கொல்கத்தாவின் பேலூரில் அமைந்துள்ள இராமகிருஷ்ண மடத்தில் விஜயதசமி அன்று மக்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம்.
ஒருசமயம் விஜயதசமியில் லட்டு பிரசாதம் செய்வதற்காக பூந்திகள் தயாரிக்கப்பட்டு மலைக்குன்று போல் குவிக்கப்பட்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென எறும்புகள் பூந்தியின் இனிப்பு வாசத்திற்கு சாரை சாரையாக வரத் தொடங்கின. இதனைக் கண்ட எல்லோரும் திகைத்தனர்.
இன்றைய சூழ்நிலையில் ஏராளாமான மருந்துகளும், எறும்பு சாக்பீஸ் துண்டுகளும், எறும்பு பொடிகளும் அவை வரும் பாதையிலேயே பயன்படுத்தப்பட்டு எறும்புகள் கொல்லப்படுகின்றன.
ஆனால் அந்த காலகட்டத்தில் எறும்புகளைக் கொல்வதற்கு என்று பிரத்யோகமான மருந்துப் பொருட்களும் இல்லை. மேலும் எறும்புகளைக் கொல்வது என்பது வழக்கத்திலும் இல்லை.
மேலும் பூந்தி தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் இடம் இராமகிருஷ்ண பரமகம்சரின் மடம்.
ஆதலால் எறும்புகளைக் கொல்லவும் கூடாது. அதே நேரத்தில் பூந்திகளை லட்டுப் பிரசாதமாகவும் மாற்ற வேண்டும் என்றே எல்லோரும் எண்ணி பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தனர்.
எல்லோரும் பரபரப்பாக அங்குமிங்கும் ஓடுவதை கண்ட பரமகம்சர் “ஏன் எல்லோரும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு அங்கிருந்தவர் பூந்தியின் இனிப்பு வாசத்திற்கான எறும்புகளின் வரவு பற்றியும், இப்பிரச்சினை தீர்க்கும் வழி தெரியாமல் ஓடிக் கொண்டிருப்பதையும் கூறினார்.
அதனைக் கேட்டதும் இராமகிருஷ்ண பரமகம்சர் ஒருகூடை நிறைய சர்க்கரையை கொண்டு வரச் சொன்னார். அங்கிருந்தவர்கள் ஒருவருக்கும் பரமகம்சரின் கூற்று புரியவில்லை.
ஏற்கனவே இனிப்பு சுவையை விரும்பியே எறும்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இவர் மேலும் இனிப்பான சர்க்கரையை ஒருகூடை நிறைய கேட்கிறாரே என்று குழம்பினர்.
கூடை நிறைய சர்க்கரை வந்ததும் பரமகம்சர் பூந்தி மலையைச் சுற்றிலும் சர்க்கரையை வட்டமாகப் போட்டு சர்க்கரை வளையத்தை உருவாக்கச் சொன்னார். அங்கிருந்தவர்களும் பரமகம்சர் சொன்னவாறே செய்தனர்.
எறும்புகள் வெளி வட்டத்தில் இருந்த சர்க்கரையை மட்டுமே மொய்த்துவிட்டு திரும்பின. இதனால் பூந்தி மலைக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இதனைக் கண்டதும் பரமகம்சருக்கு அங்கிருந்தோர் நன்றியை தெரிவித்தனர்.
அவரோ ” பாவம். இந்த எறும்புகள். இவையும் மக்கள் போலவே மாறிவிட்டன” என்று சொல்லிச் சிரித்தார்.
பக்தர்கள் அவரைக் குழப்பத்துடன் பார்த்தனர். அவர் தொடர்ந்து சொன்னார்.
பூந்தி மலையை அடைந்தே தீருவது என்ற உயர்ந்த நெறியுடன் வந்த எறும்புகள், சர்க்கரை வட்டத்தினைப் பார்த்ததும், அதிலேயே திருப்தி அடைந்து திரும்பி விட்டன.
மனிதர்களும் அப்படித்தான் இருக்கின்றார்கள். அவர்கள் ஆன்மிகம், சமூக முன்னேற்றம் போன்ற உயர்ந்த லட்சியங்களை நோக்கிப் பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.
ஆனால் பணம், பதவி, புகழ் போன்ற அற்ப ஆசைகள் குறுக்கிட்டதும், அதனை மட்டும் அனுபவித்து விட்டுத் தங்களின் லட்சியங்களை அடையாமல் திரும்பி விடுகின்றனர்.
உயர்ந்த லட்சியங்களை அடைய விரும்புவோர் லட்சியத்தை நோக்கி செல்கையில், இடையில் குறுக்கிடும் அற்ப ஆசைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, தங்களின் பயணத்தை தொடர்ந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.” என்று கூறினார்.