எழுத்தாளரின் ஆக்கமும் ஊக்கமும்

எழுத்தாளரின் ஆக்கமும் ஊக்கமும்

கதிரும், கோகுலும் கல்லூரி மாணவர்கள். இணை பிரியாத நண்பர்களும் கூட. ஒருநாள் கல்லூரிவிட்டு பேசிக் கொண்டே வீடு திரும்பிக் கொண்டிருந்த‌னர்.

அன்று கல்லூரி விழாவிற்கு வந்த எழுத்தாளரைப் பற்றிய‌ பேச்சைத் தொடங்கினான் கதிர்.

“இன்னைக்கு எழுத்தாளர் அருமையாக பேசினார். அவரின் படைப்புகள் மிகவும் அருமையானவை.”

“என்னடா மச்சி சொல்ற? அவரோட எழுத்துக்கள் அவ்வளவு நல்லாவா இருக்கும்?”

“நீ வேணும்முனா அவரோட படைப்புகளை படித்துப் பார். அப்ப புரியும்” என்றபடி கோகுலிடமிருந்து விடை பெற்றான் கதிர்.

அதற்கு அடுத்து வந்த நாட்களில் கல்லூரிக்கு வந்த எழுத்தாளரின் படைப்புகளை கோகுல் வாசித்தான். பின்னர் தானும் அவரைப் போல எழுத வேண்டும் என்று அவ்வப்போது எண்ணிக் கொண்டான்.

 

ஒருநாள் கோகுல் அவனது குறிப்பு நோட்டில் இயற்கையைப் பற்றி எழுதி கதிரிடம் காண்பித்தான்.

அதனைப் படித்ததும் கதிர் “மச்சான். சூப்பர்டா. உனக்குள்ள இவ்வளவு திறமையா? இரு, நம்ம தமிழ் பேராசிரியரிடம் காண்பித்து அவருடைய கருத்தைக் கேட்போம்.” என்று சொல்லி பேராசிரியரிடம் காட்ட எடுத்துச் சென்றான்.‌

அதனைப் படித்துவிட்டு பேராசிரியர் “அடுத்த மாதம் கல்லூரி விழா வருகிறது. அதற்காக கட்டுரைப் போட்டி வரவிருக்கிறது. உனது திறமையை நிரூபிக்க ஓர் அருமையான தருணம் இது” என்றார்.

பேராசிரியரின் அறையை விட்டு வெளியே வந்ததும் “என்னடா மச்சி இவர். இப்படி அசால்டா சொல்லிட்டாரு?” என்று தயக்கத்துடன் கேட்டான் கோகுல்.

“ஏன்டா, அதெல்லாம் நீ கலக்கிருவடா” தைரியம் சொன்னான் கதிர்.

 

இருவாரங்கள் கழித்து கல்லூரி விழாவின் தொகுப்பாளரான‌ கதிரிடம், கோகுலை கல்லூரி கலையரங்கத்துக்கு அழைத்து வருமாறு பேராசிரியர் கூறினார்.

“என்ன கோகுல் ரெடியா? கல்லூரி விழாவின் கட்டுரை போட்டி இன்னும் அஞ்சு நிமிசத்துல ஆரம்பிக்கப் போகுது. உன்னோட‌ திறமையை காட்டு.

தலைப்பு: ஓர் எழுத்தாளரின் ஆக்கமும் ஊக்கமும். இப்போ உள்ளே போ” என்றார்.

“சார் எனக்கு கட்டுரை எழுத வராது சார்; விட்ருடங்க சார்” என்றான்.

அவரோ “இல்லை உன்னோட‌ பெயரையும் சேர்த்து விட்டேன். உனக்கு என்ன தோணுதோ எழுது. அன்னைக்கு உன்னோட‌ வகுப்பறை நோட்டைப் பார்த்தேனே.

அதில் பல பக்கங்களில் சில வரிகள் சொற்ப வார்த்தைகளால் நிர‌ம்பி கிடந்தன. அவைகள் மிகவும் அருமையாக இருந்தன. ஆதலால் சொல்கிறேன்; கலந்து கொள்.” என்றபடி கலையரங்கத்துக்குள் செல்லுமாறு சைகை காட்டினார்.

“தைரியமா போடா” என்று கதிர் ஊக்கமளித்தான்.

கோகுல் “சரி. நான் கலந்து கொள்கிறேன்” என்றபடி கதிரைப் பார்த்தான்.

கதிர் கண்களை விரித்து, வலது கை பெருவிரலை உயர்த்தி, உன்னால் முடியும் என்று கண்களாலும், விரலாலும் நம்பிக்கை அளித்தான்.

கோகுலுக்கு புதுத்தெம்பு வந்தது. திடமான நம்பிக்கையுடன் கலையரங்கத்திற்குள் சென்றான்.

கட்டுரைப் போட்டியின் முடிவு நான்கு நாட்கள் கழித்து, கல்லூரி விழா நாள் அன்று மேடையில் அறிவிக்கப்படும் என்று போட்டியின் இறுதியில் தெரிவிக்கப்பட்டது.

 

கோகுலோ தான் எழுதிய ஓர் எழுத்தாளனின் ஆக்கமும் ஊக்கமும் கட்டுரையைப் பற்றி கதிரிடம் விவாதித்தான். கதிர் கோகுல் எழுதியதை எழுத்து வடிவில் தருமாறு கூறினான்.

