ஏக்கம்

ஏக்கம் – கதை

அது ஒரு புதன்கிழமை இரவு நேரம். சமையலறையில் அம்மாவின் உதவியோடு வெஜிட்டபிள் பாஸ்தா சமைத்துக் கொண்டிருந்தாள் பத்து வயது பிரியா.

எப்பொழுதும் துறுதுறுவென்று, எதிலும் அதிகம் ஆர்வம் காட்டி அதனைச் செய்து முடித்து மற்றவர்களின் பாராட்டைக் கேட்பதில் அப்படியொரு ஆனந்தம் பிரியாவிற்கு.

‘மற்றவர்கள் பாராட்டுவதைவிட தனது அப்பாவிடம் பாராட்டு பெறுவதே பேரானந்தம்’ என நினைத்துக் கொள்வாள். அன்று சமைத்த பாஸ்தாவினை எடுத்துக் கொண்டு அப்பாவிடம் வந்தாள்.

“அப்பா! நான் முதல் தடவை வெஜிடபிள் பாஸ்தா, அம்மாவோட சேர்ந்து சமைச்சிருக்கேன். என் முதல் சமையல் இது. இதை டேஸ்ட் பண்ணி பார்த்திட்டு, எப்படி இருக்குன்னு சொல்லுங்க!” என்று பிரியா தன் அப்பா ஆனந்திடம் புன்னகைத்தபடியே சொன்னாள்.

ஆனந்த் தனது மடிக்கணினியில் மூழ்கி இருந்தால் அவளைக் கண்டு கொள்ளவில்லை.

“பிரியா! அப்பாவுக்கு நிறைய வேலை இருக்குமா. நான் இப்போ சாப்பிடுற மூடுல இல்லை. நீ உள்ள வெச்சிடு. நான் அப்புறம் எடுத்து சாப்பிடுறேன்.” ஆனந்த் தனது மடிக்கணினியில் வேலை பார்த்தபடியே சொன்னார்

“இல்லைப்பா! நான் உங்களுக்காக அன்பா, ஆசையா பண்ணேன். ஒரே ஒரு தடவை, ஒரு வாய் டேஸ்ட் பண்ணி பார்த்திட்டு சொல்லுங்க. ப்ளீஸ்!” பிரியா, ஆனந்திடம் ஏக்கத்தோடு கெஞ்சியபடி கேட்டாள்.

“ஆமா! உனக்கு ஒரு தடவை சொன்னா பத்தாதா? அறிவில்லை?

அதான் எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் சாப்பிடுற மூடுல இல்லைனு சொன்னேன் இல்லை.

நான் உன்னை போட்டு அடிச்சிடுவேன். அடி வாங்குறதுக்குள்ள, நீயாவே இந்த இடத்தை விட்டு போயிடு!” ஆனந்த் கோபத்தில் எரிந்து விழுந்தார்.

பிரியாவுக்கு தூக்கி வாரிப் போட்டது. அவள் கண்கள் கலங்கின.

அவள் அழுதுக்கொண்டே, அந்த இடத்தை விட்டு புறப்பட்டு அவளது அம்மாவிடம் வந்து நடந்த நிகழ்வுகளைச் சொன்னாள்.

அவளது அம்மா உமாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வர ஆனந்திடம் வேகமாய் வந்தாள்.

“பிரியா எவ்வளவு ஆசையா வெஜிடபிள் பாஸ்தா பண்ணியிருக்கா. நீங்க சாப்பிடகூட வேண்டாம். சும்மா ஒரு வாய் டேஸ்ட் பண்ணி பார்த்திட்டு, நல்லா இருக்கா? இல்லையானு சொல்லலாமில்ல. நீங்க இப்போ எல்லாம் அவளுக்கு நேரமே செலவழிக்கிறதில்லை. பாருங்க! அவ தனிமையில இருக்கிற மாதிரி ஃபீல் பண்றா” உமா ஆவேசமாய் சொன்னாள்.

“என்னை என்ன பண்ண சொல்ற?

நான் அவளுக்கு என்ன குறை வெச்சேன். லேப்டாப், டி.வி, பொம்மைங்க, கேம்ஸ்னு அவ கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தேன்.

நானும் பிஸியா இருக்கேன். ஆபீஸ் வேலை முடியவே மாட்டேங்குது.

என்னை என் வேலையை விட்டுட்டு, அவளோட விளையாட்டிகிட்டே இருக்க சொல்றியா? இதோ பாரு உமா! நீ எதுவும் பேசாத. எனக்கு ஆபீஸோட வேலை நிறைய இருக்கு. என்னை டிஸ்டர்ப் பண்ணாத ப்ளீஸ்!” உமா பேச வருவது எதையும் கேட்காமல் அவளை தடுத்தான் ஆனந்த்.

