ஏகாம்பரநாதர் கோவில் காஞ்சிபுரம்

ஏகாம்பரநாதர் கோவில் காஞ்சிபுரம் பற்றிய‌ இக்கட்டுரை கலைமாமணி மு.தொ.பாஸ்கர தொண்டைமான் அவர்கள் எழுதிய‌ வேங்கடம் முதல் குமரி வரை (பாலாற்றின் மருங்கிலே) என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

திருநாவலூரிலே பிறந்து, திருவெண்ணெய் நல்லூரிலே இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, திருவாரூரிலே பரவையை மணந்து, சம்பிரமமாக வாழ்ந்தவர் சுந்தரர். இவரது வாழ்க்கை மிகவும் ரசமாக அமைந்ததொன்று.

இவர் வீட்டுச் சாப்பாட்டுக்குக் குண்டையூரில் நெல் பெற்றால், அதைத் திருவாரூர் கொண்டு சேர்க்க இறைவனையே கேட்பார்.

முதுகுன்றத்தில் பணம் கிடைத்தால், அதை அங்குள்ள மணிமுத்தாற்றில் போட்டுவிட்டுத் திருவாரூர்க் கமலாயத்தில் எடுத்துக் கொடுக்க வேண்டுவார்.

அவிநாசி சென்றால், எத்தனையோ வருடங்களுக்கு முன்பு, அங்கு ஒரு பிள்ளையை முதலை உண்ட செய்தி அறிந்து, ‘கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே!’ என்று இறைவனுக்கே கட்டளை இடுவார்.

அத்தனை உரிமை அவருக்கு இறைவனிடத்தில். அத்தனையையும் செய்வார், இறைவன் – அட்டியில்லாமல், இந்தத் தம்பிரான் தோழருக்கு. இதற்கெல்லாம் பரிசாக இறைவன் இவரிடம் பெறுவது, ஒவ்வொரு தடவையும் பத்துப் பத்துப் பாட்டே.

இந்தச் சுந்தரர் திருவொற்றியூர் வருகிறார். அங்குள்ள கன்னிப் பெண் சங்கிலியைக் கண்டு காதலிக்கிறார். அவளை மணம் முடித்து வைக்க அங்குள்ள மாணிக்கத் தியாகரை வேண்டுகிறார். அவரும் இணங்குகிறார்.

சங்கிலிக்குப் பரவை ஞாபகம் வருகிறது. இவர் ஒருவழி சொல்லிப் பெருவழி போகிறவராயிற்றே. ஆதலால் தன்னை எக்காலமும் பிரியேன் என்று இறைவன் சன்னதியிலே சத்தியம் செய்து தரச் சொல்லுகிறாள்.

கொஞ்சமும் தயங்காமல் சுந்தரர் சத்தியம் செய்கிறார். மணம் முடிகிறது.

 

கொஞ்ச நாட்கள் கழித்ததும் திருவாரூர்த் தியாகர் ஞாபகமும் அத்துடன் பரவையின் ஞாபகமுமே சேர்ந்து வருகின்றது. சத்தியத்தை யெல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டுப் புறப்பட்டு விடுகிறார், திருவொற்றியூரை விட்டு.

சத்திய பங்கம் நேர்ந்ததன் காரணமாக இரு கண்களையுமே இழக்கிறார். என்றாலும் திருவாரூர் செல்வதை விடவில்லை, இந்த வன்தொண்டர்.

வெண்பாக்கம் சென்று இறைவனிடமே கேட்டு ஊன்றுகோல் ஒன்று பெறுகிறார். கச்சிக்கு வந்து ஏகம்பனை வணங்கி இடக்கண்ணில் ஒளி பெறுகிறார். இவ்வாறு ஒருகண் ஒளி பெற்ற பின் உளம் கசிந்து பாடுகிறார்.

ஆலந்தான் உகந்து அமுது செய்தானை,

ஆதியை அமரர் தொழுதேத்தும்

சீலந்தான் பெரிதும் உடையானை

சிந்திப்பார் அவர் சிந்தையுளானை

ஏலவார் குழல் உமைநங்கை

என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற

கால காலனைக் கம்பன் எம்மானைக்

காணக் கண் அடியேன் பெற்றவாறே!

