புத்திசாலி, அதிபுத்தசாலி என இரு பூனைகள் இருந்தன. அவை இரண்டும் நட்புடன் திகழ்ந்தன.
ஒரு சமயம் அவ்விருவரும் கடைவீதிப் பக்கம் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு ரொட்டி ஒன்று கிடைத்தது.
ரொட்டியை கிடைத்தவுடன் புத்திசாலியும், அதிபுத்திசாலியும் ரொட்டியை தன்னுடைய தாக்கிக் கொள்ள நினைத்தன.
புத்திசாலி அதிபுத்திசாலியிடம் “நான்தான் முதலில் ரொட்டியைப் பார்த்தேன். ஆதலால் ரொட்டி எனக்கே சொந்தம்” என்று கூறியது.
அதிபுத்திசாலியோ “நான் வயதில் உன்னைவிட இளையவன். ஆதலால் ரொட்டி எனக்கே சொந்தம்” என்று கூறியது.
இருவரும் சண்டையிட ஆரம்பித்தனர். நீண்ட நேரம் சண்டைக்குப் பின் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது இருவருக்கும் பொதுவான நடுவர் ஒருவர் தேர்ந்து எடுப்பது எனவும், அவரின் முடிவுக்கு இருவரும் கட்டுபடுவது எனவும் தீர்மானித்தனர்.
தங்களுக்கான நடுவரைத் தேடி இருவரும் அலைந்தனர். இறுதியில் அவர்கள் குரங்கு குப்பனைச் சந்தித்தன.
குரங்கு குப்பனிடம் புத்திசாலி நடந்தவைகள் அனைத்தையும் கூறி தங்கள் இருவருக்கும் நியாமான தீர்ப்பினை வழங்கும்படி கூறியது. அதிபுத்திசாலியும் புத்திசாலி கூறியதை ஆமோதித்தது.
குரங்கு குப்பன் ரொட்டியைப் பார்த்ததும் எப்படியாவது இப்பூனைகள் இரண்டையும் ஏமாற்றி ரொட்டியை தான் மட்டுமே அடைந்துவிட வேண்டும் என்று எண்ணியது.
குரங்கு குப்பன் பூனைகளிடம் “உங்கள் இருவருக்கும் ரொட்டியை சமமாக பங்கிட்டுத் தருகிறேன். ரொட்டியை என்னிடம் தாருங்கள்” என்று கூறி ரொட்டியைப் பெற்றுக் கொண்டது.
பின் ரொட்டியை இரண்டாகப் பிய்த்தது. இரண்டு ரொட்டித் துண்டுகளும் சமமாக இல்லை. ஒரு துண்டு மற்றொன்றைவிட சற்று பெரிதாக இருந்தது.
பின் பெரிய ரொட்டித் துண்டை புத்திசாலியிடம் கொடுத்தது. சிறியதை அதிபுத்திசாலியிடம் கொடுத்தது.
இதனைக் கண்ட அதிபுத்திசாலி குரங்கிடம் “புத்திசாலிக்கு கொடுத்த ரொட்டித் துண்டு பெரிதாக உள்ளது” என்றது.
உடனே குரங்கு புத்திசாலியிடம் இருந்த ரொட்டித் துண்டை வாங்கி சிறிதளவு பிய்த்து தன்னுடைய வாயில் போட்டுவிட்டு மீதியை புத்திசாலியிடம் கொடுத்தது.
புத்திசாலியின் ரொட்டித் துண்டு அதிபுத்திசாலியின் ரொட்டித் துண்டைவிட சிறிதாக இருந்தது.
அதனைக் கண்டதும் புத்திசாலி பூனை குரங்கிடம் அதிபுத்திசாலியின் ரொட்டித்துண்டு தன்னுடைய ரொட்டித் துண்டைவிட பெரிதாக இருப்பதாக குற்றம் சாட்டியது.
உடனே குரங்கு அதிபுத்திசாலியின் ரொட்டித்துண்டினை வாங்கி சிறிது பிய்த்து வாயில் போட்டது. இப்போது அதிபுத்திசாலியின் ரொட்டித் துண்டு புத்திசாலியின் ரொட்டித் துண்டைவிடக் குறைவாக இருந்தது.
மீண்டும் குரங்கிடம் அதிபுத்திசாலி முறையிட புத்திசாலியின் ரொட்டித் துண்டினை சிறிதளவு பிய்த்து வாயில் போட்டது.
இவ்வாறாக இருவரும் மாறி மாறி குறை சொல்ல குரங்கு ரொட்டித் துண்டினைப் பிய்த்து வாயில் போட்டு இறுதியில் ரொட்டி காலியாகி விட்டது.
நடந்தவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஏமாந்த பூனைகள் அவ்விடத்தை விட்டுக் கிளம்பின.
நெருக்கமானவர்கள் தங்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டால் தாங்களாகவே தீர்த்து கொள்ள வேண்டும். இல்லையேல் இருவரும் துயரப்பட வேண்டிய சூழ்நிலை அமைந்துவிடும்.
ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்தால் ஏமாற்றம் ஏற்படாது. வாழ்க்கையில் விட்டு கொடுத்தல் அவசியமானது என்பதை ஏமாந்த பூனைகள் கதை மூலம் தெரிந்து கொள்ளலாம்.