எல்லோருக்கும் பெருமை உண்டு

எல்லோருக்கும் பெருமை உண்டு என்ற கதை உலகில் உள்ள எல்லோருக்கும் ஏதேனும் ஒரு சிறப்பு உண்டு என்பதை வலியுறுத்துகின்றது.

ஆதலால் யாரும் யாரையும் சிறுமையாகக் கருதக் கூடாது.

கதையைத்  தொடர்ந்து படியுங்கள்.

ஆதனூர் என்ற ஊரில் வயதான பாட்டி ஒருவர் வசித்து வந்தார். அவர் ஊருக்கு வெளியே சற்று தொலைவில் குடிசையில் வசித்து வந்தார்.

அவர் தன்னுடைய வீட்டுக்குத் தேவையான தண்ணீரை ஊருக்குள் இருந்து இருபானைகளில் சேகரித்து எடுத்துக் கொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அவர் வைத்திருந்த பானைகளில் ஒன்று பழையதாகையால் பானையின் அடிப்பரப்பில் இருந்து சற்று உயரத்தில் ஓட்டை விழுந்தது.

ஆதலால் பாட்டி நீரினை ஓட்டைப் பானையில் சேகரித்துக் கொண்டு வீட்டிற்கு வரும்போது பானையின் கொள்ளவில் கால்பகுதிதான் இருக்கும். ஆனாலும் பாட்டி ஓட்டைப் பானையை கொண்டு தினமும் தண்ணீர் எடுத்து வருவார்.

ஒருநாள் பாட்டி தண்ணீர் எடுக்கப் பயன்படுத்தும் பானைகளில் நல்ல பானை ஓட்டைப் பானையைப் பார்த்து “உன்னால் நம் பாட்டிக்கு தொந்தரவு தான்.

என்னைப் பார் என்னில் நிரப்பப்டும் நீரினை முழுவதுமாக வீட்டிற்குக் கொண்டு வந்து விடுகிறேன். நீயோ உன்னுடைய ஓட்டையின் மூலம் தண்ணீரை வீணாக்கி பாட்டியை துன்பப்படுத்துகிறாய்” என்று கூறி ஏளனமாகச் சிரித்தது.

இதனைக் கேட்டதும் ஓட்டைப் பானை “நானும் உன்னைப் போல் இளமையில் நன்றாகத்தான் பாட்டிக்கு உழைத்தேன்.

எனக்கு வயதாகி விட்டதால் ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. அதற்கு நான் என்ன செய்வது?” என்று கூறி வருத்தப்பட்டது.

பானைகளின் உரையாடலைக் கேட்டதும் பாட்டி ஓட்டைப் பானையிடம் “நீ கவலை கொள்ளாதே. உன்னிடம் உள்ள ஓட்டையிலிருந்து ஒழுகும் நீர் சிந்தும் இடங்களில் எல்லாம் சின்னஞ்சிறிய பூக்களின் விதைகளைப் போட்டு வைத்தேன்.

உன்னிடம் இருந்து கிடைக்கும் நீரினால் அவ்விதைகள் முளைத்து தற்போது பூத்துக் குலுங்குகின்றன. நீ அதனைக் கவனித்தது இல்லையா?. இனியும் நீ உன்னை உபயோகமற்றவனாகக் கருதாதே” என்று கூறினார்.

அதனைக் கேட்டதும் ஓட்டைப்பானை தன்னுடைய தாழ்வான எண்ணத்தை மாற்றிக் கொண்டது.

பாட்டி தண்ணீர் எடுக்கச் செல்லும் வழியில் உள்ள பூக்கள் ஓட்டைப் பானையைப் பார்த்து நன்றி உணர்வுடன் சிரித்தன.

இக்கதையிலிருந்து நம்மிடம் இருக்கும் தாழ்வான எண்ணங்களை நீக்கி விடவேண்டும். எல்லோருக்கும் பெருமை உண்டு என்பதை உணர்தல் வேண்டும்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.