ஏனாதிநாத நாயனார் – உயிர் கொடுத்த உத்தமர்

ஏனாதிநாத நாயனார் திருநீறு அணிந்து சிவனடியார் வேடமிட்டு போரிட வந்த பகைவரை, சிவனடியாராகக் கருதி திருநீறு அணிந்திருந்த காரணத்தால் எதிர்க்காது இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்.

புகழ்பெற்ற அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். ஆவரின் கதையை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஏனாதிநாதர் கும்பகோணத்திற்கு தென்கிழக்கில் சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஏனநல்லூர் என்னும் ஊரில் பிறந்தார். ஏனநல்லூர் முற்காலத்தில் எயினனூர் என்று அழைக்கப்பட்டது.

ஏனாதிநாத நாயனாரின் முன்னோர்கள் சோழநாட்டு சேனாதிபதியாக விளங்கியவர்கள். அந்நாளில் அரசன் சேனாதிபதிக்கு நெற்றியில் அணிய ஏனாதிப்பட்டம் என்ற ஆபரணத்தை வழங்கினர். ஆதலால் சேனாதிபதிக்கு ஏனாதி என்ற பெயரும் வழக்கில் இருந்தது.

ஏனாதிநாதர் இறைவனான சிவபெருமானிடமும், அவரின் அடியார்களிடமும் மாறாத பக்தி கொண்டிருந்தார். இவர் மெய்ப்பொருள் நாயனாரைப் போலவே திருநீறு அணிந்தவர்களை சிவமாகவேக் கருதி வழிபட்டு வந்தார்.

ஏனாதிநாதர் வாட்பயிற்சி அளிக்கும் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வந்தார். இவரிடம் நல்ல வாட்பயிற்சி திறமையும், நல்லொழுக்கமும் நிறைந்து இருந்தது. ஆதலால் ஏனாதிநாதரிடம் போர்க்கலையைக் கற்றுக் கொள்ள ஆட்கள் மிகுந்து பயிற்சிக்கூடம் நிரம்பி வழிந்தது.

ஏனாதிநாத நாயனார் வாட்பயிற்சி கூடத்தின் மூலம் முறையாக ஈட்டிய வருவாயை சிவனடியார்களுக்கு தொண்டு செய்வதிலேயே செலவழித்தார்.

அவ்வூரில் அதிசூரன் என்றொருவனும் வாட்பயிற்சி அளிக்கும் பள்ளி ஒன்றை நடத்தி வந்தான். ஆனால் திறமையிலும் ஒழுக்கத்திலும் ஏனாதிநாதரைவிட குறைவாக விளங்கியதால் ,அவனிடம் பயிற்சி பெறுவோர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருந்தது.

குறைந்த வருவாய் ஈட்டி வந்த அதிசூரனுக்கு தொழில் போட்டி காரணமாக ஏனாதிநாத நாயனாரிடம் பகையுணர்வு தோன்றியது. அப்பகையுணர்வு நாளடைவில் அதிகரித்துக் கொண்டே சென்றது.

ஒருநாள் தன்னுடைய மாணக்கர்களையும் சுற்றத்தார்களையும் அழைத்துக் கொண்டு ஏனாதிநாதரின் வாட்பயிற்சி கூடத்திற்கு சென்று போருக்கு அழைத்தான் அதிசூரன்.

வீரமும், விவேகமும் நிறைந்த ஏனாதிநாதர் தனியே அதிசூரனுடன் போருக்குச் சென்றார். ஆதனை அறிந்த அவருடைய மாணவர்களும், சுற்றத்தார்களும் ஏனாதியாருக்கு துணையாகச் சென்று அதிசூரனை எதிர்கொண்டனர்.

