ஏரில்லா உழவன் – மண்புழு

மண்புழு நிலத்தினை குடைந்து கீழுள்ள மண்ணை மேற்புறமும் மேலுள்ள மண்ணைக் கீழ்புறமும் கொண்டு சென்று மண்ணை தன் வாழ்நாள் முழுவதும் ஏரில்லாமலே உழுவு செய்கிறது. இதனால் மண் வளமானதாகிறது.

எனவே மண்புழுக்கள் ஏரில்லா உழவன், உழவனின் நண்பன், சுற்றுப்புற அமைப்பாளர்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன.

ஆனால் சமீப காலங்களில் மண்புழுக்கள் இயற்கையாக நிலத்தில் காணப்படுவது குறைந்து விட்டது. காரணம் நாம் பயன்படுத்தும் செயற்கைப் பூச்சி கொல்லி மருந்துகள், செயற்கை பயிர்வளர்ச்சி ஊக்கிகள், நில மாசுபாடு மற்றும் நம்முடைய செயல்பாடுகள் ஆகியவை ஆகும்.

இன்றைக்கு வேளாண்மையில் மண்புழு உரத்தினைப் பயன்படுத்தி பயிர் செய்து நிறைவான விளைச்சலைப் பெறுவது, வேளாண் நிலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவது ஆகியவை முக்கிய நிகழ்வுகளாக உள்ளன.

மண்புழு உரத்தினைப் பற்றியும், இதனால் சுற்றுச்சூழல் மேம்படுவதையும் விரிவாகப் பார்க்கலாம்.

மண்புழுக்கள் சுமார் 120 மில்லியன் வருடங்களுக்கு முன்பே இப்புவியில் தோன்றிவிட்டன. இவைகள் அங்ககக்கழிவுகளை உட்கொண்டு தன் எச்சங்களை உரமாக்கி நிலத்திற்கு வளம் சேர்க்கின்றன.

இந்த மண்புழுக்கள் நிலத்தில் நுண்ணுயிர்களைப் பெருக்கி, நோய் கிருமிகளை அழித்து விடுகின்றன. இவை மண்ணின் இயற்பியல் தன்மையை மாற்றி அமைக்கின்றன.

 

மண்புழு பயன்படும் விதம்

மண்புழுக்கள் மேலும் கீழும் செயல்பட்டு சுரங்கம் செய்வதால் காற்று, நீர், சூரிய ஒளி போன்றவை வேருக்கு கிடைக்கின்றன. அதனால் பயிரானது வளர்ச்சி ஊக்கம் பெருகிறது.

மண்புழுவானது கீழ் மண்ணில் உள்ள ஊட்டங்களை மேல்பரப்பிற்கு கொண்டு வருகிறது. எருவில் கிட்டா நிலையில் உள்ள தனிமங்களை கிட்டும் நிலைக்கு மாற்றுகிறது.

மண்ணின் ஈரப்பதம், காற்று ஆகியவற்றின் சமநிலையை பராமரிக்கிறது. தற்போது இயற்கை வேளாண்மையில் மண்புழு உரம் மற்றும் மண்புழு ரசம் ஆகியவை பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

 

மண்புழு உரம்

மண்புழு உரம்

மண்புழு உரம் என்பது இயற்கையில் கிடைக்கும் வேளாண் கழிவுகளான இலை, தழை, சாணம் ஆகியவற்றை உட்கொண்டு எச்சங்களாக சிறுசிறு உருண்டைகளை மண்புழுக்கள் வெளியேற்றுவதையே மண்புழு உரம் என்கிறோம்.

இதில் தாவர வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நுண்ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

 

மண்புழு உரத்தின் தொழில்நுட்பம்

மண்புழுக்கள் உரத்தின் தொழில்நுட்பமானது மண்புழுக்களைக் கொண்டு கரிமக்கழிவுகளை அந்த இடத்தில் மேம்படச் செய்தல் மற்றும் கழிவுகளில் உள்ள வேதியியல் மற்றும் உயிரியல் மாசுகளை அப்புறப்படுத்துதல் ஆகியவை ஆகும்.

 

மண்புழு உரம் தயாரித்தல்

மண்புழுவானது சாதாரணமாக சாணத்தையும், சாணம் கலந்த வைக்கோலையும் விரும்பித் தின்னுகிறது. மண்புழுக்கள் எந்த ஒரு கழிவுவையும் நேரடியாக உட்கொள்வதில்லை.

கழிவுகளை முதலில் நுண்ணுயிரிகள் சிதைக்க வேண்டும். நுண்ணுயிரிகள் சிதைத்த கழிவுகளையே மண்புழுக்கள் உட்கொள்கின்றன‌.

