எழும் இந்தி என்பது வீழும் தமிழ் என்று அர்த்தமா? என்று யோசிக்க முடியாமல் தமிழகம் தடுமாறிக் கொண்டிருப்பது வருத்தமளிக்கின்றது.
முதலிலேயே நான் தெளிவாக சொல்லி விடுகிறேன். நான் தனித் தமிழ் நாடு கேட்பவனல்ல. ஆனால் ஒன்றுபட்ட இந்தியா என் தாய்மொழியை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன்.
தமிழகத்தின் அரசியல் தத்தளித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் தில்லியில் இந்தி எழுச்சி கொண்டு வருகிறது.
நம் நாட்டின் மொழிகளுக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை நாம் ஆங்கிலத்துக்குக் கொடுக்கின்றோம் என்ற நமது தேசியத் தலைவர்களின் எண்ணம் போற்றுவதற்குரியதே!
ஆனால் தன் எல்லாப் பிள்ளைகளையும் சமமாகப் பாவிக்கும் தாயின் மனப்பான்மை நம் தேசியத் தலைவர்களுக்கு வேண்டும் என எதிர்பார்ப்பது பேராசையா?
தன் சொந்த நாட்டில் தன் தாய் மொழியைப் பயன்படுத்த முடியாது என்ற நிலையில் வாழ்வது என்பது அடிமைத்தனம் இல்லையா?
அப்படிப்பட்ட நிலையில் தன் நாட்டின் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்களை வைத்திருக்கும் நாடு உண்மையிலேயே வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க முடியுமா?
நிர்வாக வசதி என்பதும் நாட்டில் நிறையப் பேருக்குத் தெரிந்த மொழி என்பதாலும் இந்திக்கு முன்னுரிமை என்பது புரியவே செய்கிறது.
நமது நாட்டின் மொழி என்பதால் அதை வளர்த்தெடுக்க மத்திய அரசு விரும்புவதிலும் தவறு இல்லைதான்.
ஆனால் இந்தியின் வளர்ச்சி என்று மட்டும் இருக்காமல் இந்திய மொழிகளின் வளர்ச்சி என்ற பரந்த நோக்கில் ஏன் இந்திய அரசு யோசிக்க மறுக்கின்றது?
இந்தி தெரியாதவர்கள் தமது தொடர்பு மொழியாக ஆங்கிலத்தை வைத்து இருக்கின்றார்கள்.
குடியரசுத் தலைவர், அமைச்சர்கள் எல்லோரும், அவர்களுக்கு இந்தி எழுதப் பேசத் தெரியும் என்கிற பட்சத்தில், நாடாளுமன்றத்தில் இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்று பரிந்துரை 105 கூறுகிறது.
ஆங்கிலத்தின் மீது விழுந்த இந்த அடி என்பது பிற இந்திய மொழிகளின் மீதான ஒரு அடியாகவே பார்க்க வேண்டியுள்ளது.
இதே போல் தமிழ் தெரிந்தவர்கள் தமிழில் பேச வேண்டும் என்று ஏன் சொல்லவில்லை?
இந்திக்குத் தமிழ் எந்த விதத்தில் இளப்பம்?
எண்ணிக்கையில் தான் என்றாலோ இல்லை ஏதோ ஒரு காரணம் சொன்னாலோ அது நியாயமான காரணம் அல்ல.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவன் இந்தியாவைத்தான் தாய் நாடாகக் கொண்டிருக்கின்றான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தன் தாய்மொழி தேவையற்றது என்ற எண்ணம் இந்தி பேசாத மாநிலத்திலுள்ள பல இந்தியர்களுக்கு வந்து விட்டது என்பது உண்மை.
அதனால் தான் சினிமா உட்பட பல கலைத்துறைகளில் அவர்கள் தங்கள் தனித்தன்மையை இழந்து நிற்கிறார்கள்.
அதற்கு விதிவிலக்காக இருந்து தன் தாய் மொழிக்காகவும் தன் அடையாளங்களுக்காகவும் போராடி அதனைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஒரு சில மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்று.
அந்த மாநிலங்களிலும் இந்தியை முன்னிறுத்தி அவர்கள் தாய்மொழியை விட இந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வைக்க வேண்டும் என்று இந்திய அரசு விரும்புவதாகவே பல நடவடிக்கைகள் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது.
எடுத்துக்காட்டாக இந்திய அரசு தனது சொத்தாக வைத்திருக்கும் வங்கிகளில் கூட அந்த அந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தராமல் இந்திக்கே முக்கியத்துவம் தருகிறது.
எழும் இந்தி என்பது வீழும் தமிழ் அல்லது மற்றோர் இந்திய மொழி என்கின்றபோது வலிக்கின்றது.
என் தாய்மொழியை என் சுதந்திர நாட்டில் என் அரசே அழிக்கின்றதே என நினைக்கும்போது வேலியே பயிரை மேய்கிறது என வருத்தப்படுவதைத் தவிர வேறேதும் செய்ய முடியாத நிலைதான் தோன்றுகிறது.
ஒன்று பட்ட இந்தியா என்பது எனது பொருளாதாரத்தையும் எல்லையையும் பாதுகாப்பது போல் என் தாய்மொழியையும் பாதுகாக்கும் என்று எதிர்பார்ப்பது தவறா?
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!