ஆகவே, நல்ல ஞானக்கண் பெற விரும்புபவர்கள், கண் பெற்ற பயனைப்பெற வேண்டியவர்கள் எல்லாம் சென்று காண வேண்டிய தலம் கச்சியும், அங்குக் கோயில் கொண்டிருக்கும் ஏகம்பனுமே.

காஞ்சியின் பெருமை

மக்களுக்கு முக்தி தரும் நகரங்கள் ஏழு என்பர், பெரியவர்கள். காஞ்சி, அயோத்தி, மதுரை, மாயை, காசி, அவந்திகை, துவாரகை என்றும் கணக்கிடுவர்.

இவை ஏழில் காஞ்சியை ஒதுக்கி விட்டால், மூன்று சிவ ஸ்தலங்கள். மற்றைய மூன்றும் விஷ்ணு ஸ்தலங்கள்.

காஞ்சி நகரம் ஒன்றுதான் சைவ வைணவ சமரசம் கொண்டதாய், இருவருக்கும் பொதுவானதாக இருக்கிறது. அதனால்தான் முக்தி தரும் நகரங்களுள் முதல் ஸ்தானம் வகிக்கிறது.

காஞ்சி என்னும் கச்சி. கச்சிப்பேடு என்று பழைய கல்வெட்டுகளில் வழங்கப்படுவதே காஞ்சி. காஞ்சீபுரம் என்றும் இன்று வழங்கப்படுகிறது.

‘கேட்ட வரம் அளிக்கும் கீர்த்தியுள்ள தெய்வங்காள் கூட்டோடே எங்கே குடிபோனீர்?’ என்று கேட்கிறார் ஒரு கவிஞர்.

அவருக்குப் பதில் சொல்லலாம் நாம். அத்தனை தெய்வங்களும் சேர்ந்து ஒன்றாகக் குடி வந்திருக்கும் தலமே காஞ்சி.

அங்குள்ள மக்களைக்கூட ஜனசங்கியைக் கணக்கு எடுத்து விடலாம். ஆனால் அங்குள்ள கோயில்களையும் மூர்த்திகளையும் கணக்கெடுப்பதென்பது என்னவோ சிரம சாத்தியமான காரியந்தான்.

நமக்குத் தெரியும், அண்ணன் தம்பிமார் சொத்துக்களைப் பாகப் பிரிவினை செய்து கொள்வார்களென்று, அத்தான் மைத்துனர்களுக்குள் ஏது பாகப்பிரிவினை?

அந்தப் பாகப் பிரிவினையே நடந்திருக்கிறது இங்கே. காஞ்சி ஐந்து மைலுக்கு மேலே நீண்டிருக்கும் பெரிய ஊர். இதை இரண்டு கூறாக்கிச் சிவனும் விஷ்ணுவுமே பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

மேல் பகுதி சிவ காஞ்சி. கீழ்ப் பகுதி விஷ்ணு காஞ்சி.

பங்கு வைத்தலில் கூட நேர்மை இல்லை. சிவன் பெரியதொரு பங்கைத் தனக்கு எடுத்துக் கொள்கிறான். அவன், அவன் துணைவி காமாட்சி, அவன் மகன் குமரன் இவர்கள் இருக்கும் பகுதியே பெரிய காஞ்சி.

அத்தி வரதரும் அவரைச் சேர்ந்தவர்களும் சிறிய காஞ்சியிலே இருக்கிறார்கள்.

சத்திய விரதர், மணிகண்டீசர், ஐராவதீசுவரர், கச்சபேசுவரர், தான்தோன்றி ஈசுவரர், புண்யகோட்டீசர், பாணாதரீசர் என்ற பெயர்களில் முப்பதுக்கு மேற்பட்ட கோயில்களில் இருக்கிறான் இறைவன்.

அதே போல் பச்சை வண்ணர், பவள வண்ணர், சொன்ன வண்ணம் செய்தவர், ஆதிகேசவர், அழகிய சிங்கர், உலகளந்தவர், ஜகதீசர், பாண்டவப் பெருமாள் என்ற பெயர்களில் விஷ்ணுவும் கிட்டத்தட்ட இருபதுக்கு மேற்பட்ட கோயில்களில் கொலுவிருக்கிறான்.

பெரிய காஞ்சிப் பகுதியில் விஷ்ணுவுக்கும் சிறிய காஞ்சிப்பகுதியில் சிவனுக்கும் சில சில இடங்களை விட்டுக் கொடுத்து நிரம்பவும் சௌஜன்யமாகவே வாழ்கிறார்கள் அத்தானும் மைத்துனனும்.

