எலுமிச்சை

எலுமிச்சை உலகளவில் அதிக அளவு பயன்படுத்தக்கூடிய பழவகைகளில் ஒன்று. இப்பழமானது அப்படியே பயன்படுத்துவதைவிட பழச்சாறாகவே அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

இப்பழமானது புளிப்புச் சுவை மற்றும் தனிப்பட்ட மணத்துடன் சாறுநிறைந்து காணப்படுகிறது. சிட்ரஸ் வகைப்பழத்தினை சேர்ந்த எலுமிச்சை மற்ற சிட்ரஸ் பழங்களைவிட மிகவும் சிறிதாகவும், அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்தும் காணப்படுகிறது.

இப்பழம் மரவகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. எலுமிச்சை மரமானது வடகிழக்கு இந்தியாவில் உள்ள இமயமலை அடிவாரத்தைத் தாயகமாகக் கொண்டது. இமயமலை அடிவாரத்தில் இப்பழம் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கலாம் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இப்பழம் பரவியது.

எலுமிச்சை மரமானது  10-12 அடி உயரம்வரை படர்ந்து வளரும். இம்மரம் எப்பொழுதும் பசுமை நிறத்துடன் காணப்படுகிறது. இவை வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் நன்கு செழித்து வளரும்.

குளிர் மற்றும் பனி இம்மரத்தின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும். இத்தாவரத்தின் தண்டு மற்றும் கிளைப்பகுதிகளில் கூர்மையான தடித்த முட்கள் காணப்படுகின்றன.

நன்கு வளர்ந்தநிலையில் இத்தாவரத்தில் வெள்ளைநிறப் பூக்கள் பூக்கின்றன. பின் பச்சை நிறத்தில் காய்கள் காய்க்கின்றன. இக்காய்கள் பழுக்கும்போது மஞ்சள் நிறத்துடன் தனிப்பட்ட மணத்துடன் நீள்வட்ட வடிவில் காணப்படும்.

இப்பழங்கள் பொதுவாக 5-8 செமீ விட்டத்தில் 50-80 கிராம் எடையில் இருக்கும். ஒரு எலுமிச்சை மரத்தில் இருந்து ஓர் ஆண்டுக்கு சராசரியாக 225-275 கிலோகிராம் வரை பழங்கள் கிடைக்கின்றன.

இப்பழத்தின் கிருமிநாசினி தன்மையினால் அக்காலத்தில் மன்னர்களுக்கு இப்பழங்கள் பரிசாக வழங்கப்பட்டன. சர்வரோக நிவாரணியாகவும் இப்பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பழங்களில் இப்பழத்தின் சாற்றுடன் மட்டுமே இனிப்போ, உப்போ கலந்து உபயோகிக்கப்படுகிறது. இப்பழமானது ஆண்டுமுழுவதிலும் கிடைக்கிறது. எனினும் மே முதல் ஆகஸ்டு வரையிலும் அதிகளவு கிடைக்கிறது.

 

எலுமிச்சையில் உள்ள சத்துக்கள்

எலுமிச்சையில் விட்டமின்கள் சி, ஏ, இ, பி1 (தயமின்),பி2 (ரிபோஃப்ளோவின்), பி6 (பைரிடாக்ஸின்), பி5 (பான்தோனிக் அமிலம்), பி3(நியாசின்), போலேட்டுகள், பொட்டாசியம், கால்சியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்களும், கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் நார்ச்சத்துக்களும் காணப்படுகின்றன.

 

எலுமிச்சையின் மருத்துவப்பயன்கள்

செரிமானமின்னை மற்றும் மலச்சிக்கல் தீர

எலுமிச்சைச் சாறு செரிமானமின்னை மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றிற்கு சரியான தேர்வாகும். எலுமிச்சை சாற்றினை நம் உணவுப் பதார்த்தங்களுடன் (பால் பொருட்களைத் தவிர) சேர்த்துக் கொள்ளும்போது அது செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது.

அதிக அளவு உணவினை உட்கொள்ளும்போது லெமன் சோடாவினை குடித்தால் உணவு எளிதில் செரித்துவிடும். எனவேதான் பெரும்பாலான விருந்துகளின் முடிவில் எலுமிச்சை பழரசம் அருந்தப்படுகிறது.

தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினைக் கலந்து குடித்துவர மலச்சிக்கல் தீரும்.

 

உடல்சூட்டினைக் குறைக்க

இப்பழச்சாறு உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. இப்பழச்சாற்றினை அருந்துவதன் மூலம் தோல்எரிச்சல், வெப்ப நோய் தாக்குதல்கள் ஆகியவற்றிலிருந்து உடலினைப் பாதுகாக்கலாம்.

காய்ச்சலால் ஏற்படும் போது உண்டாகும் உடல் வெப்பத்தினை இப்பழச்சாற்றினை அருந்தி நிவாரணம் பெறலாம்.

 

பற்கள் பாதுகாப்பு

எலுமிச்சைபழச் சாற்றினை பற்களில் வலி உள்ள இடத்தில் தடவ வலி நீங்கும். பல்ஈறுகளில் இரத்தம் வடிவது நிற்க இப்பழச்சாற்றினை ஈறுகளில் தடவ வேண்டும். இப்பழச்சாற்றினை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க வாய்துர்நாற்றம் நீங்கும்.

 

சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு

இப்பழச்சாற்றினை நேரடியாக உச்சந்தலையில் தடவ பொடுகு, கேசம் உதிர்தல் போன்ற பிரச்சினைகள் நீங்கும். இப்பழச்சாற்றினை நேரடியாக கேசத்தில் தடவும்போது கேசமானது பொலிவு பெரும்.

