எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி?

எலுமிச்சை ஊறுகாய் நம் ஊரில் பராம்பரியமாக செய்யக் கூடிய உணவு வகையாகும்.

இந்த ஊறுகாய் எல்லோர் வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டும் என்று எங்கள் பாட்டி சொல்லுவார்.

இந்த ஊறுகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கக் கூடிய ஒன்று. எனவே கிராமப்புறங்களில் இந்த ஊறுகாயை மொத்தமாக தயார் செய்து வைத்துக் கொள்வர்.

இனி சுவையான எலுமிச்சைஊறுகாய் தயார் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

எலுமிச்சை பழம் – 1 கிலோ

கல் உப்பு – 200 கிராம்

ஊறுகாய் மசால்

மிளகாய் வற்றல் – 150 கிராம்

பெருங்காயத் துண்டு – 2 பாக்கு அளவு

செய்முறை

எலுமிச்சையை நன்கு கழுவிக் கொள்ளவும்.

மிளகாய் வற்றலை வெயிலில் நன்கு காய வைத்து காம்பினை நீக்கிக் கொள்ளவும்.

 

எலுமிச்சை வேக வைக்கும் முன்பு
எலுமிச்சை வேக வைக்கும் முன்பு

 

ஒரு பாத்திரத்தில் எலுமிச்சைப் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வேக வைக்கவும்.

ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

 

எலுமிச்சை வேக வைத்த பின்பு
எலுமிச்சை வேக வைத்த பின்பு

 

எலுமிச்சை ஆறியவுடன் வெளியே எடுத்து அதனை சிறுசிறு துண்டுகளாக வெட்டவும்.

அவிந்த எலுமிச்சையை வெட்டும் போது வெளிவரும் எலுமிச்சைச் சாற்றினை சேகரித்துக் கொள்ளவும்.

காய்ந்த மிளகாய் வற்றல், பெருங்காயத் துண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு தூளாக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எலுமிச்சைத் துண்டுகள், வெட்டும் போது வெளியேறும் எலுமிச்சைச் சாறு, ஊறுகாய் மசால், கல் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

 

 

மசால் சேர்த்த பின்பு எலுமிச்சை
மசால் சேர்த்த பின்பு எலுமிச்சை

 

பின் ஊறுகாயை நன்கு கிளறி விடவும். சுவையான எலுமிச்சை ஊறுகாய் தயார். கல் உப்பு கரைவதற்கு இரண்டு வாரங்கள் ஆகும். அதன் பின் உண்டால் சுவையாக இருக்கும்.

 

எலுமிச்சை ஊறுகாய்
எலுமிச்சை ஊறுகாய்

 

இந்த ஊறுகாய் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். ஊறுகாயில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ளவும்.

ஊறுகாயை எடுக்க மரக்கரண்டியை உபயோகிக்கவும்.

இந்த ஊறுகாய் தயிர் சாதம், சாம்பார் சாதம் உள்ளிட்ட சாத வகைகள், சப்பாத்தி, பிரெட் போன்றவற்றுடன் சாப்பிட ஏற்றது.

குறிப்பு

இந்த ஊறுகாய்க்கு பழுத்த எலுமிச்சை பழங்களை உபயோகிக்கவும்.

எலுமிச்சை ஊறுகாய்க்கு கல் உப்பைப் பயன்படுத்தினால் ஊறுகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

ஜான்சிராணி வேலாயுதம்

2 Replies to “எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி?”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.