எள் துவையல் எள்ளினைக் கொண்டு செய்யப்படும் அருமையான சைடிஷ் ஆகும். இதற்கு கறுப்பு எள்ளினைத் தேர்வு செய்யவும்.
எள்ளானது இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து ஆகியவற்றை அதிகம் கொண்டுள்ளது. இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது எள்ளினைப் பற்றிய பழமொழி ஆகும்.
எனவே உடல் மெலிவாக உள்ளவர்கள் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எள்ளினை அடிக்கடி உண்பதால் இரத்த சோகை, எலும்பு பலவீனம் ஆகியவை குணமாகும். இனி சுவையான எள் துவையல் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கறுப்பு எள் – 100 கிராம்
மிளகாய் வற்றல் – 3 எண்ணம் (பெரியது)
புளி – சிறிய கோலி அளவு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – 3 கீற்று
எள் துவையல் செய்முறை
கறுப்பு எள்ளைச் சுத்தம் செய்து கொள்ளவும்.
மிளகாய் வற்றலை காம்பு கிள்ளி வைக்கவும்.
கறிவேப்பிலையை அலசி உறுவிக் கொள்ளவும்.
புளியை இதழ்களாகப் பிய்த்து சிறிதளவு தண்ணீரில் ஊற வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைக்கவும். வாணலி சூடானதும் கறுப்பு எள்ளைப் போட்டு வறுக்கவும்.
ஒரு நிமிடம் கழித்து அதனுடன் காம்பு கிள்ளிய மிளகாய் வற்றல், அலசிய கறிவேப்பிலை சேர்த்து ஒரு சேரக் கிளறி வறுக்கவும்.
எள்ளானது வெடித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.
எள் கலவை நன்கு ஆறியதும் மிக்ஸியில் வறுத்த எள், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.
பின் அதனுடன் ஊற வைத்த புளி, தேவையான உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து ஒரு சேர கெட்டியாக அரைக்கவும். சுவையான எள் துவையல் தயார்.
இதனை கலவை சாத வகைகள், தயிர் சாதம், இரசம் சாதம், இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம். குழந்தைகளுக்கு அடிக்கடி இதனை செய்து கொடுத்து வலுவான உடலைப் பெறலாம்.
குறிப்பு
விரும்பமுள்ளவர்கள் சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து எள் துவையலைத் தயார் செய்யவும்.
எள்ளினை வறுக்கும்போது ஒருசேர கருகி விடாமல் வறுக்கவும்.
விருப்பமுள்ளவர்கள் மிளகாய் வற்றலுக்குப் பதில் பச்சை மிளகாய் சேர்த்தும் துவையல் தயார் செய்யலாம்.
மறுமொழி இடவும்