 

மண்புழுவிற்கான உணவினை தயார் செய்தல்

முதலில் மட்கக்கூடிய கழிவுகளை சேகரிக்க வேண்டும். அதில் உள்ள உலோகம், பீங்கான், கண்ணாடி போன்றவை பிரித்தெடுக்க வேண்டும். பின் கழிவுகளை சிறுசிறு துண்டுகளாக மாற்ற வேண்டும்.

கழிவுக் கொட்டும்போது வைக்கோல் போன்ற குச்சி பொருட்களைக் முதலில் கொட்டிவிட்டுபின் அதன் மேல் சாணம் போன்றவற்றைக் கொட்ட வேண்டும். அதன் மேலே சாணக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

முற்றுப் பெற்ற மேட்டின் மீது சணல் சாக்கைக் கொண்டு மூடி மாலை நேரத்தில் நீர் தெளித்து வரவேண்டும். இருபது நாட்கள் கழித்து குப்பை மேட்டின் வெப்பநிலை குறையத் தொடங்கும். இப்போது மண்புழுக்கள் உண்ண ஏற்ற உணவு தயார்.

நன்றாக உலர்ந்த கால்நடைக் கழிவுகளும், சாணஎரிவாயுக் கழிவுகளும் மட்டுமே மண்புழுக்கள் உரம் தயாரிக்க நேரடியாகப் பயன்படுத்தலாம்.

மண்புழுக்கள் உற்பத்திக்கான குப்பைக் குவியலை உபயோகமில்லாத ஈரமான சாக்குப்பை கொண்டு மூட வேண்டும்.

 

மண்புழு உற்பத்திக்கான இடம்

மண்புழு தொட்டி

மண்புழுக்கள் உற்பத்திக்கு நிழலுடன், அதிகளவு ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சியான இடத்தினை தேர்வு செய்தல் வேண்டும். உபயோகப்படுத்தாத மாட்டுத் தொழுவம், கோழிப்பண்ணை மற்றும் கட்டிடங்களை உபயோகப்படுத்தலாம்.

திறந்த வெளியில் உற்பத்தி செய்வதாக இருந்தால் நிழலான இடத்தினைத் தேர்வு செய்யவும். வெயில், காற்று மற்றும் மழை ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க தென்னங்கீற்றைப் பயன்படுத்தலாம்.

மண்புழுக்கள் வளர்க்க தொட்டி வடிவில் அமைப்பதாக இருந்தால் அறையின் அளவிற்கு நீளம் 3 அடி அகலமும், 2 அடி நீளமும் உடைய சிமிண்ட் தொட்டியைப் பயன்படுத்தலாம். அளவுக்கதிகமான நீரை வெளியேற்ற தொட்டியின் அடிப்பக்கம் சிறிது சாய்வாகவும், சிறிய நீர் சேமிப்பு குழி கொண்டும் அமைக்க வேண்டும்.

முதலில் தொட்டியின் அடிப்பாகத்தில் நெல் உமி, தென்னைநார் கழிவு, கரும்புத் தோகை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை 3 செமீ உயரத்திற்கு நிரப்ப வேண்டும். பின் ஆற்று மணலை 3 செமீ உயரத்திற்கு நிரப்ப வேண்டும். அதன்மேல் 3 செமீ உயரத்திற்கு தோட்ட மண்ணைப் பரப்ப வேண்டும். இதற்கு மேல் தண்ணீரைத் தெளிக்க வேண்டும்.

மண்புழுவிற்கான உணவுடன் 30 சதவீதம் உலர்ந்த கால்நடைக் கழிவுகளைக் கலந்து தொட்டி முழுவதும் பரப்ப வேண்டும். ஈரப்பதம் 60 சதம் இருக்க வேண்டும். இதன் மேல் மண்புழுவினை கொட்ட வேண்டும்.

ஒரு மீட்டர் நீளம் X ஒரு மீட்டர் அகலம் X 0.5 மீட்டர் உயர அளவிற்கு இரண்டு கிலோ (2000 புழுக்கள்) தேவைப்படும். தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும். தண்ணீரை ஊற்றக் கூடாது. ஈரப்பதம் 60 சதவீதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மண்புழு உர அறுவடைக்கு 2 நாட்கள் முன்னதாக தண்ணீர் தெளிப்பதை நிறுத்தி விடவேண்டும்.

மண்புழுக்கள் இட்டு மூன்றாவது வாரத்திலேயே மேற்புறத்தில் தங்கள் எச்சங்களை உரங்களாகத் தள்ளுகின்றன. இவ்வெச்சங்களை மண்புழுக்கள் தெரியும் இடம் வரை அகற்ற வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை இவ்வுரத்தைப் பிரித்தெடுக்க வேண்டும்.

