காலை மணி ஒன்பதரை.
இரண்டாவது டோஸ் காபிக்காக அடுப்பில் பாலை வைத்துவிட்டு, டபரா டம்ளரை எடுத்து சமையல் மேடையில் வைத்துவிட்டு, ஜீனி டப்பாவை கப்போர்டிலிருந்து எடுக்க முயன்ற சாவித்ரி மாமியின் அறுபத்தைந்து வயது உடல் தடுமாறியது.
தலை சுற்றுவதுபோல் இருந்தது. அழுதழுது ‘தலை’ வலிக்க வேறு செய்தது. எல்லாம் காலையில் கணவர் சாம்பசிவம் அறைந்த அறையாலும் அடித்த அடியாலும் விளைந்தவை.
இருபத்தைந்து வயதில் வாங்க ஆரம்பித்த அறையும் அடியும் இந்த அறுபத்தைந்து வயதிலும் மருமகள், மாப்பிள்ளை வந்தும் பேரன், பேத்திகள் எடுத்தும் இன்னும் நின்றபாடில்லை.
இருபத்து நான்கு வயதோடு சாவித்ரியின் சந்தோஷமும் சிரிப்புமான வாழ்க்கை முடிந்து போனது.
என்றைக்கு சாம்பசிவத்தின் கைகளால் தாலி கட்டிக் கொண்டாளோ அந்த நிமிடத்திலிருந்தே அவளின் சந்தோஷங்கள் அனைத்துமே தொலைந்துதான் போயின.
இடது கன்னம் ‘திகுதிகு’ என்று தீப்பிடித்து எரிவதுபோல் எரிந்தது. முதுகும் அப்படித்தான் வலியும் எரிச்சலுமாய் காந்தியது.
சமையல் மேடைக்கு அருகேயிருந்த ‘சிங்க்’கிலிருந்த குழாயைத் திறந்து தண்ணீரை வலது கையால் பிடித்துப் பிடித்து எரியும் கன்னத்தில் வைத்து வைத்து ஒற்றிக் கொண்டார். எரிச்சலுக்குக் கொஞ்சம் இதமாக இருந்தது.
ஆனால் நாற்பது வருடங்களாக அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் மனதை எதைக் கொண்டு அணைப்பது?
‘சுடுகாட்டிலோ, மின் மயானத்திலோ தன்னுடல் எரியும் போதுதான் எரியும் மனதின் எரிச்சல் அடங்கிப் போகுமோ?அந்த நாள் வருமோ? வருமென்றால் எப்போது வரும்?ஆண்டவனே அந்தநாளை எனக்கு விரைவில் கொடேன்’ என்று ஆண்டவனிடம் வேண்டிக் கொள்ளக்கூடப் பிடிக்கவில்லை சாவித்ரி மாமிக்கு. தனது எந்த வேண்டுதலைத் தான் ஆண்டவன் நிறைவேற்றித் தந்திருக்கிறான் இதுவரை?
சிறுவயது முதலே பண்பாடும் இறைபக்தியும் ஊட்டி வளர்க்கப்பட்ட தனக்கு ஆண்டவன் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை சுட்டெரிக்கும் பாலைவன வாழ்க்கையாயிருக்குமென சாவித்ரி கொஞ்சமும் நினைக்கவில்லை.
அரசாங்க உத்தியோகத்தில் இருந்த சாம்பசிவத்தோடு சாவித்ரிக்குத் திருமணம் நிச்சயமானபோது, “எம் பொண்ணு அதிஷ்டக்காரி. இருபத்துநாலு வயசுவரை காத்துண்டிருந்தாலும் கவர்மென்ட் உத்தியோகக்காரனுக்கு வாக்கப்படறா. அஞ்சு காசுன்னாலும் அரசாங்க உத்யோகமாச்சே! சும்மாவா” பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லிச் சொல்லி பெருமைப்பட்டார் சாவித்ரியின் அப்பா.
“சாவித்ரீ, ஒனக்கென்னடி! ஒன் வருங்கால புருஷனுக்கு கவர்ன்மெட்டு வேல” என்று தோழிகள் சற்று பொறாமையோடு கிண்டலடித்தபோது நிஜமாகவே தன்னை அதிஷ்டக்காரியாகத்தான் நினைத்துப் பெருமைபட்டுக் கொண்டாள் சாவித்ரி.
எல்லாம் சாம்பசிவம் தாலிகட்டிய நிமிடம் வரைதான்.
