திருவிழா கொண்டாட வேண்டும் – ஏன்?

திருவிழா

திருவிழா என்றாலே கொண்டாட்டம் தான். திருவிழா என்பது சில குறிப்பிட்ட நாள்களில் மக்கள் ஒன்று கூடி கொண்டாடுவது ஆகும். இதனை உற்சவம், ஊர்வலம் என்றும் பொருள் கொள்ளலாம்.

திருவிழாவின் முக்கிய கோட்பாடே ஒன்று கூடுதல், கூடி உண்ணுதல், கொண்டாடுதல், மகிழ்ச்சியைப் பகிர்தல் ஆகியவை ஆகும்.

பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் வரை திருவிழா என்றவுடன் ஆர்வம் மற்றும் உற்சாகமடைந்து அதனை வரவேற்க தயாராகிவிடுகின்றனர்.

திருவிழாக்கள் ஓர் இடத்தில் உள்ள மக்களின் நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன.

பொதுவாக திருவிழாக்கள் என்பவை மதம் சார்ந்தவையாகவே இருக்கின்றன. அவைகள் ஏதேனும் நிகழ்ச்சிகளை நினைவு கூறும் விதமாகவோ, இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையிலோ அமைந்திருக்கின்றன.

மதத்திற்கு அடுத்தபடியாக அவை வேளாண்மையை மையப்படுத்தி கொண்டாடப்படுகின்றன. உணவு என்பதுதான் உலக உயிர் இயக்கத்திற்கு ஆதாரம்.

பொதுவாக திருவிழாக்களை தனிமனித திருவிழாக்கள், சமுதாய திருவிழாக்கள், நாட்டு விழாக்கள் என வகைப்படுத்தலாம்.

திருமணம், காதுகுத்துதல், மொட்டை போடுதல், திருமணம் போன்றவை தனிமனித திருவிழாக்கள் ஆகும்.

தைப்பொங்கல், தீபாவளி, கிருஸ்துமஸ், ரம்ஜான் போன்றவை சமுதாய திருவிழாக்கள் ஆகும்.

சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி போன்றவை நாட்டு விழாக்கள் ஆகும்.

பழங்காலத்தில் மன்னர்கள் தங்கள் வெற்றியை நினைவு கூறும் விதமாக திருவிழாக்களைக் கொண்டாடியுள்ளனர்.

திருவிழாக்கள் இனம், மதம், மொழி கடந்து உலகில் உள்ள எல்லா மக்களாலும் கொண்டாடப்படுகின்றன.

இந்தியாவில் திருவிழா

இந்தியாவில் திருவிழாக்கள் ஆண்டின் எல்லா பருவங்களிலும் மக்களால் கொண்டாடப்படுகின்றன. இந்தியாவில் திருவிழாக் கொண்டாட்டத்தின்போது மக்கள் தங்கள் வாழிடங்களை தூய்மைப்படுத்துகின்றனர்.

திருவிழாக் கொண்டாட்டத்திற்கு தின் பண்டங்கள் வீட்டிலேயே பெரும்பாலும் தயாரிக்கப்படுகின்றன. திருவிழாக்கள் அன்று நீராடி புத்தாடை அணிவது திருவிழாக் கொண்டாட்டத்தின் முக்கியமானதாக கருதப்படுகிறது.

உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுடன் கூடி விருந்து உண்டு, உரையாடி பொழுதைக் கழிக்கின்றனர்; உரையாடுவதன் மூலம் கவலைகளை மறந்து மகிழ்ச்சியடைகின்றனர்; வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர்.

திருவிழாக்காலம்

இந்தியாவில் ஆங்கில வருடத்தில் செப்டம்பர் முதல் ஜனவரி வரை உள்ள காலம் திருவிழாக்காலம் என்று அழைக்கப்படுகிறது. அந்த காலத்தில் தான் பெரும்பாலான திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

இந்த கால கட்டத்தில் தான் மக்கள் தங்கள் வீட்டிற்கு உபயோகமான பொருட்கள் புதிய ஆடைகள் ஆகியவற்றை வாங்குகின்றனர். தொழில் நிறுவனங்களும் திருவிழாக்கால தள்ளுபடியை அறிவித்து மக்களின் கொண்டாட்டத்தை உற்சாகப்படுத்துவதோடு அதிக வருவாயும் ஈட்டுகின்றனர்.

