ஏழாம் அறிவு

மனிதன் ஆறறிவு கொண்டவன் என்றுதான் இது நாள்வரை கூறிவருகிறோம். ஆனால், மனித மூளையின் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கின்ற பொழுது, இது தவறு எனத் தெரிகிறது. மனிதன் ஏழாம் அறிவை எட்டி விட்டான் என்பது தான் உண்மை.

இளம் வயதிலேயே அபாரத் திறமையுடன் விளங்கும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். குழந்தை மேதைகளின் எண்ணிக்கை தற்காலத்தில் பல்கிப் பெருகி வருகிறது.

இடையறாது நிகழ்ந்து வரும் பரிணாம வளர்ச்சியின் இயக்கப் போக்கில், மனித மூளை, ஏழாம் அறிவை எட்டி விட்டது என்பதனைக் குழந்தை மேதைகள் உறுதி செய்கின்றனர்.

மனித இனத்தின் தன்மை மற்றும் எதன் மூலம் மனிதர்கள் அறிவாளிகளாகத் திகழ்கிறார்கள் என்பதனை ஆய்வு செய்வதே அறிவியலாகும். மனித மூளை ஏழாம் அறிவை எட்டி விட்டது என்கின்றனர்.

மனித மூளை எந்தப் பயனும் இல்லாத, வெறும் சதைப் பிண்டம் என்றே பல நூற்றாண்டுகளாக மருத்துவ உலகில் நம்பப்பட்டு வந்தது. மருத்துவத் துறையில் முன்னேற்றம் அடைந்திருந்த சீனர்களின் அகராதியில் கூட, மூளை என்பதனைக் குறிக்கும் வார்த்தையே கிடையாது.

கிரேக்கர்கள்தாம் மூளையைப் பற்றி முதல் முதலாகச் சிந்தித்தார்கள். ‘பிரேன்’ என்ற கிரேக்கச் சொல்லில் இருந்தே ‘பிரெய்ன்’ என்ற ஆங்கில வார்த்தை உருவாகியது. ‘பிரேன்’ என்றால் கிரேக்க மொழியில் ‘தேவையற்ற சதைப் பிண்டம்’ என்றுதான் அர்த்தம். கிரேக்கர்களும் மூளையைப் பற்றித் தவறாகவே சிந்தித்திருக்கிறார்கள்.

கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இருந்து 8ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் மூளையைப் பற்றிய ஆராய்ச்சிகள் மிகுதியாயின. கேலன் என்ற கிரேக்க அறிஞர் “நாம் உள்ளே இழுக்கும் மூச்சு மூளைக்குப் போய் உயிர்ச் சக்தியாக மாறி, இதயத்திற்கு வருகிறது” என்றார். ஆனால் இது தவறான கருத்து.

இருந்தும் ஏதோ ஒரு வகையில் மூளையின் முதன்மையைக் கேலன் உணரத் தொடங்கினார். அன்றைய கால கட்டத்தில் மருத்துவர்களுக்குப் பிணத்தை அறுத்து ஆராய்ச்சி செய்வது முடியாத காரியமாக இருந்தது. மீறிச் செய்தால், அது தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. இதனால், மனித உடற்கூறுகளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை.

இந்தக் கால கட்டத்தில்தான் எடின்பரோ நகரில் பர்க் மற்றும் ஸாரே என்ற திருடர்கள் இருந்தார்கள். இருவரும் நண்பர்கள். இருவரும் சேர்ந்து சிறுசிறு திருட்டுக்களைச் செய்து வந்தனர். இருவருக்கும் தொழில் இலாபகரமாக இல்லை.

தீவிர யோசனைக்குப் பின் இருவரும் பிணங்களைத் திருடி, மனித உடலை அறுத்துப் பார்க்கும் டாக்டர்களுக்கு விற்பனை செய்வதாக முடிவு செய்தனர்.

புதிதாக அடக்கம் செய்யப்பட்ட பிணங்களைக் கல்லறையில் இருந்து இருவரும் திருடி வந்து, டாக்டரிடம் கொடுத்தார்கள். அதுமட்டுமல்லாமல் இறப்பதற்கு முன் என்னென்ன நோய் இருந்தன? எப்படி இறந்தார்? என்பன போன்ற பயனுள்ள விபரங்களையும் டாக்டர்களுக்கு விற்பனை செய்தனர்.