அன்று சாம்பசிவத்துக்கும் சாவித்ரிக்கும் திருமணம்.
சாவித்ரியின் கழுத்தில் சாம்பசிவம் தாலி கட்டியாகிவிட்டது.
“என்ன மாப்ள வந்தாரா? மாட்டுப்பொண் வந்தாளா?” என்று சம்மந்தி மாமிகள் இருவரும் வாயெல்லாம் பல்லாக ஒருவருக்கொருவர் கை கொடுத்துக் கொண்டு விசாரித்துக் கொள்ள மணமக்கள் இருவரும் புரோகிதரின் அறிவுரைப்படி பெற்றவர்களையும் வயதில் மூத்தவர்களையும் காலில் விழுந்து வணங்கி வாழ்த்து பெற்றனர்.
சாம்பசிவத்தின் அலுவலக சகவூழியர்கள் சிலர் சாம்பசிவத்துக்குக் கைகொடுத்து வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருந்த நேரம்.
திருமணத்திற்கு வந்திருந்த உறவுக்காரர்கள் வீட்டு ஏழெட்டு வயதிற்குட்பட்ட நான்கைந்து குழந்தைகள் அந்த வயதிற்கே உரிய உற்சாகத்தோடு ஒருவரையொருவர் துரத்தி ஓடிப்பிடித்து சின்ன அளவில் விளையாடிக் கொண்டிருக்க அதிலொரு சிறுவன் எதிர்பாராவிதத்தில் புதுமாப்பிள்ளை சாம்பசிவத்தின் மீது மோதிவிட்டான்.
அந்த மோதலில் சாம்பசிவத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் அவனின் இயற்கை குணமான முன்கோபம் அந்தக் கல்யாணக்கூட்டத்திலும் ‘இடம், பொருள், ஏவல்’ என்பதை எல்லாம் பொருட்படுத்தாமல் பீறிட்டு மேலே கிளம்பியது.
‘எந்த அளவு பண்பாடின்றி பலரும் நிறைந்திருக்கும் பொது இடத்தில் நடந்து கொள்கிறோம், அதுவும் தனது திருமண நிகழ்ச்சியில்’ என்று கொஞ்சமும் யோசிக்காமல், ‘தனது செயலால் எத்தகைய அவமானம் தனக்கும், தனது புத்தம்புது மனைவிக்கும், அவளின் குடும்பத்திற்கும், தனது குடும்பத்திற்கும் ஏற்படும்’ என்பதை சிறிதும் எண்ணிப் பார்க்காதவனாய் தன்மீது மோதிவிட்டு ஒட எத்தனித்த பையனை, “டேய்” என்று கத்திக் கொண்டே பிடித்து இழுத்தான்.
“நாற நாயே, கண்ணு அவிஞ்சு போச்சா, இப்பிடி மாடுமாதிரி வந்து மோதுற, தின்ன சோறு செரிக்கலையா, அல்பாயுசுல போக” முகத்தை கொடூரமாக வைத்துக் கொண்டு கத்திக் கொண்டே அந்தப் பையனின் முதுகில் ‘பளீர்பளீரெ’ன அடி வைத்தான். நாக்கைத் துருத்தி விரலை ஆட்டி கடுமையாக எச்சரித்தான்.
அருகில் நின்ற சாவித்ரிக்கு இவனின் செயல் பார்த்து மனது சுருண்டு போனது. அந்த இடமே ஸ்தம்பித்துப் போனது.
சாவித்ரியின் பெற்றோர், புதுமாப்பிள்ளை நடந்து கொண்ட விதம் பார்த்து விக்கித்துப் போயினர்.
‘இவ்வளவு முன்கோபியான ஒருவனோடு தன்மகள் எப்படி வாழப் போகிறாளோ?’ என்ற பயம் சாவித்ரியின் தாய் வயிற்றில் புளியைக் கரைத்தது.
கல்யாணத்துக்கு முன்பு வரை, “டீ, சாவித்ரீ நீ குடுத்து வெச்சவடி, ஒன் வருங்கால புருஷனுக்கு கவர்மென்ட்டு வேலைடி” என்று சற்று பொறாமையோடு அடிக்கடி கேலி செய்த தோழிகள் சாம்பசிவத்தின் முன் கோபத்தையும் அடாவடி செயலையும் பார்த்தனர்.
