‘எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ’ என்ற பாடல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய திருப்பாவையின் பதினைந்தாவது பாசுரம் ஆகும்.
இப்பாசுரம் தூங்கி எழுந்து வந்த பெண்ணிற்கும், அவளை எழுப்ப வந்த கூட்டத்தினருக்கும் இடையே எழுந்த உரையாடல் போல் அமைந்துள்ளது.
திருப்பாவை பாடல் 15
எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லோரும் போந்தாரோ போர்ந்தார் போர்ந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடாலோர் எம்பாவாய்
விளக்கம்
‘இளமையான கிளி போன்றவளே, என்ன இது? இவ்வளவு பெண்கள் எழுந்து வந்த பின்பும் நீ உறங்குகின்றாயே’ என்று துயில் எழுப்ப வந்தவர்கள் கூறினார்கள்.
அதற்கு உறங்கிய பெண் ‘பெண்களே, இப்போதே புறப்பட்டு விட்டேன். உள்ளம் சில் என்று உறையும்படி (கோபத்துடன்) அழைக்க வேண்டாம்.’ என்று கூறினாள்.
அதற்கு கூட்டத்தினர் ‘நீ பேசுவதில் வல்லவள். உன் கடுமையான சொற்களையும், வாயையும் நெடுநாட்களாக நாங்கள் அறிவோம்’ என்றனர்.
உறங்கிய அப்பெண் ‘இவ்வாறு பேசும் நீங்கள்தான் பேச்சில் வல்லவர்கள். நானே ஏமாற்றுக்காரியாக இருக்கிறேன். நீங்கள் வேண்டுவது யாது?’ என்று கேட்டாள்.
அதற்கு கூட்டத்தினர் ‘நீ விரைந்து எழுந்து வா. எங்களிடம் இல்லாத தனிச்சிறப்பு உனக்கு என்ன உள்ளது?.’ என்று வினவினர்.
அப்பெண் ‘எல்லோரும் வந்து விட்டனரா?’ என்று கேட்டாள். அதற்கு அவர்கள் ‘நீயே வந்து எல்லோரையும் எண்ணிப் பார்த்துக் கொள்.’ என்றனர்.
அவள் அவர்களிடம் ‘என்னை எதற்காக அழைத்தீர்கள்’ என்று கேட்டாள்.
அவர்கள் ‘குவாலயபீடம் என்ற யானையைக் கொன்றவனும் கம்சன் முதலான பகைவர்களின் மிடுக்கினை அழித்தவனுமாகிய மாயனான கண்ணனைப் பாடுவதற்காகத்தான் அழைக்கின்றோம்.’ என்று கூறினர்.
எந்த ஒரு செயலையும் நாம் மனம் விரும்பி, விளையாட்டு போல் செய்தால் அது நமக்கு மகிழ்ச்சியைத் தரும்.
ஆன்மிகத்திலும் அது போலவே, நாம் இறைவனை வணங்குவதையும், இறை வணக்கத்திற்குரிய சடங்குகளையும் மகிழ்வாகவே செய்ய வேண்டும். அதைத் தான் இந்தப் பாடல் உணர்த்துகின்றது.
சிறு பெண்கள் விளையாட்டாகப் பேசிக் கொண்டு, தங்கள் தோழியை உடன் அழைத்துச் செல்வது என்பது ஒரு குறியீடு.
ஆன்மிகத்தில் உயர்ந்தவர்கள், மற்றவர்களை இடம் பொருள் உணர்ந்து, அவர்களுக்கு ஏற்றவாறு பேசி, ஆன்மிகப் பயணத்தில் அவர்களையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும்.
உண்மையான ஆன்மிக முன்னேற்றம், அனைவரையும் அரவணைத்துச் செல்வதுதான்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!