அவை டாக்டர்களுக்கு மிகவும் பயன்பட்டன. ஆவர்கள் ஒவ்வொரு நோய்க்கும் உடலில் என்ன மாதிரியான பாதிப்பு இருக்கும் எனத்தெரிந்து சொல்லப் பெரிதும் உதவினர்.

ஒரு முறை இடது கையில் முடக்கு வாதம் வந்து இறந்தவரின் உடலை டாக்டரிடம் அந்தத் திருடர்கள் கொடுத்தனர். டாக்டர்கள் அந்தப் பிணத்தின் மண்டை ஓட்டைப் பிளந்து பார்த்த போது, மூளையின் வலது பக்கம் பாதிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

மூளைக்கும், மனித உடலின் உள் உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று சிந்திக்கத் தொடங்கினர்; மூளை தொடர்பான ஆராய்ச்சி தொடர்ந்தது; வியப்பான உண்மைகள் உலகுக்குத் தெரிய வந்தன.

அந்தத் திருடர்கள் மட்டும் பணத்திற்காகப் பிணங்களைத் திருடி, டாக்டரிடம் கொடுக்காமல் இருந்திருந்தால், மூளையைப் பற்றிப் பல உண்மைகள் உலகிற்குத் தெரிய பலகாலமாயிருக்கும் அல்லவா!

மூளையின் ஒவ்வொரு பகுதியின் செயல்பாடுகளையும் மனித இனம் அறிந்திருந்தாலும், இன்றும் ஆச்சரியம் தரும் வகையில் அதன் செயல்பாட்டினை எதிர்காலச் சந்ததியினர் ஏழாம் அறிவினைக் கொண்டு வெளிச்சத்திற்குக் கொண்டு வருவார்கள் என்று நம்பலாம்.

நேஷனல் ஜியோகிராஃபி சேனலில் அறிவு ஜீவிகளான இளம் இந்தியர்களை விவரிக்கும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. “என்னுடைய அபார மூளை” என்ற தொடராக அது வருணிக்கப்பட்டது.

இளம் வயதிலேயே மிகுந்த திறமையுடன் விளங்கும் நிசால் நாராயணன், ஹைதராபாத்தைச் சேர்ந்த சித்தார்த் நாகராஜன், பெங்களுரைச் சேர்ந்த தாதாகத் துளசி, மும்பையைச் சேர்ந்த ராகவ் சச்சார் ஆகிய நான்கு இளைஞர்களைப் பற்றிய சிறப்புத் தன்மைகள் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றன.

அவர்களில் சித்தார்த் நாகராஜனின் தற்போதைய வயது பத்து. தனது மூன்று வயதிலேயே டிரம் இசை நிகழ்ச்சியைத் தனியாக நடத்திய சிறப்புத் தன்மை பெற்றவர். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னிரெண்டு வயதே ஆகும் நிசால் நாராயணன் கணிதத்தில் மிகுந்த திறமை பெற்றவர். கணிதக் கோட்பாடுகள் பற்றிய அவரது ஆறு புத்தகங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

சிறு வயதிலேயே தன் தந்தையின் நிதிநிலை அறிக்கையில் தவறுகள் இருந்ததைக் கண்டறிந்த மேதை அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மிக இளம் வயதில் கின்னஸ் புத்தகத்தில் செயற்கரிய செயல் செய்தவராக இடம் பெற்ற இந்தியர் என்பது அவரது மற்றொரு சிறப்பு.

அடுத்த அறிவு ஜீவி, தாதாகத் அவதார் துளசி, தனது ஒன்பது வயதில் பள்ளிப் படிப்பை முடித்தவர்; பட்டப் படிப்பை மறு ஆண்டிலேயே முடித்தார். பி.எச்.டி., பட்டம் பெற்றவர்களில் மிகவும் இளையவர் என்ற பெருமை பெற்ற துளசிக்குத் தற்பொழுது வயது இருபதுதான்.

ராகவ் சச்சார் தனது நான்கு வயதிலேயே இசைக் கருவிகளைத் திறன்பட வாசித்துப் புகழ் பெறத் தொடங்கினார். ஆண்டுதோறும் ஓர் இசைக் கருவி என்ற அடிப்படையில் இதுவரை இருபத்தி நான்கு இசைக் கருவிகளில் தேர்ச்சி பெற்றார்.

