எளிய மருத்துவம்

மாலை நேரம், வெளியே மழை பொழிந்து கொண்டிருந்தது .

புதிதாக துப்பறியும் தொழிலில் தடம் பதித்திருக்கும் ஒல்லியான இளம்பெண்கள் ரஞ்னாவும் நிரஞ்சனாவும் தங்களுடைய சின்னஞ்சிறு அலுவலகத்தில் அமர்ந்து கொண்டிருந்தார்கள்.

ரஞ்னா லேப்டாப்பில் மூழ்கி இருந்தாள். நிரஞ்சனா மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வாசலில் யாரோ நிற்பது தெரிந்து இருவரும் தலை நிமிர்ந்து பார்த்தனர்.

அவர்களுடைய தோழி பருமனான தேகம் கொண்ட இளம்பெண் லேகா நின்று கொண்டிருந்தாள். இருவரும் “வாடி!” என்று அவளை முகம் மலர வரவேற்றனர்.

“என்னடி இது? வசூல்ராஜா படத்துல ரூம் ஆரம்பிச்ச உடனே முடிஞ்சுடுதுன்னு சொல்றா மாதிரி ஒங்க டிடெக்ட்டிவ் ஸ்டார்ட் அப் ஆபீஸ் ஆரம்பிச்ச உடனே முடியுது!” லேகா கேட்டாள்.

ரஞ்னா பதில் சொன்னாள் “ஆமா எங்களுக்கு ஏத்த எள்ளுருண்டை ஆபீஸ்?”

அவர்களுடைய மேசைக்கு எதிராக இருந்த சின்ன இருக்கையில் லேகா கஷ்டப்பட்டு அமர்ந்தாள்.

நிரஞ்சனா உரையாடலைத் தொடங்கினாள்.

“எப்படி இருக்கு இல்லற வாழ்க்கை? ஐ.டி.கம்பெனி ஆளைப் பிடிச்சுட்டே! ஒன்ன நல்லா பாத்துக்கறாரா?”

“பாத்துக்கறாரு!”

“என்னப்பா இழுக்கறே?”

“இல்ல ஒங்க கிட்ட ஆலோசனை கேட்கத் தான் வந்தேன்!”

“என்னப்பா எங்களுக்கு ரொமான்ஸ் ரகசியங்கள் எல்லாம் தெரியாது!”

“அது இல்லப்பா!”

“அவரு தனக்குத் தானே பேசிக்கறாரு!”

“எல்லார்கிட்டயும் இருக்கிறது தானே இது. சினிமாலகூட மைன்ட் வாய்ஸ்ன்னு சத்தமா பேசறிங்கறன்னு எல்லாம் வசனம் வருதே!”

“ஏதாவது சமயத்துல நாம எல்லாரும் தனக்குத் தானே பேசிக்கறதுதான. எங்க அம்மா சமையலறையில அப்படித்தான் பேசிப்பாங்க”

“அப்புறம் என்ன? பவர் ஆப் செல்ப் டாக்ன்னு ஒரு ஆங்கில புத்தகம். நான் பிக்சன் டேரின் லேன்சர் என்ற ஆதர் எழுதி இருக்காரு!”

“அதெல்லாம் சரி ஆனால் … “

“என்ன ஆனா ரஞ்சனா! மழை வேளையில நம்ம தோழி ஆபீசுக்கு வந்து இருக்கா! டீ கொடு”

ரஞ்சனா தேநீர் உள்ள ஒரு சிறிய கோப்பையை லேகா அருகில் வைத்தாள். லேகா தேநீரைப் பருகினாள். நிரஞ்சனா மீண்டும் பேச்சைத் தொடங்கினாள்

“இப்ப என்ன அவரோட தனக்குத் தானே பேச்சு, சராசரியை விட அதிகமா இருக்கேன்னு உன்ன ஒரு பயம் பிடிச்சுகிச்சு. சரியா?”

“ஆமாம் கரெக்ட்டா பிடிச்சுட்டே!” என்றாள் லேகா.

