எறும்பு சொன்ன பாடம் என்பது எல்லா மனிதருக்கும் ஏற்ற பாடம். அது என்ன என்று அறிய தொடர்ந்து படியுங்கள்
ஒரு அழகிய மலர்வனத்தில் எறும்பு ஏகாம்பரமும், வெட்டுக்கிளி வெள்ளியங்கிரியும் நண்பர்களாக வசித்து வந்தனர்.
அதில் எறும்பு ஏகாம்பரம் நல்ல பொறுப்பு மிக்கதாகவும் உழைப்பாளியாகவும் இருந்தது.
ஆனால் வெட்டுக்கிளி வெள்ளியங்கிரி வேலை ஏதும் செய்யாமல் இங்கும் அங்கும் பாடி திரிந்து விளையாடிக் கொண்டிருந்தது.
ஒருசமயம் வசந்தகாலம் நிகழ்ந்து கொண்டிருந்தது. எறும்பு ஏகாம்பரம் தினமும் தனக்குத் தேவையான உணவை எங்கிருந்தாலும் எடுத்து வந்து தனது இருப்பிடமான வளையில் சேமித்து வைத்துக் கொண்டிருந்தது.
அது தன்னுடைய நண்பனான வெட்டுக்கிளி வெள்ளியங்கிரியிடம் “நீயும் என்னைப் போல் ஒரு இருப்பிடத்தை அமைத்து உணவினை சேமித்து வை” என்று கூறியது.
அதற்கு வெட்டுக்கிளி வெள்ளியங்கிரி “நண்பா, இவ்வனத்தில் நமக்குத் தேவையான உணவுகள் இருக்கின்றன. ஆதலால் நாம் அவற்றை தினமும் தேடி உண்ணலாம். உணவினை சேமித்து ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்?” என்று எதிர் கேள்வி கேட்டது.
அதற்கு எறும்பு ஏகாம்பரம் “வெட்டுக்கிளி வெள்ளியங்கிரி தற்போது வசந்த காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆதலால் இப்போது உணவு எளிதில் கிடைக்கிறது.
ஆனால் அடுத்து மழைக்காலமும் குளிர்காலமும் வரப்போகிறது. அப்போது நமக்கு உணவு எளிதில் கிடைக்காது.
மேலும் அப்பருவங்களில் மழையும், குளிரும் நம்மை வெளியே செல்ல முடியாமல் தடுக்கும். ஆதலால் நீ உடனடியாக உனக்கான இருப்பிடத்தை அமைத்து உணவினை சேமித்து வை” என்று கூறியது.
எறும்பு ஏகாம்பரம் கூறியதை வெட்டுக்கிளி வெள்ளியங்கிரி காது கொடுத்து கேட்கவில்லை.
அது எறும்பு ஏகாம்பரத்திடம் “நண்பா, நான் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் உனக்குப் பொறாமை. அதனால் தான் இப்படி பேசுகிறாய். இனி உன்னோடு நான் சேர மாட்டேன். நான் என்வழியில் போகிறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டது.
நாட்கள் நகர்ந்தன. வசந்தகாலம் மாறி மழைக்காலம் வந்தது. காடு எங்கும் மழைப்பொழிவு ஏற்பட்டது. மழையால் எங்கும் செல்லாத நிலை ஏற்பட்டது. உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு உண்டானது.
எறும்பு ஏகாம்பரம் தன் வளையிலேயே தங்கி இருந்தது. அதற்குத் தேவையான உணவும் அதன் இருப்பிடத்திலேயே இருந்ததால் அவற்றை உண்டு மழைக்காலத்தைச் சிரமமின்றி கழித்தது.
ஆனால் வெட்டுக்கிளி வெள்ளியங்கிரி இருப்பிடம் இன்றி மழையில் வாடியது. உணவும் இல்லாமல் திண்டாடியது.பலநாட்கள் தொடர்ந்து உணவு இல்லாமல் உடல் பலவீனமாகிப் போனது.
அப்போதுதான் வெட்டுக்கிளி வெள்ளியங்கிரி ‘எனது நண்பனின் அறிவுரையை ஏற்காததால் எனக்கு இந்நிலை ஏற்பட்டது. என்னை இப்போது காப்பாற்ற யாரும் இல்லை’ என்று எண்ணி மடிந்தது.
உழைக்கின்ற காலத்தில் உழைத்தால் ஓய்வு காலத்தில் நம்மால் நிம்மதியாக ஓய்வு எடுக்க முடியும் என்பதை எறும்பு சொன்ன பாடம் என்ற இக்கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
தொகுப்பாளர் – வ.முனீஸ்வரன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!