எளிமை போற்றுதும் இழுக்கே – கவிதை

பஞ்சம் பழகிய
பதின்மச் சிறுமியின்
இரவிக்கையாக வேண்டிய
துணியோ!
அறையின் வண்ணத்திற்கு
இணைசேர்க்கும்
திரைச்சீலையாய் ஊசலாடட்டும்…

மின் ஒளி பாயாதிருக்கும்
மலைக்காட்டு மாணவனுக்கு
கல்வி வளம் போதிக்கக் கூடும்
மின்சாரமோ!
செயற்கை மலை
நீர்வீழ்ச்சிக்கு
அழகூட்டி இருளட்டும்…

வறண்ட பூமியின்
நீண்ட வரிசையில்
தவமிருந்தும்
அரைகுடமே நிரம்பும்
நீர்ப்பாலோ!
உதிரத்தோடு சேர்த்துறுஞ்சி
கலன்கள் பல வடிகட்டி
ஒரு புட்டிக்குள்
ஓட்டம் இழக்கட்டும்…

இருவாச்சி அலகால்
வடிவாக்கப்பட்டு
கீச்சிடும் குஞ்சுகளை
பொந்துக் கூட்டில்
அடைகாக்கும் மரமோ!
கூழாகி பின்
கைதுடைக்கும் தாளாகி
சுருட்டி வீசப்படட்டும்…

பற‌ப்பன
ஊர்வன
நீந்துவன களிக்கும்
உயரிப் பண்ணையான
ஏரியோ அல்லால்
குளமோ!
ஆறாம் அறிவிலியின்
அடுக்குமாடிக் கூண்டாகி
வறண்டு போகட்டும்…

இவ்வாறே
வளர்ச்சியின் வேகத்தில்
பிறர்க்கான அத்துணை தேவையும்
ஆசையால்
ஆடம்பரமாகிப் போவதை
ஏதாவதொரு சப்பைக்கட்டில்
சமாளிக்கும் எமக்கு
எளிமை போற்றுதும் இழுக்கே!!

த. கமல் யாழி
மதுரை – 625 122
கைபேசி : 87781 12886
மின்னஞ்சல் : yazhikamal@yahoo.com

14 Replies to “எளிமை போற்றுதும் இழுக்கே – கவிதை”

 1. அடைகாக்கும் மரமோ
  கூழாகி பின்
  கைத்துடைக்கும் தாளாகி சுருட்டி வீசப்படும்.

  சிந்திக்காத மனிதனை ஆறறிவாளி என கூறல் விசப்பாம்பை நல்லப்பாம்பென கூறுவதற்கு ஒப்பானது.
  வரிகளின் வெம்மை சுட்டெரிக்கட்டும் சூழலெதிரிகளை ….

 2. அருமை சகோ.. வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை எதார்த்தத்தை இழந்தது தான் மிச்சம்… வரிகளில் தெரிகிறது வலி .. பாராட்டுக்கள் ..

 3. நன்றி சமூகத்தின் மீது அக்கறை கொண்ட உங்கள் வரிகளுக்கு….
  வணக்கம்…. உங்கள் சிந்தனைக்கு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.