எம்.எஸ்.சுப்புலட்சுமி

எம்.எஸ்.சுப்புலட்சுமி கர்நாடக இசை உலகின் முடிசூடா ராணியாக உள்ளார். தனது தேன் மதுர பக்தி ரசம் சொட்டும் குரலால் மக்களைக் கவர்ந்தவர். கர்நாடக இசையின் அருஞ்சொற் பொருள் என்றே இவரைக் கூறலாம். இந்தியாவின் தொன்மையான கர்நாடக இசையை உலகமெங்கும் உணரச் செய்த பெருமை இவரையே சாரும்.

நாட்டு விடுதலைக்கான பாரதியார் பாடல்களை விடுதலை போராட்டத்தின் போது பாடியவர். இன்றைய தினங்களில் கூட பெரும்பாலான வீடுகளிலும், தொலைகாட்சி மற்றும் வானொலிகளிலும் பெருமாளின் சுப்ரபாதம் இவரது குரலிலேயே ஒலிக்கிறது.

உலகின் பல நாடுகளுக்கு கலாச்சாரத் தூதராகச் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தி இந்திய இசையை உலகில் பரவச் செய்தார். ஐக்கிய நாடுகள் சபையில் பாடிய பெருமையும் இவரைச் சாரும்.

மகாத்மா காந்தி முதல் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வரை என அன்றைய தலைமுறையிலிருந்து இன்றைய தலைமுறை வரை உள்ளவர்களை தனது ரசிகர்களாகக் கொண்டவர்.

இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா, ஆசியாவின் நோபல் பரிசு என வர்ணிக்கப்படும் மகசேசே உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி, வங்காளம் என பல மொழிகளில் பாடியுள்ளார். இவரின் வளர்ச்சி மற்றும் சாதனைகளை பார்ப்போம்.

 

பிறப்பு மற்றும் இளமைக்காலம்

எம்.எஸ்.சுப்புலட்சமி என்பதன் விரிவாக்கம் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி ஆகும். இவர் 16.09.1916ல் மதுரையில் சண்முகவடிவு அம்மாள் என்பவருக்குப் பிறந்தார். இவரது தாயார் சண்முகவடிவு அம்மாள் வீணை இசைக் கலைஞர் ஆவார். இவரது பாட்டி அக்கம்மாள் பிடில் வாத்திய கலைஞர். இவர் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இவருக்கு சக்திவேல் என்ற சகோதரரும், வடிவாம்பாள் என்ற சகோதரியும் இருந்தனர். வீட்டில் இவரை குஞ்சம்மாள் என்று அழைத்தனர். சகோதரர் சக்திவேல் மிருதங்க இசைக் கலைஞர். சகோதரி வடிவாம்பாள் வீணை இசைக் கலைஞர்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி வாய்ப்பாட்டுக் கலைஞர் ஆவார். இவர் வாய்ப்பாட்டுடன், வீணை மீட்டவும், பாரநாட்டியம் ஆடவும் கற்றுக் கொண்டார். இவரின் முறையான கல்வி 5-ம் வகுப்புடனே முடிவுற்றது. இவர் சிறு வயது முதலே இசையை ஆர்வமுடன் கற்றார்.

இவர் தனது சிறுவயதில் கர்நாடக இசையை செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயரிடமும், இந்துஸ்தான் இசையை பண்டிட் நாராணயராவ் வியாஸ் என்பவரிடமும் கற்றார்.

 

அரங்கேற்றம்

எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு 9 வயதாக இருக்கும் போது சண்முக வடிவு அம்மாள் மதுரை சேதுபதி பள்ளியில் வீணைக் கச்சேரி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று வீணை வாசிப்பை நிறுத்திவிட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி எம்.எஸ் ஐக் கூப்பிட்டு குஞ்சம்மாள் பாடு என்றார்.

தாயார் சொன்னவுடன் ஹிந்துஸ்தாதனி மெட்டில் “ஆனந்த ஜா” என்ற மராட்டிய பாடலை உச்சஸ்தானியில் பாடினார். சபையோர்களின் பாராட்டுகளைப் பெற்றார். இதுவே அவரது முதல் அரங்கேற்றமாக அமைந்தது.