போர்த்திறமை மிக்க ஏனாதிநாத நாயனாரை எதிர்கொள்ள இயலாமல் அதிசூரன் தோற்று ஓடினான். அவமானத்தால் அவனுடைய மனம் நிம்மதி இல்லாமல் தவித்தது. குறுக்கு வழியில் சென்றே ஏனாதிநாத நாயனாரை வெற்றி பெற முடியும் என்று எண்ணினான்.

ஏனாதிநாத நாயனார் திருநீறு அணிந்தவர்களை சிவமாகக் கருதுபவர் என்பதை அதிசூரன் தெரிந்து வைத்திருந்தான். ஆதலால் ஏனாதிநாதரை வெற்றி கொள்ள திட்டம் ஒன்றைத் தீட்டினான்.

அதன்படி ஏவலாள் ஒருவனிடம் படைதிரட்டி போர் செய்வதால் ஏராள பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்படுகிறது.

ஆதலால் வாட்பயிற்சியாளர்கள் இருவரும் மட்டும் போரிட்டு திறமையை நிரூபிப்போம் என்றும், போரிட குறிப்பிட்ட இடத்தையும், நாளையும் ஏனாதிநாதரிடம் தெரிவிக்கும்படி அனுப்பினான்.

ஏனாதிநாதரும் அதிசூரனின் அறைகூவலை ஏற்றுக் கொண்டார். போரிடக் குறிப்பிட்ட நாளன்று போரிடும் இடத்திற்கு ஏனாதிநாத நாயனார் வந்தார்.

அதிசூரன் அங்கு வந்திருக்கவில்லை. அதிசூரனை எதிர்நோக்கி அவ்விடத்தில் ஏனாதிநாதர் காத்திருந்தார்.

அதிசூரனோ உடலிலும், நெற்றியிலும் வெண்ணீறு பூசிக் கொண்டு உடலைக் கவசத்தாலும், நெற்றியை கேடையத்தாலும் மறைத்துக் கொண்டு கையில் வாளினை ஏந்தியபடி ஏனாதிநாத நாயனாரை நெருங்கினான்.

இருவருக்கும் இடையில் போர் துவங்கியது. அதிசூரன் சிறிது நேரம் கேடையத்தால் நெற்றியை மறைத்தபடியே போர் புரிந்தான். ஏனாதிநாதர் தன்னுடைய வாளால் அதிசூரனின் கவசத்தைக் கிழித்தார். அவன் உடலில் வெண்ணீறு பளிச்சிட்டது.

அதனைக் கண்டதும் ஏனாதிநாதர் அதிர்ச்சி அடைந்தார். அப்போது அதிசூரன் நெற்றியிலிருந்த கேடையத்தை விலக்கினான்.

அவன் நெற்றியிலும் வெண்ணீற்றைக் கண்ட ஏனாதிநாதர் ‘இவர் சிவமன்றோ! என்னைக் கொல்வதே இவருடைய விருப்பம் என்றால் அவ்வாறே நடக்கட்டும்’ என்று எண்ணினார்.

‘வாளையும் கேடையத்தையும் நாம் நீக்கினால் நிராயுதபாணியைக் கொன்றதாக அவச்சொல் இச்சிவனடியாருக்கு ஏற்படும்’ என்று நினைத்தபடி கைகளில் வாளையும் கேடையத்தையும் ஏந்தியபடியே நின்று விட்டார்.

இத்தருணத்தை எதிர்நோக்கிய அதிசூரன் வாளால் ஏனாதிநாத நாயனாரைக் குத்தி தன்னுடைய எண்ணத்தை நிறைவேற்றினான்.

ஏனாதிநாதரின் திருநீற்று அன்பை உலகு வெளிப்படுத்திய சிவனார் ஏனாதியாரை தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

ஏனாதிநாத நாயனார் குருபூஜை புரட்டாசி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

போர்க்களத்தில் திருநீறு அணிந்த பகைவரையும் சிவமாகக் கருதி எதிர்க்காத இவரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ஏனாதி நாதன்தன் அடியாருக்கும் அடியேன் என்று போற்றுகிறார்.