கோகுல் தந்த எழுத்து வடிவத்தை கதிர் வார இதழ் ஒன்றுக்கு அனுப்பினான்.

அந்த வார இதழின் ஆசிரியர் தான் கல்லூரி விழாவின் சிறப்பு அழைப்பாளர்.

விழா அரங்கேற்றமானது. ஒரே ஆரவாரமாக மாணவர்கள் திரண்டனர். விழாவின் பரிசு தரும் தருணம் நெருங்கியது.

கோகுலிற்கோ ‘நமது கட்டுரை பரிசு வாங்குமா?’ என்ற சந்தேகம் தோன்ற மறுபுறம் ‘நம்ம எழுதுனதுக்குல்லாம் பரிசு எதிர்பார்த்தா எப்படின்னு’ மனசுல ஒரு உளறல் இருந்து. அதனையும் மீறி அவனது ஆக்கம் அவனை ஏங்க செய்தது.

கட்டுரை போட்டியின் பரிசு அறிவிக்க முதல், இரண்டாம் தவற, மூன்றாம் இடமும் தவறியது. கோகுலின் முகம் வாடியது.

பேராசிரியர் அவனை தேற்ற சில ஆறுதல் வார்த்தைகளை கூறிவிட்டு சென்றார். விழா நடந்து கொண்டிருந்தது. பரிசுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன.

நடுவே, இதழாசிரியர் உரையாற்ற வருகிறார் என்று அறிவிக்கப்பட்டது. வெறுப்பின் உச்சத்தில் இருந்த கோகுல்
கலையரங்கத்தின் வாயிலுக்கு வந்தான்.

 

“ஓர் எழுத்தாளரின் ஆக்கமும் ஊக்கமும் …..ஓர் வாசகனிடம் ஒளிந்து இருக்கிறது” என்று மைக்கில் இதழ் ஆசிரியர் கூறியதைக் கேட்டதும் கோகுல் அதிர்ச்சி அடைந்தான்.

ஆச்சர்யத்துடன் ‘இது நம் வரிகள் ஆச்சே இவருக்கு எப்படி தெரிஞ்சிருச்சு?’ என யோசித்தான். உடனே கலையரங்கத்திற்குள் சென்றான்.

அவர் “ஆம் இந்த வரிகள் என்னுடையதல்ல. வரிகளுக்கு உரிமையானவன் உங்களில் ஒருவனாய் இருக்கின்றான். அவனது வரிகள் என்னை ஆட்கொள்கிறது.

ஏனெனில் எழுத்தாளர் மேலும் எழுத (ஆக்கம்) அவருக்கு ஊக்கம் தேவைப்படுகிறது. ஆம், அது வாசகர்களிட‌ம் மட்டுமே உள்ளது.

எழுத்தாளனைப் பற்றிய‌ அவனது வரிகள் அருமையானவை. அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகின்றேன்.

நான் உரைக்கவோ, குறை கூறவோ கூறவில்லை; நீங்கள் உணரவே உரையாடுகிறேன்.

வலிமையை உணவால், உடலால் உயர்த்தலாம். உணர்ச்சியையும், அறிவையும் வார்த்தைகளால், வரிகளால் ஊட்டலாம்; ஓர் எழுத்தாளனால் அது முடியும்.

ஆம்! மாணவர்களே, அவனது கூற்று சரிதான். ஓர் எழுத்தாளன் எங்கேயும் செல்ல வேண்டும், எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

எழுத்தாளன‌து எழுத்துகள் எங்கே செல்கிறதோ, அங்கெல்லாம் பலரை வினா எழுப்பும்; பல தீர்வுகளைத் தரும். எடுத்துக்காட்டு பாரதியாரின் கவிதைகள்.

எழுத்தாளன் இறந்தாலும் அவனின் எழுத்தாளுமையின் காரணத்தால் எழுத்துகளின் வடிவில் என்றும் இறவாமல் இருப்பான். எடுத்துக்காட்டு திருவள்ளுவர்.

அவர் இறந்தாலும் தன் எழுத்துகளால் ஆன திருக்குறளால் இந்த உலகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.” என இதழ் ஆசிரியர் தனது உரையை முடித்து அவர் கொண்டு வந்த பரிசை கோகுலிடம் பரிசளித்தார்.

மேலும் கோகுலின் கட்டுரையை அடுத்த வாரம் தன்னுடைய இதழில் சிறப்புக் கட்டுரையாக வெளியிட உள்ளதாக அறிவித்தார். மாணவர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி கோகுலின் எழுத்தைக் கௌரவித்தனர்.

 

மாணவர்களே! இளைஞர்களே!

எழுதுங்கள்!

சரியோ தவறோ, சமூகத்தின் மீதான உங்கள் கேள்வியை எழுப்புங்கள்!

ஏனென்றால் ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரு தனித்துவம் கொண்டவர்!

எழுத்துகளால் ஒன்றிணைவோம் வாருங்கள்!

சமூக பார்வை வேண்டும் என்றும் நம் மனதில்!

 

சதிஷ்

அ.சதிஷ்ணா
மருந்தியல் பட்டதாரி
8438574188


Comments

“எழுத்தாளரின் ஆக்கமும் ஊக்கமும்” மீது ஒரு மறுமொழி

  1. பாரதிசந்திரன்

    உத்வேகம் தரும் சிறப்பு நிறைந்துள்ளன. அழகு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.