1926ல் வெளியிடப்பட்ட எல்.பி.இசைத்தட்டானது மரகத வடிவம் செங்கதிர் வேலும் என்றும் பாடலை எம்.எஸ் பாட அம்மா சண்முகவடிவு வீணை மீட்ட வெளியிடப்பட்டது. அதில் 10 வயது சிறுமி பாடிய பாடல் என விளம்பரப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆசிரியர்கள்

அம்மா சண்முக வடிவுதான் முதல் இசை ஆசிரியர். அவரைத் தொடர்ந்து சேத்தூர் சுந்தரேச பட்டர், செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர், கடையநல்லூர் வெங்கட்ராமன் ஆகியோரிடமும் இசையைக் கற்றார்.

முத்துச்சாமி தீட்சிதரின் கீர்த்தனைகளை உச்சநீதி மன்ற நீதிபதி டி.எல்.வெங்கட்ராம ஐயரிடம் கற்றார். பாபநாசம் சிவன், மைசூர் வாசுதேவாச்சாரியர் ஆகியோர் தங்கள் இயற்றிய பாடல்களை தாங்களே எம்.எஸ் க்கு கற்றுக் கொடுத்தனர்.

 

திரைப்படத்தில் எம்.எஸ்

எம்.எஸ். குரல் வளத்தால் ஈர்க்கப்பட்ட பிரபல இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் சேவாசதனம் என்னும் திரைப்படத்தில் முதன் முதலில் பாடி நடித்தார். 1938ல் இப்படம் வெளியானது. சிறுமியர்களை வயதானவர்கள் மணந்து கொள்வதால் ஏற்படும் சிக்கல்களை விளக்குவதாக இருந்தது.

1940ல் சகுந்தலை என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படம் மிகப் பெரிய வெற்றியை தந்தது. இப்படத்தல் எம்.எஸ், கோகில கான இசைவாணி என விளம்பரப்படுத்தப்பட்டார்.

பின்னர் 1941ல் சாவித்திரி படத்தில் நாரதராக நடிப்பதற்கு எம்.எஸ் க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ஆண் வேடத்தில் நடிக்க முதலில் மறுத்து விட்டார். பின் தன் கணவன் சதாசிவம் கல்கி பத்திரிக்கை ஆரம்பிப்பதற்காக நாரதராக நடித்தார். இது அந்நாளில் பரபரப்பாக பேசப்பட்டது.

1945ல் மீரா என்ற படத்தில் மீராவாக நடித்தார். இதுவே எம்.ஜி.ஆரும்,எம்.எஸ்-ம் சேர்ந்து நடித்த திரைப்படமாகும். இப்படத்தில் வரும் காற்றினிலே வரும் கீதம் பாடல் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. படத்திற்கான பாடல்களை கல்கி கிருஷ்ணமூர்த்தியும், பாடல்களை பாபநாசம் சிவனும் எழுதினர்.

மீரா இந்தியில் மறு பதிப்பு செய்யப்பட்டது. இப்படத்தில் எம்.எஸ்.இந்தியில் பாடினார். இந்தியில் மீரா படத்தைப் பார்த்த நேரு “இசை ராணிக்கு” முன்னால் நான் சாதாரண பிரதமர் என்று கூறினார். சரோஜினி நாயுடு, மவுண்ட்பேட்டன் பிரபு ஆகியோரும் பக்த மீராவைப் பாராட்டினர்.

சரோஜினி நாயுடு இவரை “இந்தியாவின் நைட்டிங்கேல்” என்று அழைத்தார். எம்.எஸ் சேவாசதனம், சகுந்தலை, சாவித்திரி, மீரா ஆகிய 4 படங்களில் மட்டும் நடித்தார்.

