எனக்கான வெற்றிடங்கள்
நிரப்ப யாதும் வரலாம்
இது தானென்றில்லை
வலித்திடும் வெற்றிடங்களில் நியாயங்கள்
தேடித்தேடி அலைகின்றன
ஒன்றும் ஏற்படுத்தாத வெற்றிடங்கள்
என்று ஒன்றுமிலை
மண் பாறையாகிறது
பாறை மண்ணாகிறது
திடமானது
நீராகிறது
நீர் திடமாகிறது
இல்லாமை இருப்பைச்
சொல்லித் தருகிறது
விளங்காத புரிதல்கள் விளக்கமானாலும்
விளங்காது அறிதல்கள்
சிறுதுளி வெளிப்பாடு
பேரண்ட உண்மையை
ஜீரணிக்கச் செய்யும்
யாருமற்ற பிரதேசம் என்றிலை
ஏதோவொன்று
வாழ்கிறது யாதுமாக…
வெற்றிடங்கள் என்றிலை
ஏதோவொன்று
வாழ்கிறது யாதுமாக…
(ஜி.குப்புசாமி அவர்களின் மொழிபெயர்ப்பில் ஹாருகி முரகாமியின் ”பூனைகளின் நகரம்” சிறுகதையிலிருந்த இலக்கிய வளமிக்க வாக்கியங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான வார்த்தைகள்)

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
மொழிபெயர்ப்பாசிரியர் ஜி குப்புசாமி அவர்களுக்கு எப்போதும் தனி அடையாளம் உண்டு.
அவர் மொழிபெயர்ப்பில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.
அந்த வகையில் இந்த பூனைகளின் நகரம் எனும் இந்த கதை படைப்பாளியை மீறிய மொழிபெயர்ப்புக்கான ஒரு வசீகரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹாருகி முரகாம் எழுதிய உணர்வை அச்சு பிசகாமல் மொழிபெயர்ப்பு இலக்கியமாக ஜி. குப்புசாமி தந்திருக்கிறார்.
பூனைகளின் நகரம் குறித்த உரையாடல் அதிக அளவுக்கு நிகழ்ந்திருப்பதாக அறிவேன்.
திரும்பவும் மறுவாசிப்பு செய்வதை போல உங்களுடைய கவிதை அத்துனை அழகாக கவிதையின் ஆழத்தை சிலாகித்து பேசுகிறது.
தந்தைக்கும் மகனுக்குமான உறவு எத்தனை உயர்வானது; அதை எப்படி பேணி பாதுகாக்க வேண்டும் என்பதை எல்லாம் அந்தக் கதை நமக்கு சொல்லும் பாடம்.
ஆனால் டோங்கோ தன்னுடைய அப்பாவால், எவ்வளவு அவமானப்பட்டு போகிறான், கூனி நிற்கிறான், மனம் கூசுகிறான் என்பதை மிக நேர்த்தியாக இந்த படைப்பில் ஆசிரியர் வெளிப்படுத்துகிறார்.
ஒரு நீண்ட சிறுகதை அல்லது ஒரு குறுநாவல் என்று சொல்லும் அளவிற்கு நீண்டதொரு கதை இது.
இதை ஒரு கவிதை வடிவில் ஆக்கி தந்த அழகை பார்க்கும்போது நிச்சயம் பாராட்டுவதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.
நானும் பூனைகளின் நகரம் குறித்து ஒரு விமர்சனம் எழுத வேண்டுமென்று என்னுள் ஆசை துளிர் விடுகிறது.
எதை குறித்தும் கவலைப்படாமல் வாழ்க்கைக்கும், மரணத்திற்கும் இடையில் இருக்கும் அந்த இடைவெளியை அத்தனை அழகாக கடக்க முயற்சிக்கும் பேராசிரியர் ஐயா சந்திரசேகர் அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
மகிழ்ச்சி!
காகிதங்களின் வெற்றிடத்தை நிரப்புவதெல்லாம் கவிதையில்லை.
காகிதங்களின் வெளியை கவிதைகள் நிரப்புகின்றன.
அருமை ஐயா!