மூன்று நாட்கள் கழிந்தன.

பிரியா எதையும் மனதில் வைத்துக் கொள்ளவில்லை. வழக்கம்போல், அப்பாவிடம் சகஜமாகவே பழகினாள்.

அது ஒரு சனிக்கிழமை.

“அப்பா! நாளைக்கு சன்டே. நம்ம பார்க்குல த்ரோபால், பாட்மிண்டன் விளையாட போகலாம்னு சொன்னீங்க. நாம விளையாட போறோம் இல்ல” ஏக்கத்தோடு கேட்டாள் பிரியா.

“இல்லம்மா. சாரி! மன்னிச்சிடு! நாளைக்கும் அப்பாவுக்கு ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு. என்னால நாளைக்கும் வர முடியாது. நீ உன் ஸ்கூல் ப்ரெண்ட்ஸோட சேர்ந்து விளையாடு”

“அப்பா! நீங்க தானே சொன்னீங்க. நாளைக்கு சன்டே. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து விளையாட போகலாம்னு” பிரியாவில் குரல் வருத்தத்தில் பிசிறடித்தது.

“ஆமா! உனக்கு ஒரு தடவை சொன்னா அறிவில்ல. அதான் எனக்கு ஆபீஸ்ல நாளைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. என்னால வர முடியாதுனு சொல்றேன் இல்ல. போ உள்ள!” ஆனந்த் பிரியா மேல் கோபத்துடன் எரிந்து விழுந்தார்

தன் ஆசைகள் சரிந்து அவள் மீது விழுவதாய் உணர்ந்தாள். அவள் சந்தோஷம் மொத்தமும் அவளை விட்டு விலகியதாய் உண்ர்ந்தாள்.

அன்றைய இரவு கவலைகளோடு நகர்ந்தது.

மறுநாள் அவள் பள்ளிக்கூடம் புறப்பட்டாள்.

காலை பதினொன்று மணியிருக்கும், உமாவிற்கு பிரியா படிக்கும் பள்ளியிலிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது

“ஹலோ! சொல்லுங்க!”

“நான் உங்க பொண்ணு பிரியா படிக்கிற ஸ்கூலோட பிரின்சிபால் பேசுறேன். உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். அதை கேட்டு நீங்க அதிர்ச்சி ஆகக்கூடாது!”

“சரி! சொல்லுங்க!” உமா பதட்டத்தை வெளிக்காட்டாமல் கேட்டாள்.

“உங்க பொண்ணு பிரியா இன்னைக்கு ஸ்கூல்ல மயக்கம் போட்டு கீழ விழுந்துட்டா. இப்ப மயக்கம் தெளிஞ்சி நார்மலா இருக்கா. இருந்தாலும் ரொம்ப சோர்வா இருக்கா!”

“அப்படியா?” கேட்ட உமாவுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது.

“ஆமா! பிரியா ரொம்ப வீக்கா இருக்கா போல. நாங்க ரெண்டு வாரம் மெடிக்கல் லீவு தரோம். நீங்க உங்க பொண்ணு ப்ரியாவை ஒரு நல்ல டாக்டரா பார்த்து காட்டுங்க. மெடிக்கல் செக்-அப், ட்ரீட்மென்ட் எடுங்க. ஒன்னும் அவசரமில்லை. பொறுமையா சரியான பிறகு, ஸ்கூல்ல வந்து படிக்கட்டும். அவ நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். நாங்க இப்போ பிரியாவை ஒரு ஆயாகூட அனுப்பி வைக்கிறோம். அவங்க உங்க பொண்ணு பிரியாவை வீட்டுல வந்து விட்டுட்டு போயிடுவாங்க. பிரியாவை பத்திரமா பார்த்துக்கோங்க!”

“ஓகே! ஓகே! மேடம்!”

பிரியா பற்றி உமா சொன்ன வார்த்தைகளைக் கேட்ட ஆனந்த் அதிர்ச்சியானான்.

அலுவுலகத்திற்கு அரை நாள் விடுமுறை எடுத்து விட்டு, வீட்டிற்கு விரைந்து ஓடி வந்தான். உமாவும், ஆனந்தும் வீட்டிற்கு மருத்துவரை வரவழைத்தார்கள். மருத்துவர் வீட்டிற்கு வந்து, பிரியாவை பரிசோதித்து சிகிச்சை அளித்தார்

“ஒண்ணும் பயப்பட தேவையில்லை. உங்க பொண்ணு உடம்புக்கு ஒன்னும் இல்லை. அவ நார்மலா இருக்கா. நிறைய யோசிக்கிறதுனால, அதிகமான சிந்தனையால குழந்தைகளுக்கு இப்படி ஸ்ட்ரெஸ், டிப்ரஷன் வரும்”

“டாக்டர்! சின்ன குழந்தைகளுக்கு ஸ்ட்ரெஸ், டிப்ரஷன் வருமா? என்னால நம்ப முடியல!” ஆனந்த் அதிர்ச்சியாய் கேட்டான்.