அதில் ஒருத்தி “பாவண்டி நம்ம சாவித்ரி, இவனோடு குடும்பம் நடத்தி எப்டி குப்பை கொட்டப் போறாளோ? ச்சீ..பொது எடத்துல, அதுவும் தன் கல்யாணத்துல வந்ருக்றவா அத்தனபேர் முன்னாடி இப்டியா கேவலமா இன்டீசன்ட்டா நடந்துக்கறது.
அய்யோம்மா, எனக்கு கல்யாணமே ஆகாட்டியும் பரவால்ல. இந்தமாரி ஒரு கொரங்கு புருஷனா வரவேண்டாம்ப்பா” என்று சொன்னாள்.
“அய்யோ! ஆமாண்டி, ஆமாண்டி” என்று வழிமொழிந்தார்கள் மற்ற தோழிகள்.
மாலையும் கழுத்தும் மனதில் பயமுமாய் கணவன் சாம்பசிவத்தோடு குடித்தனம் செய்ய வலது காலை வைத்து உள்ளே நுழைந்த சாவித்ரிக்கு அதன் பிறகு சிரிக்கவே தெரியாமல் போயிற்று.
எடுத்ததற்கெல்லாம் குறை, குற்றம். தொட்டதெற்கெல்லாம் கோபம், திட்டு, அடி, சந்தேகம், ‘எவரோடும் நட்புமில்லை, உறவுமில்லை’ என்ற போக்கு, ‘தான் எனும் ஈகோ’, பெண்களை ஜடப்பொருளாய்க் கருதும் திமிர்.’பெண்கள் அடிமைகள்’ என்று கருதும் ஆணாதிக்க அகங்காரம் என்ற அனைத்து குணங்களையும் கொண்டிருந்த சாம்ப சிவத்துடனான வாழ்க்கை சாவித்ரிக்கு நரகமாகிப் போனது.
மொத்தத்தில் சாம்பசிவத்தின் மனைவி என்ற பெயரில் அவனது அடிமையாகி வீட்டைவிட்டு கோயிலுக்குக்கூட செல்ல அனுமதிக்கப்படாத வீட்டுக் கைதியாய், கூண்டுக் கிளியாய் ஆகிப்போனாள் சாவித்ரி.
‘விதியிருந்தது வாக்கப்பட்டேன், பொறி இருந்தது பிள்ளை பெற்றேன்’ என்பது போல் ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள் பிறந்தன.
ஆனாலும் வாழ்க்கையில் மாற்றம் வரவேயில்லை. தந்தையால் தாய் படும் வேதனைகளைப் பார்த்தே வளர்ந்த பிள்ளைகள் தந்தையிடம் இருந்த பயமோ, பக்தியோ அப்பாவை எதிர்த்து ஒருவார்த்தையும் கேட்காமல் வளர்ந்தார்கள், படித்தார்கள், வேலை தேடிக்கொண்டு பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டு நகர்ந்து விட்டார்கள்.
கிட்டத்தட்ட நாற்பது வருட தாம்பத்திய வாழ்க்கையில் சாவித்ரி மாமிக்கு கிடைத்ததெல்லாம் கணவனிடமிருந்து பாசமோ நேசமோ மரியாதையோ இல்லை. திட்டும் அடியும் உதையும்தான்.
இப்போதெல்லாம் திட்டு, அடி, உதையெல்லாம் வாங்க முடியவில்லை மாமியால். ‘பொறுத்தது போதும்’ என்று பொங்கியெழத் தோன்றியது.
‘பேசாம அப்பவே டைவர்ஸ் வாங்கியிருக்கலாமோ!’ என்ற எண்ணம் அடிக்கடி தோன்றியது.
‘க்கூம் கிழிச்ச. வாங்கிட்டு எங்க போவ? ஒனக்கடுத்து இன்னும் மூணு தங்கைகள் கல்யாணத்துக்கு இருக்கறப்ப, நீ போன மச்சான் திரும்பி வந்தான்னு பொறந்தாத்துக்கு போய்?’ என்று மனம் இடிக்கும்.
‘அப்பிடில்லாம் ஒரு தைரியம் இருந்தா இத்தன வருஷமா அடிமையா அடங்கிக் கிடப்பியா? கூரையேறி கோழி புடிக்காதவன் வானமேறி வைகுந்தம் போனானாம்’ மனம் கூடுதலாய் அசிங்கப்படுத்தும்.
