ஏலக்காய் மருத்துவ பயன்கள்

ஏலக்காய் மருத்துவ பயன்கள் மிகுந்தது.

ஏலக்காய் கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. சிறுநீரைப் பெருக்கும். தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, வறட்சி, கபம் முதலியவற்றைக் கட்டுப் படுத்தும்.

மணம், சுவை கூட்டும் தன்மை ஏலத்திற்கு மிகுதியாக உண்டு. கேக்குகள், மிட்டாய்கள், இனிப்புகள் ஆகியவற்றிலும், உணவு சமைப்பதிலும் ஏலக்காய் பெருமளவு சேர்க்கின்றது.

ஏலக்காய் விந்துவைப் பெருக்கும்; காமத்தைத் தூண்டும். வயிற்று உப்புசத்தை நீக்கி செரிமானத்தை எளிதாக்குகின்றது.

மலமிளக்கும் மருந்துகளுடன் ஏலக்காய் சேர்க்கப்படுகின்றது. ஆண்மை விருத்தி லேகியங்களிலும் சேர்க்கப்படுகின்றது.

ஏலக்காய் விதையின் எண்ணெய் பல மருந்துப் பொருட்களிலும் சேர்க்கப்படுகின்றது மற்றும் பானங்களை வாசனை உள்ளதாக மாற்றுகின்றது.

ஏலக்காய் அடர்த்தியான சதைப்பற்றுடைய மட்ட நிலத் தண்டுக் கிழங்குகளைக் கொண்ட தாவரம். 3 மீட்டர் வரை உயரமான நிமிர்ந்த தண்டுகளைக் கொண்டது.

ஏலக்காய் இலைகள் 3 அடி வரை நீளமானவை. அகலத்தில் குறுகியவை. இலையின் நடு நரம்பு மிகவும் வலிமையானது.

இரண்டரை அடி வரை உயரமான மலர்க் கொத்துக்கள் தண்டின் அடியிலிருந்து உருவாகின்றது.

ஏலக்காய் மலர்கள் 4 செமீ வரை நீளமானவை. வெள்ளை அல்லது வெளிர் பச்சை நிறமானவை.

பழங்கள் 15செமீ நீளத்தில் வெளிறிய பசுமை நிறம் அல்லது மஞ்சள் நிறத்தில், நீள் வட்ட வடிவில் 3 பிரிவுகளுடன், பல விதைகளுடன் காணப்படும்.

ஏலக்காய் மலைப் பகுதிகளில் இயற்கையாக விளைகின்றது. ஏலம், ஆஞ்சி, துடி, சிற்றேலம் ஆகிய மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு.

மழைக் காடுகள், மைசூர், மற்றும் கேரளத்தில் அதிகமாக விளைகின்றது. முதிர்ந்த ஏலக்காய்கள், உள்ளிருக்கும் விதைகள் மருத்துவப் பயன் கொண்டவை.

ஏலக்காய், ஏலரிசி போன்றவை நாட்டு மருந்துக் கடைகளிலும், ஏலக்காய் மளிகைக் கடைகளிலும் கிடைக்கும்.

ஏலக்காய் வெவ்வேறு நிலப் பகுதிகள், மற்றும் அதன் சூழ்நிலை தகவமைப்பிற்கு ஏற்ப சிறு மாறுபாடுகளுடன் காணப்படுகின்றது.

ஏலக்காய் கடைகளில் விற்பனைக்கு வருவதற்கு முன்னர் கந்தகப் புகை அடிக்கப்பட்டு வெள்ளை நிறமாக்கப்படுகின்றது.

கெட்டியான ஏலக்காய்களில் விதை கருப்பாக, அதிகமான எண்ணிக்கையில் இருக்கும்.

ஏலக்காய், ஓமம், சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து கொண்டு, அதில் ஒரு தேக்கரண்டி அளவு உட்கொள்ள செரியாமை தீரும்.

ஏலக்காய், சீரகம், சுக்கு, கிராம்பு சம அளவாகப் பொடித்து, 2 கிராம் தேனில் தினமும் 3 வேளைகள் சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரணம், குமட்டல், வாந்தி தீர ஏலக்காயின் மேல் தோலை உரித்து, உள்ளிருக்கும் ஏலரிசியை நன்கு காய வைத்து, தூள் செய்து கொள்ள வேண்டும்.

2 கிராம் அளவு தூளை தேவையான அளவு எலுமிச்சம் பழச் சாற்றில் குழைத்து ஒவ்வொரு வேளை உணவிற்குப் பின்னரும், தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.

ஏலக்காய் மருத்துவ பயன்கள் பற்றி அறிந்து கொண்டீர்கள் அல்லவா? அதை முறையாகப் பயன்படுத்திப் பயன் பெறுங்கள்.

 

Comments are closed.