எத்தனை பேர் எத்தனை பெயர்களில் எத்தனை கோயில்களில் இருந்தாலும் தலைமைப் பதவி இவருக்குத்தான்.

விஷ்ணு காஞ்சியின் தலைவர் அத்திகிரி வரதர். சிவ காஞ்சியின் தலைவர் ஏகம்பன்.

இன்று கச்சி ஏகம்பனைப் பார்ப்பதோடு திருப்தி அடையலாம். தலைவரைக் கண்டு வணங்கி விட்டால் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் அல்லவா?

கைலாசநாதர் கோவில்

காஞ்சியில் இருக்கும் தெய்வங்களுக்குள் முதன்மையானவர் கச்சி ஏகம்பனே என்றாலும், கலை வளத்தாலும் சரித்திரப் பிரசித்தியாலும் ஏகம்பனுக்கு முன் நிற்பவர் கைலாசநாதரே.

இந்தக் கைலாசநாதரது கோயில் பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டப்பட்டது. அதனால் கல்வெட்டுகளில் ராஜசிம்மேச்சுரம் என்று காணப்படும்.

ஊருக்கு மேற்கே ஓர் ஒதுக்குப்புறமான பல்லவமேடு என்னும் இடத்திலே, அற்புதமான சிற்ப வடிவங்கள் பலவற்றை உள்ளடக்கிக் கொண்டு நிற்கிறது கோவில்.

கைலைக்கு நிகரான தலம் ஆனதினால், கைலாசநாதர் அங்கே குடி வந்திருக்கிறார், பதினாறு பட்டைபோட்ட லிங்கத் திரு உருவில்.

இவரைத் தற்சமயம் வணங்கிவிட்டு, விரைவாகவே செல்லலாம் ஏகாம்பரர் கோயிலுக்கு.

சென்னையிலிருந்து பங்களுர் செல்பவர்கள் கண்ணில், சென்னையிலிருந்து அறுபதாவது கிலோ மீட்டர் கல் பக்கம் ‘Temple View’ என்று எழுதப்பட்டுச் சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு பலகை தென்படும்.

அதுவரையில் குனிந்தே சென்றிருந்தாலும், அங்கு நிமிர்ந்து பார்த்தால், ஒருபெரிய கோபுரம் வானுற வளர்ந்து நிற்பதைக் காணலாம்.

ஏகாம்பரநாதர் கோவில்

அந்தக் கோபுரத்தைக் குறிக்கோளாக வைத்துக் கொண்டு காஞ்சிக்கு வரலாம். கச்சி ஏகம்பன் கோயில் (ஏகாம்பரநாதர் கோவில்)  ராஜகோபுர வாயிலின் வழியாக நுழையலாம்.

 

ஏகாம்பரநாதர் கோவில் கோபுரம்
ஏகாம்பரநாதர் கோவில் கோபுரம்

 

இக்கோபுர வாயில் தென்திசையில் இருந்தாலும் கோயிலில் உள்ள மூர்த்தி கிழக்கு நோக்கியவராகத் தான் இருக்கிறார்.

உலகீன்ற அம்மை உமை, உலகம் உய்யக் கையிலை யிலிருந்து இறங்கி வந்து கம்பை நதிக் கரையிலே மணலால் லிங்கம் ஒன்றை அமைத்துக் கொண்டு பூஜை செய்கிறாள்.

 

சிவபூஜை செய்யும் அம்மை
சிவபூஜை செய்யும் அம்மை

 

அந்தச் சமயத்தில் கம்பை நதி பெருக்கெடுத்து வர, அம்மை நடுக்க முற்றாலும், நம்பிக்கையை இழக்காமல், லிங்கத் திரு உருவையே கட்டிப்பிடித்துக் கொள்கிறாள்.

அம்மையின் வளை அணிந்த கைகளால், இறுகத் தழுவியதால், அவளது வளைத் தழும்பும் முலைத் தழும்பும் பெற்ற பெருமான், தழுவக் குழைந்த தலைவனாக அம்மைக்கு அருள் பாலித்தார் என்பது வரலாறு.

இத்தலத்தில் பிருதிவி உருவில் இருக்கும் மூலத்திரு உருவைவிடப் பிரசித்தி பெற்றவர் ஏகாம்பரநாதர். இவர் கர்ப்ப கிருஹத்துக்குப் பின்னுள்ள மாமரத்தடியில் தம் துணைவி ஏலவார் குழலியுடன் கொலுவிருக்கிறார்.