அடிக்கடி மாமியை அடிமனது அசிங்கப்படுத்த ‘சுர்’ரென்று தன்மீதே கோபம் வந்தது மாமிக்கு.
‘அதென்ன புள்ளை பெண்ணுக்குக் கல்யாணமாகி மாட்டுப்பெண், மாப்பிள்ளை வந்து, பேரன், பேத்திகள் எடுத்து, இன்னமும் புருஷங்காரன் கைநீட்டி அடிக்கிறான்.
வயசு அறுவத்தஞ்சாச்சு. ரோஷம், மானமில்லாம அடிய வாங்கிண்ருக்க, திருப்பி அடிப்பியா? என்னமோ பயந்து சாகர? மிஞ்சி மிஞ்சிப் போனா என்ன செஞ்சுடுவாப்ல, கழுத்த புடிச்சு வெளீல தள்ளுவார்.
தள்ளட்டும், அப்பவாவது ஒன் உரிமைய நெல நாட்டு. ஒம் புருஷனுக்கு அதிர்ச்சி வைத்தியம் குடு, சண்டி மாட்டுக்கு சூடு வக்கிறாப்புல.
அடி வாங்காத மாடு படியாது. மெல்ல மெல்ல அடிமனம் மாமியை தன் வயப்படுத்த ஆரம்பித்தது.
‘மனம் பிறழ ஆரம்பிக்கிறதா? தைரியம் மனதை ஆக்ரமிக்கிறதா?’ புரியவில்லை மாமிக்கு.
ஆனாலும் பஸ்டாண்டு, மளிகைக்கடை, ஜவுளிக்கடை, மருத்துவமனையென்று எந்தப் பொது இடத்திலும் அங்கிருக்கும் யாரிடமாவது அல்ப விஷயத்துக்கு வம்பிழுத்து சண்டை போடுவதும், பொது இடமென்றுகூடப் பார்க்காமல், ‘இவள் என் மனைவி, இவளுக்கும் மனசு, மானம், மரியாதை, சுயகௌரவம் என்பதெல்லாம் இருக்கும்’ என்று சிறிதும் எண்ணாமல் சுற்றிலும் இத்தனைபேர் நிற்க கட்டிய மனைவியை இப்படிப் பேசுகிறோமே என்று துளியும் நினைக்காமல் புழுத்த நாய்கூட குறுக்கே போக அசிங்கப்படும் அளவுக்குக் கேவலமாய்த் திட்டுவதும், கை ஓங்குவதும், பார்த்துப் பார்த்து, அனுபவித்து அனுபவித்து, அடிமனதில் கணவர் மீது வெறுப்பும் துவேஷமும் நீறுபூத்த நெருப்பாய் நாற்பது வருடமாய்க் கனன்று கொண்டுதான் இருந்தது.
இவற்றைச் சுமந்து சுமந்து வெறுப்பின் உச்சத்தில் தகித்துக் கொண்டிருந்த அடிமனம் கணவர் அடிக்கும் போதெல்லாம், ‘திருப்பிக் கொடு திருப்பிக் கொடு‘ என்று கூக்குரலிடும். கஷ்டப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வார் மாமி.
அன்றும் அப்படித்தான் சாம்பசிவம் காபி கேட்க, பாலை அடுப்பில் வைத்ததும் சிலிண்டர் தீர்ந்துவிட, புதிய சிலிண்டரை மாற்றிப் பாலைக் காய்ச்சி காபி கலந்து மேஜைமீது கொண்டு வைத்தார் மாமி.
“நா எப்ப காபி கேட்டேன். நீ எப்ப குடுக்குற?” என்று சத்தமாய் சாம்பசிவம் கேட்டார்.
வழக்கமாய் “அதுவந்து அதுவந்து” என்று பதில் சொல்ல பயந்து திணறுபவர் அடிமனதின் தூண்டுதலால், “நீங்க பாத்துண்டுதானே இருந்தேள். சிலிண்டர் தீந்துடுத்து. புதுச மாத்திதானே பால் காச்ச முடியும்? நேரமாச்சுண்ணு கத்தினா?” பதில் சொல்லிவிட்டரே தவிர, பயத்தால் வியர்த்துப் போனது மாமிக்கு.
அதிர்ந்து போனார் சாம்பசிவம் “என்னது! என்னது! என்ன கேட்ட?”
“என்ன கேட்டா! நீங்க பாத்துண்டுதானே இருந்தேள்னா!”
