எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் முதலாவது விருதுநகர் புத்தகத் திருவிழாவில் 18.11.2022 அன்று நினைவின் சித்திரங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
எஸ்.ராமகிருஷ்ணன் உரை கேட்ட அனைவரையும் சுமார் ஒரு மணி நேரம் கட்டிப்போட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.
மதுரைக்கு சித்திரைத் திருவிழா என்றால் விருதுநகருக்கு பங்குனிப் பொங்கல். ஊர் முழுவதும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் வசந்த காலம் அது.
இந்த ஆண்டு பங்குனி பொங்கல் நிகழ்வுகளுக்குப் பின் இன்று (18.11.2022) மீண்டும் களை கட்டியது விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப் பள்ளி வளாகம்.
ஆம்! நேற்று (17.11.2022) ஆரம்பமான புத்தகத் திருவிழாவில், இன்று மண்ணின் மைந்தன், எங்கள் கல்லூரி பழைய மாணவர், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு.
விருதுநகர் மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு, சின்ன சின்ன கிராமங்களில் பொதிந்து கிடக்கும் வரலாற்று உண்மைகள், எழுத்துலகில் கோலோச்சிய இவரது முன்னோடிகளின் சிறப்பு என ‘நினைவின் சித்திரங்கள்’ எனும் தலைப்பில் அற்புதமாக உரையாற்றினார். அவர் உரையின் சில துணுக்குகள் இங்கே…
‘வரலொட்டி‘ என்பது விருதுநர் அருகே அமைந்துள்ள சிற்றூர். வரலொட்டி என்ற சின்ன ஊரின் பெயர் காரணம் பற்றி அவர் சொன்னது மிக அருமை.
‘வரல்’ என்றால் வறட்சி. இந்த ஊரில் ஆங்கிலேயர் காலத்தில் கிணறு வெட்டி இந்தப் பகுதியின் வறட்சியினை ஓட்டியிருக்கிறார்கள்.
வரல் ஓட்டிதான் இந்நாளில் வரலொட்டி என அழைக்கப்படுகிறது. இதற்கு கல்வெட்டு ஆதாரம் உள்ளது என சுட்டிகாட்டினார் எஸ்.ரா.
அடுத்து சொன்ன விஷயம் ‘பாவாலி‘ என்ற கிராமத்தைப் பற்றியது. கட்டபொம்மனை தூக்கில் போட உத்தரவிட்ட பானர்மேனின் செப்பேடு செய்தியாகும்.
விருதுநகர் அருகிலுள்ள கிராமங்களில் கண்டெடுக்கப்பட்ட ரோமானிய தங்க நாணயங்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த கரிசல் பூமி எப்படி வணிகத்தில் அதுவும், முதல்தர துணிகள் ஏற்றுமதி வணிகத்தில் சிறந்து விளங்கியது என்பதனை பறை சாற்றுவதாக அமைகிறது என தெரிவித்தார்.
1933 – 34 ல் மகாத்மா காந்திஜி அவர்களின் விருதுநகர் விஜயம்; அன்று பெய்த பெருமழை!
அந்தப் பெருமழையிலும் அண்ணலைக் காண கடும் மழையிலும் கால் கடுக்கக் காத்திருந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளம்!
அன்று விருதையில் காந்தி செய்த பிரார்த்தனை; அவர் மேற்கொண்ட நடைபயிற்சி என அனைத்தையும் கண் முன்னே கொண்டு வந்து காட்டி பதிவு செய்தார்.
‘மகாத்மாவின் பாதம் பதிந்த இந்த புண்ணிய நகரில் நாமும் வசிக்கிறோம்’ என்ற உணர்வினை அனைவருக்கும் ஊட்டினார் ‘பெருந்தகை’ என்றால் அது மிகையாகாது.
விருதுநகரின் விடிகாலைப் பொழுதின் அழகினைப் புகழ்ந்து, விருதுநகர் ரயில் நிலையத்தில், மதிய வெயில்நேரத் தனிமையின் தவிப்புதான் தன்னை எழுத்தாளனாக மாற்றியது எனக் கூறினார் எஸ்.ரா.
பின்னர் தனது முன்னோடிகள் அவர்களுடன் தனக்குள்ள தொடர்புகளை அடுத்து விவரித்தார்.
சாத்தூர் தனுஷ்கோடி ராமசாமி மற்றும் ராஜபாளையம் ஜகந்நாதராஜா ஆகியோரின் மேன்மைகளை அசை போட்டு, பின்னர் இவருக்கு முன்னதாக சாகித்ய அகாடமி விருது பெற்ற மேலாண்மை பொன்னுசாமி குறித்து பதிவு செய்தார்.
ஒரு பலசரக்கு கடைக்காரரான அவரது படைப்பு திறன் குறித்து, அவர் எழுதிய ஒரு கிராமத்தில் கொய்யாப் பழம் வியாபாரம் செய்யும் வியாபாரியின் கதையினை சொல்லி விளக்கினார்.
விடிய விடிய விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் வெறும் தேநீர் மாத்திரம் அருந்திவிட்டு மேலாண்மை பொன்னுசாமியுடன் நடைபெற்ற இவரது சுவாரசியமான இலக்கிய விவாதங்களை நினைவு கூர்ந்தார்.
ஒரு பல்கலைக் கழகம் செய்ய வேண்டிய சேவையினை தனியொரு மனிதனாக ‘இந்திய வரலாறு’ குறித்து 17 தொகுதிகள் வழங்கிய ‘சிவனடி‘ என்னும் படைப்பாளி விருதுநகரைச் சேர்ந்தவர்தான் என அவர் பதிவு செய்தார்.
சிவனடி அவர்களின் மேன்மையினை எடுத்துரைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
உண்மையிலே எஸ்.ராமகிருஷ்ணன் உரை வழங்கிய ‘நினைவின் சித்திரங்கள்’ விசித்திரமானவை. நான் இதுவரை கேள்விப்படாதவை.
இலக்கியங்கள் காலம் கடந்தும் மனிதனை ஆள்பவை… கடைசியாக முடிக்கும் முன் அவர் சொன்ன பீகாரி எழுத்தாளர் எழுதிய ‘ரஜிதா‘ எனும் காலம் கடந்தும் வாழும் காதல் என்பதனை உணர்த்தும் கதை மிகவும் அருமை.
இந்தப் பதிவில் எஸ் ரா பேசி என் நினைவில் பொதிந்த கருத்துக்களை எழுதி இருக்கிறேன்.
என்னைப் போலவே இலக்கிய தாகம் மிக்க எனது நண்பர்களையும் மற்றும் மாணவர்களையும் இந்த நிகழ்வில் சந்தித்தேன். உளம் மகிழ்ந்தேன்.
இந்தப் புத்தகத் திருவிழாவினை நடத்தும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்துக்கு மிக்க நன்றி.
முனைவர் பொ.சாமி
வேதியியல் இணைப் பேராசிரியர்
வி.இ.நா. செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர் – 626 001
கைபேசி: 9443613294
எஸ்.ரா என அழைக்கப்படும் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் மிகச் சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். அவரைப் பற்றி மேலும் அறிய
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!