ஏலக்காய் – மசாலாக்களின் ராணி

ஏலக்காய் மசாலாக்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம் அதனுடைய தனிப்பட்ட சுவை மற்றும் மணம் ஆகும்.

உலகில் உள்ள விலை உயர்ந்த மசாலாப் பொருட்களில் இது வெண்ணிலா மற்றும் குங்குமப்பூவிற்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

இது நம் நாட்டில் பராம்பரியமாக உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இது வெறும் வாயில் போட்டு மெல்லப்படும் இயற்கை சுவாசப் புத்துணர்வுப் பொருளாகவும் நம் நாட்டில் பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சள் மற்றும் இஞ்சி ஏலக்காயின் உறவினர் ஆவர். இது தற்போது உலகெங்கும் இனிப்பு மற்றும் கார உணவுகளில் மணமூட்டியாக சேர்க்கப்படுகிறது. இது உடலுக்கு வெப்பத்தைக் கொடுக்கும் பொருளாகும்.

ஏலக்காயின் அமைப்பு மற்றும் வளரியல்பு

ஏலக்காயானது சுமார் 4 மீட்டர் உயரம் வரை வளரும் குற்றுச்செடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.

 

ஏலக்காய்ச் செடி
ஏலக்காய்ச் செடி

 

இத்தாவரத்தின் இலைகள் 30-60 செமீ நீளமும், 5-15 செமீ அகலமும் கொண்டு அடர் பச்சை நிறத்தில் காணப்படுகின்றன.

இத்தாவரத்தில் இளம் பச்சைநிற இருபால் தன்மை கொண்ட மலர்கள் தோன்றுகின்றன.

 

ஏலக்காய்ப் பூ
ஏலக்காய்ப் பூ

 

ஏலக்காயானது 2-5 செமீ நீளமும், 1-2 செமீ விட்டமும் கொண்டு நீள்வட்ட வடிவில் காணப்படுகின்றது.

 

ஏலக்காய் மற்றும் விதைகள்
ஏலக்காய் மற்றும் விதைகள்

 

ஏலக்காயின் வெளிப்புறத் தோலானது தடித்து அழுத்தமாக பச்சை, கறுப்பு, வெள்ளை வடிவங்களில் இருக்கின்றன.

 

பச்சை ஏலக்காய்
பச்சை ஏலக்காய்

 

ஏலக்காயின் உட்புறத்தில் மூன்று அறைகளில் 3 மிமீ நீளமுள்ள கறுப்புநிற விதைகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. காய்ந்த ஏலக்காயானது பழுப்பு நிறத்தில் இருக்கிறது.

ஏலக்காய்த் தாவரத்தால் நேரடியான அதிக சூரிய ஒளியை தாங்கி வளர இயலாது. எனினும் வெப்பமான சூழ்நிலையானது இது செழித்து வளர அவசியமான ஒன்றாகும்.

இது லேசான அமிலத்தன்மை கொண்ட வளமான, நல்ல தண்ணீர் வடிதிறன் கொண்ட மண்ணில் நன்கு செழித்து வளரும்.

ஏலக்காய் பெறும் முறை

ஆண்டில் எட்டு முதல் ஒன்பது மாதங்கள் வரை இத்தாவரம் பூக்கிறது. ஏலக்காயானது இப்பூக்களிலிருந்து மெதுவாக காய்க்கிறது. முக்கால் பாகம் ஏலக்காய் பழுத்தவுடன் பிடுங்கப்படுகிறது.

பிடுங்கப்பட்ட ஏலக்காயானது அலசி உலர வைக்கப்படுகிறது. உலர வைக்கும் முறையினைப் பொறுத்தே ஏலக்காயின் இறுதி நிறம் இருக்கும்.

அதிக நாட்கள் சூரிய ஒளியில் காயவைக்கபட்ட ஏலக்காயின் தோலானது வெள்ளை நிறத்தில் இருக்கும். ஒருநாள் பகலில் வெயிலில் உலர்த்தப்பட்டு, இரவில் வெப்பம் கொண்ட அறையில் வைத்து எடுக்கப்பட்ட ஏலக்காயானது பச்சை நிறத்தில் இருக்கும்.

 

உலர வைக்கப்பட்ட ஏலக்காய்
உலர வைக்கப்பட்ட ஏலக்காய்

ஏலக்காயின் வரலாறு

ஏலக்காயானது முதலில் தென்இந்தியாவின் மழைக்காடுகளில் கண்டறியப்பட்டது. இந்தியா, இலங்கை, குவாத்தமாலா ஆகிய இடங்களில் இது அதிகம் பயிர் செய்யப்படுகிறது.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் ஏலக்காய் வியாபாரம் நடைபெற்று வருகிறது. கிமு 4 நூற்றாண்டில் கிரேக்கத்தில் ஏலக்காயானது இறக்குமதி செய்யப்பட்டது.

ரோமிற்கு இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் ஏலக்காயினை வழங்கின. உலகின் ஏலக்காய் உற்பத்தியில் இந்தியா இருபதாம் நூற்றாண்டு வரையில் முதலிடத்திலும், 21 நூற்றாண்டு முதல் குவாத்தமாலா முதலிடத்தையும் பெற்றுள்ளது.

ஏலக்காயின் விதையிலிருந்து ஏலக்காய் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது குளிக்கும் சோப்புகள், துவைக்கும் சோப்புகள், செண்டுகள் உள்ளிட்ட பொருட்களின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

ஏலக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

ஏலக்காயில் விட்டமின் சி, பி1(தயாமின்), பி2 (ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்) ஆகியவை காணப்படுகின்றன.

