ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப என்ற இப்பாடல், பெண் ஆழ்வாரான ஆண்டாள் அருளிய,  கோதைத் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் இருபத்தியோராவது பாசுரம் ஆகும்.

இறைவனிடம் காட்டும் மாசற்ற அன்பு, அவரை நம்மிடம் கட்டாயம் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை உணர்த்தும் பாசுரம்.

திருப்பாவை பாடல் 21

ஏற்ற கலங்கள் எதிர்பொங்க மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல்பெரும் பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே, அறிவுறாய்

ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்

மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்

ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

 

விளக்கம்

பாலினைக் கறக்கும் போதெல்லாம் பாத்திரங்கள் அனைத்தும் நிரம்பி வழியும் வகையில், பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களின் உரிமையாளனான நந்தகோபரின் திருமகனான கண்ணனே!

நீ எங்களின் வருகையை அறிய வேண்டும்.

நீ உன்னை நாடும் அடியவர்களைக் காப்பதில் மிக உறுதி உள்ளவன்; பெரியவன்.

இவ்வுலகில் எல்லோரும் காணும்படி கண்ணனாக அவதாரம் செய்த ஒளிச்சுடரே!

நீ துயில் நீங்கி எழவேண்டும்.

உன்னுடன் மாறுபட்ட கருத்துக் கொண்டு உன்னை எதிர்த்தவர்கள் எல்லோரும், தங்களுடைய வலிமையை இழந்து, தோற்றுப் போய் உன்னிடம் சரணடைய, உன் வாசலில் காத்துக் கிடக்கிறார்கள்.

அவர்களைப் போல நாங்களும் உன்னுடைய புகழினைப் பாட, உன்னுடைய வாசலில் காத்துக் கிடக்கிறோம்.

நீ அதனை ஏற்று எங்களுக்கு அதற்கான பலனைத் தருவாயாக!

கோதை என்ற ஆண்டாள்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.