 

ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள மாமரம்
ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள மாமரம்

 

நான்கு வேதங்களும் சேர்ந்தே இந்த மாமரமாக உருவாகி யிருக்கிறது என்பது புராண வரலாறு. மாமரத்தின் நான்கு கிளைகளில் பழுத்து உதிரும் கனிகளுக்கு நான்கு விதமான சுவை என்பர், உண்டு மகிழ்ந்தவர்கள். இந்தக் கனிகளை உண்பவர்களுக்குப் புத்திரப்பேறு சித்திக்கும் என்பது நம்பிக்கை.

கம்பமாக லிங்கத்திரு உருவில் இருப்பவன் கம்பன் என்று அழைக்கப்படுவதில் வியப்பில்லை. கம்பைநதிக் கரையில் நிற்பவன் ஏகம்பன் என்று சொல்வதிலும், தவறில்லை.

இதுபோக, ஏகம்பனுக்கும், ஏகாம்பரனுக்குமே விளக்கம் தருவார்கள் அறிஞர்கள்.

கம்பன் என்றால் நடுக்கம். நடுக்குற்ற உமையால் தழுவப் பெற்றதால் ஏகம்பன் ஆனான் என்றும், ஆமரம் என்றால் மாமரம், மாமரத்தடியில் வீற்றிருப்பவர் ஏகாம்பரநாதர் ஆனார் என்றும் விளக்கங்கள் வளரும்.

இவற்றை எல்லாம் ஆராய்ச்சியாளர்களுக்கே விட்டுவிடலாம்.

 

இந்தக் கோயிலில் இந்த ஏகம்பனுக்குப் போட்டியாக எழுந்துள்ளவர் மூவர், அவர்கள் மூவரும் முறையே வெள்ளக்கம்பன், கள்ளக்கம்பன், நல்லகம்பன் என்ற பெயரில் லிங்கத்திரு உருவில் அமைந்திருக்கிறார்கள்.

இவர்களை முப்பது ஏக்கர் பரப்பிலே உள்ள இந்தக் கோயிலில் தேடிச் சென்று வணங்கி விடை பெறுவது சிரமமே.

ஆதலால் ‘மாவடி வைகும் செவ்வேள்’ மலரடி வணங்கிவிட்டுத் தனித்தொரு கோயிலிலே இருக்கும் ஏலவார் குழலியையும் வணங்கலாம்.

ஒருவிசேஷம் – காஞ்சியில் இறைவன் எண்ணற்ற திருப்பெயர்களில் எண்ணற்ற கோயில்களில் இருந்தாலும், அங்கெல்லாம் அம்மனுக்குத் தனித்த சந்நிதி கிடையாது. காமகோட்டத்தில் கொலுவிருக்கும் காமாட்சியின் சந்நிதி ஒன்றே அம்மன் சந்நிதியாகும்.

நிலாத் திங்கள் துண்டப் பெருமாள்

இன்னும் மேலே வடக்குப் பிராகாரத்தில் நடந்தால், நம்மை வெளியே போகவிடமாட்டார், நிலாத் திங்கள் துண்டப் பெருமாள்.

நீருறும் செஞ்சடையாய்! நெற்றிக்கண்ணாய்!

நிலாத் திங்கள் துண்டத்தாய்!

நின்னைத் தேடி

ஓரூரும் ஒழியாமே ஒற்றித் தெங்கும்

உலகமெலாம் திரி தந்து,

நின்னைக் காண்பான் தேரூரும்

நெடுவீதி பற்றி நின்றேன்

என்று அப்பர் பாடலைப் படித்த நான் இத்தனை நாளும் நிலாத் திங்கள் துண்டத்தான் சிவபெருமானே என்று நினைத்திருந்தேன்.

ஆனால் இந்தப் பெருமான் நல்ல பட்டை நாமம் சாத்திக்கொண்டு, அழகான சிலை வடிவில் பெருமாளாக நிற்கிறார்.

மக்களில் ஒரு சிலர் ஏதோ சைவம், வைணவம் என்ற பேதம் உடையவர்களாக வாழ்கின்றனர்.