“என்னடி, புதுஸா இருக்கு? என்னை கேள்வியா கேக்கற? நக்கலா பண்ற!” பளீரென்று மாமியின் கன்னத்தில் ஓர் அறை வைத்தார்.
அதில் அமைதி அடையாதவராய் ‘சுளீர் சுளீரெ’ன முதுகில் இரண்டு, மூன்று முறை அடி வைத்தார்.
“ஏய், எதுத்துப் பேசற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா, தொலச்சுப்புடுவேன் தொலச்சு” விரலை ஆட்டி எச்சரித்தார்.
காபியைக் கையால் தள்ளிவிட்டுவிட்டு வாசல் கதவை ‘படீரெ’ன்று சப்தமாய் சாத்திவிட்டு வெளியே சென்றார்.
கண்ணாடியில் அறைவாங்கிய கன்னத்தைப் பார்த்தபோது கன்னம் வீங்கிப்போய் ஐந்து விரல்கள் பதிந்து சிவந்துபோய் கண்ணும்கூட கலங்கி சிவந்து கிடந்தது.
முதுகில் அடிவாங்கிய இடம் ஜாக்கெட்பட்டு உறுத்த, எரிச்சல் தாங்க முடியவில்லை. அடிமனம் கோபத்தில் புகைந்து தூபம்போட ஆரம்பித்தது.
வாசலில் கணவர் எதிர்வீட்டில் புல் செதுக்க வந்திருந்த வேலையாள் கோவிந்துவை வம்பிக்கிழுத்து கத்திக் கொண்டிருந்தது கேட்டது.
கணவர் சாம்பசிவம் கத்த ஆரம்பித்தால் சப்தம் மைக்செட் இல்லாமலேயே எட்டு ஊருக்குக் கேட்கும். அப்படி ஓர் காட்டுக்கத்தல் கத்துவார்.
‘குரலை உயர்த்திக் கத்தினால் நியாயத்தைப் பேசுபவரை ஜெயித்து விடலாம்’ என நம்புபவர். இப்போதும் கணவர் பக்கம் நியாயம் இருக்காது என்றே சாவித்ரி மாமி நினைத்தார்.
“தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனா ஆயிடுவானா? மம்புட்டி புடிச்சவனெல்லாம் வேல தெரிஞ்சவனா? கையில மம்புட்டி இருக்குங்கறதுனால இஷ்டத்துக்கு கன்னா பின்னான்னு வேல செய்வியா? புல்லு செதுக்க தானே வந்த? என்னவோ தென்னம்புள்ள வைக்கப் போறவன் மாதிரி பள்ளம் தோண்ற?”
“இல்லீங்கையா புல்ல மேலோட்டமா செதுக்கி எடுத்தா ரெண்டு தூத்தலு போட்டாலே மறுபடியும் மொளச்சுடும்னு தானுங்கையா வேரோட செதுக்கி எடுக்குறேன். செதுக்குன புல்லெயெல்லாம் ஒத்தாப்புல எடுத்து குமிச்சி நெருப்பு வெச்சுடுறேனுங்க. பள்ளத்தெல்லாம் நெரவி விட்டுடறேனுங்கையா” மிக பவ்யமாகத்தான் சொன்னான் கோவிந்து.
“பாரு, பாரு புல்லுல மாட்டியிருக்குற பாலிதீன் பையி, பேப்பரெல்லாம் காத்துல எங்கவீட்டு வாசலுக்கு வருது. பாத்து வேல செய்ய மாட்டியா? இந்த கர்மத்த எல்லாம் நான்தான் பொறுக்கிப் போடனுமா?”
“ஐயா, இல்லீங்கையா! அடிக்கிற காத்துல பறந்து வருதுங்கையா நா எடுத்துடறேன்கையா”
“காத்துல பறந்து எவ்வீட்டு வாசலுக்குதா வரணுமா?”
“ஐயா, காத்து எந்தப்பக்கம் நோக்கி வீசுதோ அந்தப் பக்கமாதானுங்களே குப்பயும் பறக்கும்”
“ஓ! நீ எனக்கு பாடம் நடத்துறயா? அத்தன பெரிய ஆளா நீ?”
“ஐயோ! ஐயோ அப்டீல்லாம் இல்லீங்க”
“என்னடா? கூலிக்கி மாரடிக்கிற கூலிக்கார பய நீ” சண்டைக்கு ஆள் கிடைத்த சாக்கில் குரலை உயர்த்திக் கத்த ஆரம்பித்தார் சாம்பசிவம்.
