“அம்மா, நீ ஏன் பாஸ் ஆனாய்?” என்றாள் நான்கு வயது மலர் தன் தாய் மங்கையை மலங்க பார்த்தபடி.
“ஏன்டா, என் கன்னுக்குட்டி? நீ என்ன சொல்ற. அம்மாக்கு புரியல.”
“இல்லம்மா, நீ பேங்க் பரீட்ச்சைல பாஸ் பண்ணுனதுனாலதான இப்ப வேலைக்கு போற. என்னையும் பாப்பாவையும் சரியா உன்னால கவனிக்க முடியல.
நாங்க சாயங்காலம் ஸ்கூல் விட்டு வரப்ப நீ வீட்ல இருக்க மாட்ட. ஆபீஸ்ல இருந்து சாயந்திரம் ஆறு மணிக்கு மேலதான வீட்டுக்கு வர்ர. அதான் மலர் உன்ன பாத்து நீ ஏன் பாஸானன்னு கேட்கா.” என்றான் எட்டு வயது மணி.
மங்கை மலரிடம் “என் குட்டிச் செல்லம், அம்மா வேலைக்கு போறதுனாலதான உனக்கு நிறைய டிரஸ், பொம்மங்க அப்புறம் பாப்பா கேட்டத எல்லாம் உடனே அம்மாவால வாங்கி கொடுக்க முடியுது.” என்றாள்.
“இல்லம்மா, நாங்க ஸ்கூல் விட்டு வர்றப்ப நீ வீட்ல இருக்கணும். எங்களுக்கு நீயே பாடங்கள சொல்லி கொடுக்கணும். நீ எங்களோடேயே இருக்கணும். அததான் நானும் பாப்பாவும் உன்கிட்ட கேக்குறோம்.” என்றான் மணி தீர்க்கமாக.
மங்கைக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. குழந்தைகளை எப்படி சமாதானப்படுத்துவது என்று யோசித்தாள்.
“சரிடா, கண்ணுங்களா, பார்ப்போம்.” என்றாள்.
நாட்கள் நகர்ந்தன. அந்த வார ஞாயிற்று கிழமை மதியம் சாப்பிட்டுவிட்டு ஓய்வாக இருக்கும்போது குழந்தைகள் கூறியது மங்கையின் நினைவிற்கு வந்தது. அப்போது பழைய நாட்களை மங்கை அசை போட்டாள்.
மங்கையின் குடும்பம் மிடில் கிளாஸ் வகையைச் சார்ந்தது. அப்பா தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டஸ் அதிகாரியாக வேலை பார்த்தார். மங்கைக்கு அக்காவும், தங்கையும் என மூன்று பெண்கள் அவர்கள் வீட்டில் இருந்தனர்.
அக்காவிற்கு திருமணம் நிச்சயமானபோதுதான் வங்கி வேலைக்கு மங்கை விண்ணப்பித்திருந்தாள். தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டே வங்கி வேலைக்கும் படித்தாள்.
வங்கித் தேர்வின் முடிவுகள் வந்தபோது “அம்மா, நான் பாஸாகி விட்டேன்.” என்று மனம் முழுவதும் மகிழ்ச்சியாக கத்திக் கொண்டு அம்மாவை கட்டி அணைத்தாள்.
மங்கையின் தங்கை “நம்முடைய கஷ்டங்களுக்கு உன் மூலம்தான் தீர்வு கிடைக்கப் போகுது. கடவுள் கண்ணைத் திறந்துட்டார்.” என்றாள் கண்களில் நீர்தம்ப.
மங்கை வங்கி வேலையில் சேர்ந்தது அப்பாவின் பொருளாதாரத்திற்கு வலு சேர்த்தது.
மங்கைக்கும் அவளுடைய தங்கைக்கும் நிறைய நகைகள் சேர்த்து அப்பா இருவருடைய திருமணத்தையும் ஜாம் ஜாம் என்று நடத்தினார்.
மங்கைக்கு முதல் குழந்தை பிறந்து மீண்டும் வேலையில் சேரும் வேளையில் அம்மாவும் அப்பாவும் குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்கு வசதியாக மங்கையின் வீட்டிற்கு அருகே குடி வந்தனர்.
மங்கையின் இரண்டாவது குழந்தைக்கு இரண்டு வயதாகும்போது பணி உயர்வின் காரணமாகக் குடும்பத்துடன் சென்னைக்கு மாற்றலாக வேண்டியதானது.
மங்கையின் அம்மா அப்பா ஊரிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அதன்பின்தான் குழந்தைகளை பார்த்துக் கொள்வது மங்கைக்கு சிரமமாக மாறியது.
வீட்டினை பராமரிக்கவும், குழந்தைகளை பள்ளிவிட்டு வந்ததும் பார்த்துக் கொள்ளவும் வேலையாளை நியமித்து சிரமத்தை குறைத்துக் கொள்ளலாம் என்று எண்ணி வேலையாளையும் நியமித்தாள்.
தாத்தா பாட்டியின் கவனிப்பில் இருந்த குழந்தைகள் வேலையாளின் கவனிப்பை ஏற்றுக் கொள்ளச் சிரமப்பட்டனர்.
ஒரு நாள் குழந்தைகள் அவர்களின் அப்பாவிடம் வேலையாளின் கவனிப்பைப்பற்றி சொல்லியபோது ‘உங்கம்மா, பேங்க் பரீட்சை பாஸ் பண்ணுனதுதான் நம்ளோட கஷ்டத்துக்கு காரணம்’ என்று எரிச்சலுடன் கூறிவிட்டார்.
அது குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதிந்தது. அதனால்தான் மலர் மங்கையிடம் ‘நீ ஏன் பாஸ் ஆனாய்?’ என்று கேட்டுவிட்டாள்.
அன்றைய சூழ்நிலையில் பேங்க் பரீட்சையில் பாஸாகி வேலைக்குச் சென்றது உற்சாகத்தையும், ஆனந்தத்தையும் பொருளாதார வளத்தையும் கொடுத்தது.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் வேலைக்கு செல்வது குடும்பத்தை கவனிக்க இயலவில்லை என்ற விரக்தியையும் சிரமத்தையும் கொடுக்கிறது.
நான் பேங்க் பரீட்சையில் ஏன் பாஸ் ஆனேன்? அன்றைக்கு மகிழ்ச்சியளித்த வேலை இன்றைக்கு ஏன் கவலை அளிக்கிறது?
சூழ்நிலைதான் என்னுடைய மனமாற்றத்திற்கு காரணமா?. எதிர்காலமாவது என் குழந்தையின் கேள்விக்கு விடை அளிக்குமா? என்று எண்ணி ஏக்கத்துடன் எதிர்காலத்தை நோக்கினாள் மங்கை.
மறுமொழி இடவும்