எரிமலை வெடிப்பு

எரிமலை வெடிப்பு என்பது அழிவினை ஏற்படுத்தக்கூடிய ஓர் இயற்கைச் சீற்றம் ஆகும்.

எரிமலை வெடிக்கும்போது பூமிக்கு அடியிலிருந்து பாறைத்துகள்களும், அதிக வெப்பமுடைய நீரும், கூழ்ம நிலையிலுள்ள பாறைத்துகள்களும் அதிக அழுத்தம் மற்றும் அதிக வெப்பத்துடன் பூமியின் மேற்பரப்பில் வீசப்படுகின்றன.

இவற்றுடன் தீப்பிழம்பும், கரும்புகையும், கரியமில வாயும் சேர்ந்து வெளியிடப்படுகின்றன.

நாம் வாழும் பூமியின் மேற்பரப்பானது புவித்தட்டுகள் அல்லது புவியோடுகளால் ஆனது. இத்தட்டுகள் ஒன்றோடொன்று மோதுவதாலோ அல்லது விலகுவதாலோ ஏற்படும் உராய்வினால் பாறைகள் உருகி நெருப்புக்குழம்புகளாகின்றன.

இந்நெருப்புக்குழம்புகள் அழுத்தத்தின் காரணமாக அப்பகுதி புவியோட்டின் பலவீனமான பகுதியை உடைத்துக் கொண்டு பூமியின் மேற்பரப்பில் வழிந்தோடுகின்றன.

இந்த செயல் பல்லாண்டு காலங்களாக நிகழ்வதால் அவை நாளடைவில் மலைகளாக பரிணமித்து விடுகின்றன. இவற்றையே நாம் எரிமலை என்கிறோம்.

பொதுவாக எரிமலைகள், புவித்தட்டுகள் ஒன்றையொன்று நெருங்குகின்ற இடங்களிலும், விலகுகின்ற இடங்களிலும், புவியோடு நீண்டு செல்கின்ற அல்லது மெலிதடைகின்ற இடங்களிலும் காணப்படுகின்றன.

வடஅமெரிக்காவின் மேற்குக்கரை, தென்அமெரிக்காவின் மேற்குகரை, அலகாஸ்கா, ஜப்பான், இந்தோனேசியா, நியூசிலாந்து என பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளில் எரிமலைகள் உள்ளன. அதனால் இப்பகுதி பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறது.

இந்தோனேசியாவில் மட்டும் 150 எரிமலைகள் உள்ளன.
எரிமலைகளை அவற்றின் செயல்பாடுகளைக் கொண்டு உயிர்துடிப்புடையவை, உறங்குபவை, அழிந்தவை என மூன்று வகைகளகாகப் பிரிக்கப்படுகின்றன.

தற்காலத்திலும் மாக்மாவை வெளியேற்றுபவை உயிர்துடிப்புடையவை, வரலாற்று காலத்தில் மாக்மாவை வெளியேற்றி தற்போது அமைதியாக இருப்பவை உறங்குபவை. வரலாற்று காலத்திலும் உமிழாமல் இருந்தவை அழிந்தவை எனப்படுகின்றன.

எரிமலையின் ஆயுட்காலம் சில மாதங்களிலிருந்து சில மில்லியன் ஆண்டுகள் வரை இருக்கும். எரிமலைகளைப் பற்றிய ஆய்வு வல்கனோலஜி என்றழைக்கப்படுகிறது.

எரிமலை வெடிப்புகளை அவை வெடிப்பதற்கு முன் அவற்றிலிருந்து வெளிவரும் புகை, வாயுக்கள் வெளியேற்றம், மாக்மா வழிதல் மற்றும் லேசான அதிர்வுகள் மூலம் முன்னதாகவே அறிந்து கொள்ளலாம். எரிமலையின் சீற்றம் ஓய்ந்து ஆறி அடங்கும் நிலையை அப்பகுதியில் உள்ள வெப்பநீரூற்றுக்கள் மூலம் அறியலாம்.

எரிமலை வெடிப்பதினால் காடுகள் அழிக்கப்படுகின்றன. பனி உருகி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மனித குடியிருப்புகள் பாதிக்கப்படுகின்றன. எரிமலையிலிருந்து வெளியேறும் புகையினால் விமானப் போக்குவரத்து, அருகிலுள்ள வேளாண்மை நிலங்கள் மற்றும் இதரப் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன.

எரிமலை வெடிப்பின் போது ஏற்படும் புகை மற்றும் தூசி திரள்கள் பல கி.மீ உயரத்திற்கு சென்று காற்றுடன் கலந்து பல ஆண்டுகள் அங்கே தங்கிவிடுவதால் சூரிய கதிர்கள் பூமியை வந்தடைவதை தடைசெய்கின்றன. இதனால் காலநிலை குளிர்ச்சி அடைந்து விடுகிறது. இதனால் தட்பவெப்பநிலை பாதிப்படைகின்றது.

எரிமலை வெடிப்பினால் ஏற்படும் தூசி, புகை, சாம்பல் ஆகியவை அருகிலிருக்கும் மக்களின் உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

எரிமலை வெடிப்பினால் சில நன்மைகள் ஏற்படுகின்றன. எரிமலைப் பொருட்கள் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களாகவும் மற்றும் இரசாயனப் பொருட்களை உருவாக்கவும் பயன்படுகின்றன.

கற்குழம்பினால் உருவாக்கப்படும் பாறைகள், கட்டடங்கள், சாலைகள் அமைக்கப் பயன்படுகின்றன. சிதைவடைந்த எரிமலை துகளினால் மண் வளம் அதிகரிக்கிறது. எரிமலையிலிருந்து வெளியேறும் நீரோடை, வெப்ப நீர் ஊற்றானது புவி வெப்பசக்தியை தயாரிக்க பயன்படுகிறது.

நவம்பர் 13, 1985-ல் கொலம்பியாவில் நெவாடா டெல் ருச் பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் 40,000 மக்கள் இறந்தனர். அவ்வெடிப்பினால் அர்மேரோ நகரம் முழுவதும் புதையுண்டது.

ஏப்ரல் 14, 2010-ல் ஐஸ்லாந்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு மிகப்பரந்த அளவில் சாம்பலுடன் புகையைக் கக்கியதால் (பனிப் பாறையிலிருந்து வெளியேறிய கற்குளம்பினால்) 20-க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்கள் மூடப்பட்டன.

 

பேரிடர் தணித்தல்

எரிமலையால் மக்கள் உயிர் இழப்பது அரிதாக இருப்பினும் எரிமலை பகுதிகளுக்கு அப்பால் மக்கள் வசிக்க வேண்டும். அனைத்து வகையான போக்குவரத்துகளும் தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக எரிமலைப் பகுதிகளுக்கு அருகில் விமானப் போக்குவரத்து தவிர்க்கப்பட வேண்டும்.

எரிமலை வெடிப்புகளால் நிலநடுக்கம் ஏற்படலாம். ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பனிபடர்ந்த பகுதிகளில் எரிமலை வெடிப்பினால் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம். எனவே வெள்ளத் தடுப்புச் சுவர்கள் கட்டப்பட வேண்டும்.

எரிமலை பரவலைப் பற்றி அறிந்து கொள்ளப் பயன்படும் சாய்வு மாணி (Tilt meter) கருவியைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.