“என்ன சார்? நானும் பாக்குறேன் அப்பத்துலேந்து வேல செய்ய வந்த ஆள வேல செய்யவுடாம, எதுனாச்சும் சொல்லிக்கிட்டே இருக்கீங்க. நீங்களா அவுருக்கு சம்பளம் குடுக்கப் போறீங்க?” கோபமாய்க் கேட்டபடி கோவிந்துவை புல் செதுக்க நியமித்த வீட்டுக்காரர் வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தார்.
“ஆமா, ரொம்ப வேல தெரிஞ்ச ஆளு இவன். கையில மம்புட்டியும், தலைல முண்டாசும் இருந்துட்டா அசகாய சூரனாக்கும் வேலைல.
மாடு மேக்கிற பய, இவனயெல்லாம் வைக்கிற எடத்துல வைக்கணும்”
“ஐயா, கொஞ்சம் மரியாதியா பேசுங்க”
“ஏய்! ஒனக்கெல்லாம் என்னடா மரியாதை. எடுவுட்டு பயலே கை நீட்டி கூலிவாங்குற ஆளு நீ”
முடிந்தது கதை. சின்னதாய்ச் சேர்ந்த கூட்டம் பெரிசானது. ஒருவர்கூட சாம்பசிவத்துக்கு ஆதரவாய் அவர் பக்கம் நிற்கவில்லை. அந்தப் பகுதியில் அனைவருக்கும் அவர் குணம் தெரியும். மாமியைப் படுத்தும் பாடும் தெரியும்.
‘காள் காளெ’ன்று சத்தமாய்க் கத்திக் கொண்டிருந்தார் சாம்பசிவம்.
வாக்குவாதம் தொடங்கி சண்டையாய் மாறிய வரை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த மாமிக்கு ‘வாசலுக்குச் செல்வதா, வேண்டாமா?’ என்பது புரியவில்லை.
போனால் கணவர் “எனக்கு ஆதரவாய் நாலு வார்த்தை பேச மாட்டாயா? என்பார்.
வாசலுக்குப் போகாவிட்டால் “நெஞ்சழுத்தக்காரி ஒண்டியாளா கத்திண்ருக்கேன். என்னைக் கண்டவ கண்டபடி பேசறான். உள்ள ஒக்காந்துண்டு ஆனந்தமா கேட்டுண்ருக்கியா?” என்பார்.
கணவர்தான் நியாயமின்றிப் பேசுவார். அவருக்கு ஆதரவாய்ப் பேச மாமிக்குப் பிடிக்கவில்லை.
“ஏய்! வாடி வெளீல. ஒத்த ஆளா கத்தீண்டு கெடக்கேன். ஏதுடா ஆம்படையான கண்டவா கண்டபடி பேசறாளே. வந்து நியாயத்த எடுத்து சொல்வோம்னு இல்லாத. தட்டு வெச்சு சாப்ட ஆரம்பிச்சுட்டியா மூதேவி வாடி வெளீல”
பயந்தபடி வாசலை நோக்கி வேகமாய் நடந்தார் மாமி.
‘பாத்தியா பாத்தியா! வாசல்ல அத்தனபேர் இருக்கா .ஒன்ன மூதேவிங்றார். அதிகாரம் பண்ணி கத்தி கூப்டறார். நீயும் பயந்துண்டு ஓடற ‘அடிமனம் உசுப்பி விட்டது. ‘ஒனக்கு வெக்கம், மானம், ரோஷம், கௌரவம் ஒன்னுமே இல்லியா?’ சீண்டியது.
அடிமனத்திடம் வசமாய் சிக்கிக் கொண்டார் மாமி. கோபம் ‘சுர்’ரென உச்சந்தலைக்கு ஏறியது.
வேகத்தோடு வாசலுக்கு வந்த மாமியை “ஏய் சனியம் புடிச்சவளே, நாங்கூப்ட்டு எத்தன நாழியாச்சு? ஆடி அசஞ்சு வர. கூலிக்கு மாரடிக்கிற பய என்ன தெனாவெட்டா என்னைப் பாத்துக் கேள்வி கேக்கறான். ‘ஏண்டா நாயே, எம்புருஷனயாடா இப்பிடி பேசறன்னு நாக்கப் புடிங்கிக்கிறா மாதிரி நாலு கேள்வி கேக்காம அப்படியென்னடி உள்ள? கள்ள புருஷனா இருக்கான்? அங்கியே இருக்க” என்றபடி ஓங்கி அறைந்தார் மாமியை.