நிலாத் திங்கள் துண்டத்தான் ஆன சிவனே நிலாத் திங்கள் துண்டத்தான் ஆன விஷ்ணுவாக இந்த ஏகம்பன் கோயில் உள்ளே நிற்பது வியப்பிலும் வியப்புதானே!

 

ஏகம்பன் கோயில் கொள்ளும் இந்தக் காஞ்சி மிக்க சரித்திரப் பிரசித்தி பெற்றதொரு நகரம்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னமேயே சோழநாட்டை ஆண்ட கரிகால் பெருவளத்தான் என்னும் திருமாவளவன், சாத்தன் அருளால் காஞ்சியில் செண்டு (சவுக்கு) பெற்றான். அந்தச் செண்டு கொண்டே இமயத்தை அடித்தான் என்றும் சிலப்பதிகாரம் கூறும்.

பெரும்பாணாற்றுப் படையில் உருத்திரங் கண்ணனாராலும், ஷேத்திர வெண்பாவில் ஐயடிகள் காடவர்கோனாலும், பின்னர் மூவர் முதலிகளாலும் பாடப் பெற்ற பெருமையுடையது காஞ்சி.

மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன், பரமேசுவர வர்மன், ராஜசிம்மன் முதலிய பல்லவ மன்னர்கள் இருந்து ஆண்ட, கலை வளர்த்த தலமாகவும் இருந்திருக்கிறது.

இவற்றையெல்லாம் விடச் சீன யாத்திரீகன் கியூன் சாங், இந்த நகரத்துக்கு கி.பி.640இல் வந்து, பௌத்த சமய உண்மைகளைப் பரப்பினான் என்றும், இந்நகரத்தின் பெருமைகளை விரிவாக எழுதி வைத்தான் என்றும் அறிகிறோம்.

அதோடு இங்கு ஓர் அரிய சர்வ கலாசாலையே அந்தக் காலத்தில் இருந்தது என்றும், இங்கிருந்தே வடநாட்டு நாளந்தா பல்கலைக் கழகத்துக்குத் தர்மபாலர் என்ற பேராசிரியர் சென்றார் என்றும், சரித்திரம் கூறுகிறது.

இதெல்லாம் தெரிந்து தானோ என்னவோ, ‘கல்வி வரையிலாக் கச்சி’ என்றார் அப்பர்.

இந்தப் பாட்டினில் அடங்காக் காஞ்சியின் பெருமையைக் காஞ்சி புராணத்திலே விரிவாகக் காணலாம்.

இந்தப் பரந்த வையகமே கழனி. அந்த வையத்தின் தேயங்களே நன்செய்கள். அந்தச் செய்யிலே வளரும் கரும்பே தொண்டை வளநாடு.

அக்கரும்பின் சாறால் ஆகிய கட்டியே கச்சி. அச்சர்க்கரைக் கட்டியில் உள்ள இனியசுவையே கச்சி ஏகம்பன் கோயில் என்று கூறும் ஒரு பழம் பாட்டு.

இனி அச்சர்க்கரைக் கட்டியைச் சுவைப்பது உங்கள் பேறு.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

 

 

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள்

தமிழகத்தின் புகழ் பெற்ற கோவில்களைப் பற்றி ஆராய்ந்து சிறப்பான கட்டுரைகள் எழுதியவர். தமிழில் பயண இலக்கியம் படைத்தவர்களில் இவர் முக்கியமானவர்.

இவர் திருநெல்வேலியில் தொண்டைமான் முத்தையா – முத்தம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். இவரது தம்பி எழுத்தாளர் தொ. மு. சிதம்பர ரகுநாதன். பாஸ்கர தொண்டைமான் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார்.

இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர் வனத்துறையில் பணிக்கு சேர்ந்தார். படிப்படியாக பதவி உயர்வு பெற்ற அவருக்கு தமிழக அரசு இந்திய ஆட்சிப் பணி அங்கீகாரம் அளித்து வேலூர் மாவட்ட ஆட்சியராக்கியது. 1959 ஆம் ஆண்டு அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

தமிழகமெங்கும் பயணம் செய்து கோயில்கள், வழிபாட்டுத் தலங்களை ஆராய்ந்து கல்கி இதழில் “வேங்கடம் முதல் குமரி வரை” என்ற தலைப்பில் அவற்றைப் பற்றி கட்டுரைகள் எழுதினார்.

2009-10 இல் தமிழக அரசு தொண்டைமானது நூல்களை நாட்டுடைமையாக்கியது.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.