திருவிழா நகரம்

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மதுரை திருவிழா நகரம் என்று அழைக்கப்படுகின்றது. உலகில் வேறெங்கும் காண முடியாக அளவிற்கு இங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆண்டிற்கு 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன‌. இங்கு 10 நாட்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா மற்றும் தெப்பத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றவை.

ஊர்த்திருவிழா

இந்தியாவில் உள்ள சிறுசிறு கிராமங்களில், ஊர்களில், நகரங்களில் திருவிழாக்கள் தனித்தனியே ஆண்டில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தினத்தில் கொண்டாடப் படுகின்றன‌. இத்திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இத்திருவிழாவின் போது வெளியூர்களில் இருந்து உறவினர்கள் விருந்தினர்களாக வருகை தருவார்கள். வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்களும் ஊர்த் திருவிழாவிற்கு சொந்த ஊருக்கு வருகை தந்து சொந்த பந்தம் நட்புகளுடன் சேர்ந்து கொண்டாட்டத்தில் பங்கு பெறுகின்றனர்.

அன்றாட பணிகளினால் ஏற்பட்ட களைப்பினை போக்கி புத்துணர்ச்சி தருவது இதுபோன்ற திருவிழாக்கள் தான். குடும்பத்தினரோடு இத்தகைய திருவிழாக்களில் கலந்து கொள்வதன் மூலம் குழந்தைகளுக்கு திருவிழாக்களின் முக்கியத்துவம், கலாச்சாரம், பண்பாடு, சமூக நோக்கம் போன்றவற்றைக் கற்றுக் கொடுக்கலாம்.

திருவிழாக்களின் பயன்கள்

திருவிழாக்கள் கொண்டாடுவதன் மூலம் கவலைகள் பாதியாக குறைக்கின்றன.

மகிழ்ச்சியானது இரட்டிப்பு ஆகிறது.

உள்ளப் பகிர்தலின் மூலம் மன அழுத்தங்கள் மறைகின்றன.

திருவிழாக்கள் ஒற்றுமை, பகிர்ந்துண்ணல், விருந்தோம்பல் ஆகியவற்றை வலியுறுத்துகின்றன.

மேலும் இளைய தலைமுறையினருக்கு இவற்றைப் பற்றி கூறுவதன் மூலம் திருவிழாக்களின் நோக்கங்கள், அவற்றின் பயன்கள், கொண்டாடும் முறை ஆகியவை பற்றி தெரிந்து கொள்வதோடு எதிர் காலத்திலும் பாரம்பரியம் மாறாமல் பின்பற்றச் செய்ய‌ முடியும்.

இன்றைய‌ நாட்களில் திருவிழாக்களின் போது மது அருந்துவது என்பது ஒரு சமுதாய சாபக்கேடாக உள்ளது.

மது அருந்துவதால் வீண்வாக்குவாதங்கள், சண்டைச் சச்சரவுகள் ஏற்பட்டு திருவிழா கொண்டாடத்தின் தன்மையையே மாற்றிவிடுகின்றன.

எனவே மது அருந்துவதை விட்டுவிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து எல்லோரும் ஒற்றுமையுடன் திருவிழாவை கொண்டாட வேண்டும் என்ற சூழ்நிலையை நமது கடமை ஆகும். அப்போதுதான் திருவிழாக்கள் கொண்டாடுவதன் உண்மையான நோக்கம் நிறைவேறும்.

வ.முனீஸ்வரன்

Visited 1 times, 1 visit(s) today

Comments

“திருவிழா கொண்டாட வேண்டும் – ஏன்?” மீது ஒரு மறுமொழி

  1. […] முன்னோர்கள் திருவிழாக்களை நடத்தினார்கள். அவர்களைத் தொடர்ந்து […]