“சின்ன குழந்தைகளுக்கு கூட கண்டிப்பா வரும். எமோஷனல் சப்போர்ட் கிடைக்கலனா, அவங்களுக்கும் ஸ்ட்ரெஸ், டிப்ரஷன் வரும். அந்த சமயம் ரொம்ப யோசிப்பாங்க. அம்மா, அப்பா, படிப்பு, விளையாட்டு பத்தி கவலைப்படுவாங்க. கூடப்படிக்கிற பசங்க யாராவது கேலி பண்ணா, அதை நினைச்சி கவலைப்படுவாங்க.

அன்பு, பாசத்துக்காக ஏங்குவாங்க. நீங்க நிறைய அன்பு, பாசம் அவங்க மேல காட்டணும். நீங்க சரியான அன்பு, பாசம் காட்டலைனா, எப்போ பார்த்தாலும் அதையே நினைச்சி, நினைச்சி கவலைப்படுவாங்க. தன்னை தானே காயப்படுத்திப்பாங்க.

உங்க பொண்ணோட கண்ணு சொல்லுது, ஸ்கிரீன் டர்னிங் அதிகமா இருக்குனு. அவ எப்போ பார்த்தாலும் லேப்டாப், போன், கேம்ஸ் ரொம்ப அதிகமா யூஸ் பண்றானு தெரியுது. நீங்க அவளுக்கு சரியான அன்பு, பாசம் காட்டுங்க. நேரம் செலவழியுங்க. அவ சரியாகிடுவா!” மருத்துவர் ஆனந்திற்கு அறிவுரை சொன்னார்

“சரிங்க! டாக்டர் நான் நல்லா பாத்துக்குறேன்”

“நான் எழுதி தந்தத மருந்து வாங்கிக் கொடுத்திடுங்க. எல்லாம் சரியாகிடும். பத்திரமா பாத்துக்கோங்க!” மருத்துவர் சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டு சென்றார்

“இப்போ சந்தோஷமா உங்களுக்கு? நான் எவ்வளவோ புரிய வைக்க முயற்சி பண்ணினேன். நான் சொல்ற பேச்சை கேட்காம லேப்டாப், போன், கேம்ஸ் ஜாய்ஸ்டிக், விலை உயர்ந்த கெஜெட்ஸ் இது அதுனு வாங்குனீங்க. அப்புறம், குடும்ப பொறுப்பை காத்துல பறக்கவிட்டு மறந்துடீங்க!” உமா ஆனந்த் மீது கோபப்பட்டாள்

“ஆமா உமா! நீ சரியா தான் சொல்ற. என்னை மன்னிச்சுடு! என் சுயநலத்துக்காக, நம்ம பொண்ணு பிரியா உடம்பை கெடுத்துட்டேன். ரெண்டு பேரும் என்னை மன்னிச்சிடுங்க!

இனிமேல, நான் உங்க ரெண்டு பேருக்கும் நேரம் செலவழிப்பேன். நான் பண்ணது பெரிய தப்பு. என் தப்பை உணர்ந்துட்டேன். அதை கண்டிப்பா திருத்த முயற்சி பண்றேன்.

இனிமேல, பிரியாவோட விளையாடுவேன். பிரியாவோட சாப்பிடுவேன். பிரியாவுக்கு படிப்பு சொல்லி தரேன். பிரியாவோட ஸ்கூல் ப்ராஜெக்ட் கூட பண்றேன்.

பிரியா என்ன சொல்லுறாளோ அதெல்லாம் செய்றேன். ஆபீஸ் வேலை இருந்தாலும், பிரியாவிற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். இனிமேல, என் நேரமெல்லாம் நம்ம பொண்ணு பிரியாவுக்கு தான் முழுசா செலவு பண்ணுவேன்” ஆனந்த் தனது தவறை உணர்ந்தார், திருந்தினார்

தனது கணவர் ஆனந்த் திருந்தியது நினைத்து உமா சந்தோஷப்பட, இழந்த ஆனந்தம் அந்த வீட்டில் மீண்டும் குடியேறியது.

எம்.மனோஜ் குமார்

எம்.மனோஜ் குமார் அவர்களின் படைப்புகள்