மண்புழுக்கள் உரக்குழியிலிருந்து மண்புழுவினைப் பிரித்தெடுக்க சிறிய சாண உருண்டைகளை உரக்குழியில் பல இடங்களில் வைக்க வேண்டும். இதனால் புழுக்கள் சாணத்தால் கவரப்பட்டு உருண்டைக்குள் வருகின்றன. பின் உருண்டைகளை நீரில் கரைத்து புழுக்களைப் பிரித்தெடுத்து மற்றொரு உரக்குழியினுள் இடலாம்.

 

மண்புழு உரத்தைப் பயன்படுத்தும் முறை

ஒரு ஏக்கர் நிலத்திற்கு 5 டன் மண்புழுக்கள் உரம் பரிந்துரைக்கப்படுகிறது. தொட்டிகளில் போடப்படும் மண்கலவையில் மண்புழுக்கள் உரம் 40 சதவீதம் கலக்கப்பட்டு பின்பு தொட்டிகளில் இடப்பட்டு நாற்றுகள் நடப்படுகின்றன.

வளர்ந்த மரங்களான தென்னை, வாழை போன்றவற்றிற்கு ஒரு மரத்திற்கு ஐந்து கிலோ இடவேண்டும். இவ்வுரத்தை மண்ணின் அடிப்பாகத்தில் இடவேண்டும். மேற்பரப்பில் இட்டால் உரத்தில் உள்ள நுண்ணயிரிகள் அழிந்துவிடும்.

 

மண்புழு உரத்தின் பயன்கள்

மற்ற மக்கும் உரங்களைவிட இதில் சத்துக்கள் அதிகம். மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்தி நீர்பிடிப்பு திறனையும், காற்றோட்டத்தையும் மேம்படுத்துகிறது. அதிக நீர்ப்பிடிப்பின் காரணமாக கோடைகாலத்தில் வேர் காயம் ஏற்படுவதைத் தடைசெய்கிறது.

மழைகாலங்களில் மண்அரிப்பைத் தடுப்பதோடு வேர்களுக்கு வெப்பமளித்து அவற்றை நன்கு வளரச் செய்கிறது. மண்ணின் காரத்தன்மையைக் குறைத்து காரஅமில நிலையைச் சமநிலைப்படுத்துகிறது.

மண்ணில் உள்ள கரையாத தாதுக்களைக் கரைத்து தாவரங்களுக்கு பேரூட்டச் சத்தையும், நுண்ணூட்டச் சத்தையும் வழங்குகின்றது. இவ்வுரம் இடப்பட்ட பயிர் கூடுதலாக 20 முதல் 30 சதவீதம் வரை பலன் தருகின்றன.

மண்புழுக்கள் உரம் மண்ணின் நஞ்சுத்தன்மையை நீக்கி மண்ணின் இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கிறது. இவ்வுரம் ரசாயன உரங்களின் செயல்பாட்டினைக் குறைத்து சுற்றுச்சூழல் மாசுபாட்டினைத் தடுக்கிறது.

 

மண்புழு ரசம்

மண்புழுவானது எப்பொழுதும் நீர் போன்ற திரவத்தினைச் சுரந்து தனது உடலின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது. இவ்வாறு சுரக்கப்படும் திரவத்தினை தண்ணீருடன் சேகரிப்பதே மண்புழு ரசம் எனப்படுகிறது.

மண்புழுவையும், மண்புழுக்களின் உணவினையும் ஒரு பானையில் இட வேண்டும். பானையின் அடியில் ஐந்து துளை இடவேண்டும். அடுப்பு மூட்டுவது போல மூன்று கற்களை அடுக்கி மேலே மண்புழுப் பானையை வைக்க வேண்டும்.

மண்புழுப்பானைக்கு மேலே சிறு துளையிட்ட ஒரு லிட்டர் நீருள்ள பானையை கட்டித் தொடங்க விட வேண்டும். மண்புழுக்கள் பானைக்குக்கு கீழே ஒரு கலயத்தை வைக்க வேண்டும்.

இரவு முழுவதும் தண்ணீரானது சொட்டு சொட்டாக மண்புழுப்பானையில் விழுந்து மண்புழுவையும், அது ஏற்படுத்திய சுரங்கங்களையும் கழுவி மண்புழுக்கள் குளியல் ரசமாக கீழ் உள்ள கலயத்தில் சேமிக்கப்படும்.

இதை ஒன்றுக்குப் பத்து என்ற விகிதத்தில் தண்ணீருடன் கலந்து பயிர் மீது தெளிக்கலாம். மண்புழு ரசம் வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது.

மண்புழு உரத்தினையும், ரசத்தினையும் பயன்படுத்தி பயிர் செய்து நல்ல விளைசலையும் வருமானத்தையும் அதிகரித்து சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாத்து நல்வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.