நிரஞ்சனா சொன்னாள் “இதுக்கு ஒரு எளிய மருத்துவம் இருக்கு. மருத்துவம்னுகூட சொல்ல முடியாது. ஒரு எளிய வழிமுறை”

“என்னன்னு சொல்லேன்!” கேட்டாள் லேகா . ‘

“ரஞ்சனா சொல்வா?” என்றாள் நிரஞ்சனா.

ரஞ்சனா விவரித்தாள் . லேகா கேட்டுக் கொண்டாள்.

லேகா சொன்னாள் “நீங்க சொன்ன ஐடியா நல்லா இருக்கு. ஆனா, அதைப் பார்த்து என்னை குறிப்பிட்ட மருத்துவமனையில சேர்த்து விட்டுடாங்கன்னா!”

“அந்த அளவுக்குப் போகாது!” என்றாள் ரஞ்சனா .

“கல் எறியறா மாதிரி ஒரு தடவை மட்டும் ட்ரை பண்ணிப் பாரு. கண்டிப்பா ஒர்க் அவுட் ஆயிடும்” என்றாள் நிரஞ்சனா .

“சரி முயற்சி பண்ணிப் பார்க்கறேன். ஆபீஸ்ல வந்து ஆலோசனை கேட்டேன்னு பீஸ் எதுவும் கேட்டுட மாட்டிங்களே!” வினவினாள் லேகா.

நிரஞ்சனா சொன்னாள்

“நீ சிக்கனத்தின் சிகரம்னு தெரியும். ஒன்னோட மணவாழ்க்கையில ஓகோன்னு சந்தோஷமாக இருந்தால்
அதுவே போதும். பாட்டி மாதிரி இல்ல பேசறே!” என்று கூறி இருவரிடமும் கைகுலுக்கி விடை பெற்றாள் லேகா .

மறுநாள் இரவு மணி பத்து .

லேகா , தன்னுடைய வீட்டுப் படுக்கையறையில் கட்டிலில் உள்ள படுக்கையில் அமர்ந்து இருந்தாள்.

வீட்டுக் கூடத்தில் அவளது கணவன் கட்டுடல் கொண்ட இளைஞன் பரணி, ஸ்மார்ட் டிவியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் சாத்தி இருந்த படுக்கையறைக் கதவைத் திறந்து கொண்டு பரணி அவளருகில் வந்தான் .

“என்னங்க?”

“போன்ல யார்கிட்டயாவது பேசிக்கிட்டு இருந்தியா?”

“யார் போன் பண்ணுவா? இப்ப தான் பிரன்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ் யாரும் யாருக்கும் போன் பண்றது இல்லையே அவங்களா கூப்பிட்டா பேசிக்கலாம்னு இல்ல இருக்காங்க.”

“அது உண்மைதான். மொபைல்ல ஏதாவது வீடியோ பார்த்தியா?”

“நான் மொபைல் ஸ்க்ரீன் நேரத்தை சுத்தமா குறைச்சுட்டேன்! பாருங்க மேஜையில போன் ஓய்வுல இருக்கு!”

“பேச்சுக் குரல் கேட்டதே!”

“நான்தான் எங்க அம்மா கிட்ட பேசிகிட்டு இருந்தேன்.”

“அம்மாவா? அத்தைதான் நீ ப்ளஸ் டூ படிக்கும்போதே போய்ட்டாங்கன்னு சொன்னே!”

“போய்ட்டாங்க. ஆனா எப்பவாவது என்னோட பேசுவாங்க. ஒன்னோட மாப்பிள்ளைம்மா வாய் குளிர ஒன்ன அத்தைன்னு சொல்றாரு பாரேன். சரி நீ அப்புறம் வா. என்னங்க பகல்ல அலைஞ்சது எனக்கு களைப்பா இருக்கு. நான் தூங்கப் போறேன் நீங்க?”

“நான் கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்த்து விட்டு வரேன்!” என்று கூறியபடியே பரணி அறைக் கதவை நோக்கிச்
சென்றான். மனைவியின் உத்தியை அவன் புரிந்து கொண்டான்.

மதுரகவி சீனிவாசன்
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com

Comments

“எளிய மருத்துவம்” அதற்கு 2 மறுமொழிகள்

  1. […] எளிய மருத்துவம் வீதி நாடகம் சோலைமலை […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.