமைப்பித்தனையும்
முத்துவான வைரமுத்துவையும்
முத்துகுமாரையும்
புதிய கபிலனையும்
புத்தி ஊன்றி படித்திட்டால்
கவிதை வரும்
நல்ல கவிதை படித்திட்டால்
நல்ல கவிதை எழுத வரும்!

அழகியலை உணர்ந்திட்டால்
அருகில் நடப்பவைகள்
அருகியதாயிருந்தாலும்
அதனிலே அழகியலைக் கண்டால்
கவிதை வரும்!

அழுகின்ற குழந்தை முகத்திலும்
அது சிரிக்கின்ற சின்ன வண்ணத்திலும்
நீ ஒரு உன்னதம் கண்டிட்டால்
கட்டாயம் கவிதை வரும்!

‘நீ அழுதால் நீ அழைத்தால்
மற்றவர்க்கு வேண்டுமானால்
செவிக்கு கேட்கலாம்
எனக்கு வயிற்றுக்கு கேட்கிறது’
என்கின்ற தாயின்
கட்டில்லா பாசத்தின்
உள்ளுணர்வைப் புரிந்து கொண்டால்
கட்டாயம் கவிதை வரும்!

Dr. இராமானுஜம் மேகநாதன்
பேராசிரியர் (மொழிக்கல்வி)
மொழிக் கல்வித் துறை
தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்
புதுதில்லி 110016
கைபேசி: 09968651815
மின்னஞ்சல்: rama_meganathan@yahoo.com

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.