இப்பழச்சாற்றினை வெயிலினால் சருமத்தில் பிரச்சினை ஏற்பட்ட இடத்தில் தடவ நிவாரணம் கிடைக்கும். தேனீக்கள் கொட்டி பாதிக்கப்பட்ட இடத்தில் இப்பழச்சாற்றினைத் தடவ அந்த இடம் குணமாகும்.

பருக்கள், அழற்சியினால் தோலில் ஏற்படும் காயங்களுக்கும் இப்பழச்சாறினைத் தடவி பொலிவான சருமத்தினைப் பெறலாம். உடலில் முழங்கைகள், கணுக்கால் பகுதிகளில் காணப்படும் தடிப்புகளில் இப்பழச்சாற்றினை தடவ அவை குணமாகும்.

 

உடல் எடையைக் குறைக்க

வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சைசாறு, தேன் கலந்து தொடர்ந்து அருந்திவர உடல் எடை குறையும்.

 

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற

இப்பழச்சாறானது உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றி கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது. காலரா, டைபாய்டு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் போது இப்பழச்சாற்றினை அருந்தும்போது நோய்கிருமிகள் உடலை விட்டு வெளியேற்றப்படுகின்றன.

 

நீர்கடுப்பு நீங்க, புத்துணர்வு பெற

இப்பழச்சாற்றில் நீர்கடுப்பினைச் சரிசெய்யும் எலக்ட்ரோலைட்டுகளான பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை உள்ளன.

எனவே உடலில் நீர்சத்து குறைந்து நீர்க்கடுப்பு ஏற்படும்போது எலுமிச்சை சாற்றுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு வாரம்வரை பருகிவர நீர்க்கடுப்பு சரியாகும்.

மேலும் இப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மனஅழுத்தத்தை நீக்கி புத்துணர்வு கிடைக்கச் செய்யும். எனவே சோர்வாக உணரும்போது இப்பழச்சாற்றினை அருந்தி புத்துணர்வு பெறலாம்.

 

பாதங்கள் புத்துணர்ச்சி பெற

எலுமிச்சையின் கிருமிநாசினிப் பண்பு மற்றும் அதன் மணம் ஆகியவை பாதங்கள் புத்துணர்ச்சி பெற உதவுகின்றன. வெதுவெதுப்பான நீரில் இப்பழச்சாறு மற்றும் சிறிதளவு உப்பினைச் சேர்த்து பாதங்களை அதில் சிறிது நேரம் ஊறவைத்து எடுத்தால் பாதங்கள் தளர்வு பெறுவதுடன் சதைகளும் புத்துணர்ச்சி பெறும்.

 

மூட்டு வலி மற்றும் சதை பிடிப்பு குணமாக

இப்பழச்சாற்றினை அருந்திவர மூட்டுவலி மற்றும் சதைப்பிடிப்பு குணமாகும்.

 

கல்லீரல் நன்கு செயல்பட

இப்பழச்சாறானது கல்லீரல் நன்கு செயல்படச் செய்து என்சைம்களைச் சுரக்க உதவுகிறது. மேலும் கல்லீரலில் இருந்து நஞ்சுப்பொருட்களை வெளியேற்றுவதிலும் உதவி புரிகிறது.

 

எலுமிச்சையைத் தேர்வு செய்யும் முறை

இப்பழமானது மரத்தில் பழுத்தப் பின்னே பறிக்கப்படுகிறது. காயாக பறித்தால் இப்பழம் மற்ற பழங்களைப் போல் பழுப்பதில்லை.

கடையில் இப்பழத்தினைத் தேர்வு செய்யும்போது பழம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் கனமானதாகவும் மேற்தோலில் வெடிப்புகள், காயங்கள் இன்றி கவர்ச்சியாகவும் இருக்க வேண்டும்.

பழத்தினை உள்ளங்கையில் வைத்து உருட்டும்போது எலுமிச்சை வாசனை வர வேண்டும். வெளிப்புறத்தோல் பச்சை கலந்த மஞ்சளில் இருந்தால் வாங்கக் கூடாது. வெளிப்புறத்தோல் சுருங்கி காயங்களுடன் இருந்தாலும் வாங்கக்கூடாது.

இப்பழத்தினை உபயோகிக்கும்போது நன்கு கழுவி குறுக்குவாக்கில் வெட்டி கையினாலோ, கருவியைக் கொண்டோ சாறு பிழியலாம். இப்பழத்தினை அறை வெப்பநிலையில் வைத்திருந்து ஒரு வாரம்வரை பயன்படுத்தலாம். பழத்தினை கவரில் போட்டு குளிர்பதனப் பெட்டியில் வைத்தும் உபயோகிக்கலாம்.

பழச்சாற்றினை பாட்டிலில் அடைத்து குளிர்பதனப் பெட்டியில் வைத்து ஒரு மாதம்வரை உபயோகிக்கலாம்.

 

எலுமிச்சை பற்றிய எச்சரிக்கை

அதிகஅளவு இப்பழச்சாற்றினை உண்ணும்போது பல்கூச்சம், வாய்ப்புண், வயிற்றில் புண் ஆகியவை ஏற்படக்கூடும். எனவே அளவோடு பயன்படுத்த வேண்டும்.

இப்பழமானது பழரசம், சாலட்டுகள், கேக்குகள், இனிப்பு வகைகள், ஊறுகாய் வகைகள் ஆகியவை தயார் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

சர்வரோக நிவாரணியாகவும், கிருமிநாசினியாகவும் மற்றும் அதிகப் பலன்களைத் தரும் எலுமிச்சையை அளவோடு பயன்படுத்தி வளமான வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.