மக்களின் மதிப்பை இழந்தவர் இனியும்
மாண்புடன் இருப்பதுவோ?
குக்கலை விரட்டி அடிப்பதை போலக்
கூனரை விரட்டிடவே
முக்கிய அறிஞர் யாவரும் வெளியில்
வருவதும் வேண்டுமன்றோ
மக்கிய மயிரைப் பிடுங்கியே எறிய
மாத்திறம் வேண்டுவதோ?
நித்திய வாழ்வு நிலைத்திடு மென்று
நினைப்பதும் மடமையன்றோ?
நத்தையைப் போன்று நம்குடி யாவும்
நகர்வதை அறிந்தபின்பும்
சத்தியம் வெல்லும் சரித்திரம் சொல்லித்
தத்தியாய்க் கிடப்பதுவோ
புத்தியை வடவன் கடையினில் வைத்தே
புசிப்பதும் ஈனமன்றோ?
நட்பெனக் கரத்தை நயம்படக் குலுக்கி
நரகமே பரிசளித்தார்
உட்புகும் பகைவர் உள்ளுறை மனிதர்
உப்பையும் பிடுங்கிகொண்டார்
நுட்பமாய் நிலத்தை நஞ்சென மாற்றி
நுகர்பொரு ளாக்கிவிட்டார்
திட்பமாம் தோளோன் திமிரவும் இயலாச்
சிக்கெனக் கால்பிடித்தார்.
மூச்சினை நீயும் விடுகிற மட்டில்
மூடியே இருந்திடலாம்
பேச்சினை மறந்து பெட்டியில் படுக்கப்
பெயர்களும் வருவதில்லை
பூச்சொரி பிள்ளை பேரின மனையாள்
பூமியில் நிலைப்பதில்லை
வீச்சுகள் நம்மை விட்டிடும் முன்பே
வீழ்த்துக இழிவினையே!

பேரினப் பாவலன் (எ) சாமி.சுரேஷ்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி: 8667043574
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!