 

திருமணம்

1940ல் சதாசிவம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மும்பைக்கு கச்சேரி செய்யச் செல்லும் போது சதாசிவம் அறிமுகம் ஆனார். பின் எம்.எஸ்.முதல் படமான சேவாசதனம் படத்திற்கு விமர்சனம் எழுத கல்கி கிருஷ்ண மூர்த்தியை அழைத்துச் சென்றார். இவ்வாறு ஏற்பட்ட பழக்கம் திருமணத்தில் முடிந்தது.

திருமணத்திற்குப் பின் நடிப்பா? இசையா? என்ற கேள்விக்கு இசை என்று முடிவு செய்தனர் சதாசிவமும், எம்.எஸ்-ம். எனினும் சகுந்தலை படத்தில் நாரதராக வேடமிட்டு 40,000 ஊதியமாகப் பெற்று கல்கி இதழ் தொடங்க உதவினார்.

 

சேவைகள்

ராஜாஜி, டி.கே.சிதம்பரநாத முதலியார், ராஜா சர் அண்ணாமலை செட்டியர், கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.சே.சண்முகம் செட்டியர் ஆகியோர் ஆரம்பித்த தமிழ் இசை இயக்கத்திற்கு பக்க பலமாக இருந்தார். பாரதியார், சுத்தானந்த பாரதியார், வள்ளலார் பாடல்களைப் பாடினார்.

1944ல் நான்கு இசை நிகழ்ச்சிகளை நடத்தி 2 கோடி நிதி திரட்டி காந்தியடிகளிடம் “கஸ்தூரிபாய் அறக்கட்டளைக்கு” அளித்தார். அறிவியில் ஆராய்ச்சி கல்வி, மருத்துவம், மற்றும் சமயத் தொண்டு ஆகியவற்றிற்கு நிதி உதவி அளித்தார்.

 

ஐ.நா.வில் சுப்புலட்சுமி

23.10.1966ல் ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். 100க்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். உலக அமைதியை வலியுறுத்தி ராஜாஜி எழுதிய மே தி லார்ட் பர்கிவ் என்ற பாடலையும், சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் மைத்ரீம் பஜத உலக நன்மை பிரார்த்தனை ஸ்லோகத்தையும் பாடினார்.

மேலும் லண்டன், நியூயார்க், கனடா, கிழக்கு நாடுகள் ஆகியவற்றிலும் இசைக் கச்சேரி செய்துள்ளார். 1975ல் திருப்பதி தேவஸ்தானம் எம்.எஸ்.பாடிய வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தை ஒலிபரப்பியது. மேலும் ஆஸ்தான பாடகியாகவும் அங்கீகரித்தது.

பஜகோவிந்தம், சுப்ரபாதம், குறையொன்றும் இல்லை, ரகுபதிராகவ ராஜாராம், வைஷ்ணவ ஜனதே ஆகியவை எம்.எஸ். பாடியவற்றில் சிகரத்தை தொட்டவை. 1997ல் தனது கணவரின் மறைவுக்குப் பின் இசை நிகழ்ச்சிகள் எதையும் எம்.எஸ்.நடத்தவில்லை. எம்.எஸ்.12.12.2004 அன்று உடல் நலக்குறைவால் தனது 88 வயதில் காலமானார்.

 

விருதுகள்

1957ல் பத்மபூஷன், 1956ல் சங்கீத நாடக அகாதமி விருது, 1968 ல் சங்கீத கலாநிதி, 1970 இசைப் பேரறிஞர், 1974ல் மகசேசே, 1975 பத்மவிபூஷன், 1975 சங்கீத கலாசிகாமணி, 1990ல் இந்திராகாந்தி விருது 1998ல் பாரத ரத்னா, 2002ல் சென்னை மியூசிக் அகாடமி வாழ்நாள் சாதனையாளர் விருது, திருப்பதியில் எம்.எஸ்- க்கு வெண்கலச்சிலை வைக்கப்பட்டுள்ளது.

அன்பு, அமைதி, பக்தி, பொறுமை ஆகியவைகளைக் கொண்டு இந்திய பெண்களின் அடையாளமாகவும் இசை ரசிகர்களின் முடிசூடா ராணியாகவும் உள்ள எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களைப் போற்றுவோம்.

– வ.முனீஸ்வரன்