இதில் தாதுஉப்புக்களான மாங்கனீசு மிகஅதிக அளவும், இரும்புச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம், செம்புச்சத்து அதிகளவும் உள்ளன. மேலும் இதில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவையும் இருக்கின்றன.

இதில் அதிக நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், புரதச்சத்து ஆகியவையும் காணப்படுகின்றன.

ஏலக்காயின் மருத்துவப் பண்புகள்

சுவாச புத்துணர்வுக்கு

வாய்துர்நாற்றத்தைப் போக்கி இயற்கையாக புத்துணர்வு வழங்க ஏலக்காயானது சிறந்த தேர்வாகும்.

இதில் உள்ள ஆன்டிமைக்ரோபில் தன்மையானது வாய்துர்நாற்றத்திற்கு காரணமான ஸ்டெப்டோகாக்கஸ் முட்டான் மற்றும் கான்டிடா அல்பிகான் பாக்டீரியாக்களை அழித்து வாய்துர்நாற்றத்தைப் போக்கி சுவாச புத்துணர்வு அளிக்கிறது.

வாய்துர்நாற்றத்தைப் போக்க விரும்புபவர்கள் ஏலக்காயினை வாயில் போட்டு சுவைத்தால் போதுமானது.

பற்களின் பாதுகாப்பிற்கு

ஏலக்காயானது பற்களின் பாதுகாப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது வாய்துர்நாற்றத்திற்கு காரணமான பாக்டீரியாவை அழிப்பதோடு வாயில் எச்சில் சுரப்பினை அதிகரிக்கிறது.

இதனால் வாயானது ஈரபதத்துடன் இருப்பதோடு பற்சிதைவுக்குக் காரணமான பாக்டீரியாவின் செயல்பாட்டினைத் தடுக்கிறது. எனவே பற்சிதைவு, பற்குழிகளில் இருந்து பாதுகாப்பு பெற ஏலக்காயினை அடிக்கடி சுவைக்கலாம்.

இதய நலத்திற்கு

ஏலக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் உடலின் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி நல்ல கொழுப்பின் அளவினை அதிகரிக்கச் செய்கிறது.

மேலும் இவை இரத்தநாளங்களில் கொழுப்புகள் படிவதைத் தடைசெய்து அடைப்புகள் உருவாகாமல் தடைசெய்கின்றன.

ஏலக்காயினை தொடர்ந்து உண்ணும் போது உயர் இரத்த அழுத்தம் குறைக்கப்பட்டு இரத்த அழுத்தம் சீராக இருக்கிறது.

ஆக்ஸிஜனேற்றத்தால் இதய நலம் பாதிக்கப்படுவதை ஏலக்காயானது தடை செய்கிறது.

மனஅமைதி பெற

ஏலக்காயில் உள்ள பொருட்கள் மனஅழுத்தத்தைக் குறைத்து மனஅமைதியை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனஅமைதிக்காக ஏலக்காய்ச் சேர்க்கப்பட்ட டீயினைக் குடிக்கும் வழக்கம் ஆயுர்வேதமருத்துவத்தில் இருந்துள்ளது.

வயிற்று பிரச்சினைக்கு

ஆயுர்வேதம், சீன மற்றும் யுனானி மருத்துவத்தில் வயிற்று பிரச்சினைக்கு ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. ஏலக்காயில் உள்ள மூலக்கூறுகள் வயிற்று வலி, அல்சர், வயிற்று பொருமல் உள்ளிட்ட வயிற்று பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது.

மேலும் இது அல்சர் நோயினை உண்டாக்கும் ஹீலியோபாக்டர் பைலோரி என்னும் பாக்டீரிய வளர்ச்சியைத் தடைசெய்கிறது. எனவே ஏலக்காயினை வயிற்று பிரச்சினைகளுக்கு சுவைத்து அப்படியே உண்ணலாம்.

சுவாச பிரச்சினைகளுக்கு

ஏலக்காயினை உண்ணும்போது நுரையீரலுக்கு அதிக இரத்த ஓட்டத்தைச் செலுத்தி சுவாச பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது. எனவே சுவாச பிரச்சினைகள் உள்ளவர்கள் ஏலக்காயினை உண்டு தீர்வு பெறலாம்.

தொண்டைக்கட்டிற்கு

ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டைச் சேர்த்து தண்ணீரில் காய்ச்சி குடிக்கும் போது தொண்டைக்கட்டிற்கு தீர்வாக அமைகிறது. இதற்கு ஏலக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் காரணமாகும்.

ஏலக்காயினை வாங்கும் முறை

ஏலக்காயினை வாங்கும்போது ஒரே சீரான நிறத்துடன் கனமானதாக இருப்பவற்றைத் தேர்வு செய்யவும். சீரற்ற நிறத்துடன் மேற்தோலில் வெட்டுக்காயங்கள் கொண்டவற்றைத் தவிர்க்க வேண்டும்.

இனிப்பு மற்றும் கார உணவுகள், சூப்புகள், டீ, காபி, குடிநீர் பானங்கள் உள்ளிட்டவைகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.

மசாலாக்களின் ராணி ஏலக்காயினை அடிக்கடி உணவில் சேர்த்து வளமான வாழ்வு வாழ்வோம்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.