அதிர்ந்து போனார் மாமி.
அப்படியே அரண்டுபோய் அதிர்ச்சியோடு நின்றது கூட்டம்.
‘ஐயோ ஐயோ இதவிடக் கேவலம் வேற என்ன வேணும். ஊரே கூடி நிக்கறது. அத்தன பேருக்கும் எதிர்ல.’ அடிமனம் கத்திக் கதறி அடித்துக் கொண்டு அழுதது.
“அடப்பாவி மனுஷா! என்ன சொன்ன? என்ன சொன்ன? என்ன சொல்லி அறஞ்ச? நா ஒனக்கு அவ்வளவு கேவலமா போய்ட்டேனா?” அடி மனதின் தூண்டுதலாலும் அதுகொடுத்த தைரியத்தாலும் அடுத்த அறை கொடுக்கக் கையை ஓங்கிய கணவரின் கையை உறுதியாய்ப் பற்றி நிறுத்தினார் சாவித்ரி மாமி.
நாற்பது வருடமாய் அடிமனதில் கனன்று கொண்டிருந்த எரிமலை வெடித்துச் சிதறியது.
“த்தூ, நீயெல்லாம் ஒரு மனுஷனா? இத்தன பேர் பாக்க, கட்டின பொண்டாட்டிய கை நீட்டி அடிக்கிறயே. ஆம்பளங்கற திமிர்தானே? இன்னொரு முற வாழ்க்கைல அடிக்கக் கைய ஓங்கின நடக்குறதே வேற” வலது கை ஆட்காட்டி விரலை கணவரின் முகத்தருகே ஆட்டி எச்சரித்த மாமி, வாய் எச்சிலை முழுவதுமாய்த் திரட்டித் “த்தூ..” என்று சப்தத்தோடு தரையில் உமிழ்ந்துவிட்டு யூ-டர்ன் அடித்து வெகுகம்பீரமாய் வீட்டின் உட்புறம் நோக்கி நடந்தார்.
மனைவி ‘த்தூ’வென உமிழ்ந்த எச்சில் தன் முகத்தின் மீதே உமிழப்பட்டதாய் உணர்ந்தவர் போல் சட்டென முகத்தைத் தோள்மீது கிடந்த துண்டால் துடைத்துக் கொண்டார் சாம்பசிவம்.
கூட்டம் விக்கித்துப் போய் நின்றது.
நடந்த அனைத்தையும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்த கூட்டதிலிருந்த சில விடலைகள் மாமியின் செயலை ஆதரிப்பது போல் “விஷ்க்..விஷ்க்..”கென்று விசிலடித்தும் கைதட்டியும் ஆர்பரிக்க அவமானத்தால் தலைகுனிந்து நின்றார் சாம்பசிவம்.
பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.
சாது மிரண்டால் காடு கொள்ளாது.
துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டும்.
ஆயிரம் மேடைகள் போட்டு பெண்ணுரிமை பேசினாலும் நடப்பதென்னவோ ஆணாதிக்க சமுதாயம்தான். ஆனாலும் ஒட்டுமொத்தமாய் அனைத்து ஆண்களையும் இந்த வட்டத்திற்குள் கொண்டு வந்துவிட முடியாது.
பெரும்பாலான ஆண்கள் மனைவியை மதிக்கத் தெரிந்தவர்கள். இக்கதையின் நாயகன் சாம்பசிவம்போல் சில ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இவர்களைப் போன்ற ஆண்களால் மனதாலும் உடலாலும் அநுதினமும் காயப்படும் பெண்கள் தனது வேதனைகளை வெளியே சொல்ல முடியாமல் அடிமனதில் அடக்கி அடக்கி வைத்து வைத்து அதிகம் அழுத்தம் கொடுக்கப்படும் பொருள் வெடித்துச் சிதறுவதைப்போல ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்று மனநோயாளி ஆகிறார்கள் அல்லது எதிர்வினை ஆற்றுகிறார்கள்.
இனி சாவித்ரி மாமியின் மீதி வாழ்க்கையில் பூகம்பம் வெடிக்கலாம். ஆனால் இனி எதற்கும் அவர் பயப்படமாட்டார்; எதிர்வினையாற்றுவார்.
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்
கைபேசி: 9629313255
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!