தன்னுடைய இசை நிகழ்ச்சியில் குறைந்த பட்சம் பத்து இசைக் கருவிகளை வாசிப்பார். இதில் புல்லாங்குழல், ஹார்மோனியம், சாக்சபோன் உள்ளிட்டவைகளும் அடங்கும். அவரது தற்போதைய வயது இருபத்து ஆறு.

பாகிஸ்தானைச் சேர்ந்த 10 வயது சிறுமி ‘ஆல்பா கரிம்நந்தாவர்’ உலகளவில் அமெரிக்காவைச் சேர்ந்த பில்கேட்ஸின் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் நடத்திய கம்யூட்டர் தேர்வில் உலக சாதனை நிகழ்த்தினார்.

இந்த உலக சாதனையை மதுரையைச் சேர்ந்த 8 வயது சிறுமி ‘லவிணாஸ்ரீ’ முறியடித்து ‘உலகின் இளம் வயதில் மைக்ரோசாப்ட் சான்றிதழ் பெற்றவர்’ என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.

பி.இ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., போன்ற தொழில் நுட்பத்தில் முதுகலைப்பட்டம் பெற்று 25 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர் மட்டுமே எழுதக் கூடிய இத்தேர்வில் பில்கேட்ஸ் சிறப்பு அனுமதி வழங்கியதால் இத்தேர்வை இவள் எழுத முடிந்தது.

லவிணாஸ்ரீ மூன்று வயதில் இருக்கும் பொழுதே திருக்குறளின் 1330 குறள்களையும் ஒரே மூச்சில் ஒப்பித்தாள். பாகிஸ்தான் சிறுமியும், மதுரை சிறுமியும் ஏழாம் அறிவுக்கு சான்றாயின.

குழந்தைகள்தாம் என்றில்லை; பல முதியவர்களும் திறன்மிகு மூளை வளம் கொண்டவர்களாக உள்ளனர். மும்பையைச் சேர்ந்த எழுபத்து ஐந்து வயது கணக்குப் புலி எம்.எஸ். டோஷி ஐந்திலக்க எண்ணை 39,122 ஐ 97,531 இல் பெருக்கினால், என்ன விடை வரும்? அல்லது 24,681 இல் இருந்து 13,579 ஐ கழித்தால் என்ன விடை வரும்? என்று அவரிடம் கேட்டால், கால்குலேட்டர், கம்ப்யூட்டர் எதுவுமில்லாமல், சில வினாடிகளில் சரியான பதில் சொல்லி வியப்பிலாழ்த்தி விடுவார்.

வக்கீலான அவர், கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஒன்பது இலக்க எண்ணிலோ அல்லது அதற்கு மேலான எண்களிலோ கணக்குக் கேட்டால், அவர் நிமிடத்தில் பதில்சொல்லி விடுவார். அவரை ‘மனிதக் கால்குலேட்டர்’ என்றே சொல்லலாம். இவ்வளவு விரைவாகக் கணக்குப் போட யாரிடமும் பயிற்சி பெற்றதும் இல்லை.

அவர் இதனைப் பற்றிக் கூறும் பொழுது, ‘நான் விரைவாகக் கணக்குப் போடுவதில் மாய மந்திரம் ஏதுமில்லை; எல்லாவற்றையும் வெளிப்படையாகவே செய்கிறேன்; சரியான பயிற்சியும் எனக்குக் கணக்குப் பாடத்தில் உள்ள ஆர்வமும் தான் காரணம்’ என்று கூறினார்.

அண்மையில் நியூயார்க் நகரில் 200 இலக்க எண்ணின் பதின் மூன்றாம் மூலத்தை (Thirteen Root) 72 நொடிகளில் கண்டு பிடித்துக் கூறினார். ஒர் ஆய்வு மாணவர், அவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘லெம்மாயிர்’ என்பவர். இந்த மூலம் 2397 207 667 966 701 ஆகும். இது பதினாறு இலக்க எண் ஆகும்.

மேதமை வாய்ந்த ஒரு மூளையின் மிக்க திறமையின் வெளிப்பாடு என்று மட்டுமே செயற்கரிய செயலைக் கருதுவது குறை மதிப்பீடாகும் என்று சென்னையைச் சேர்ந்த நியூட்டன் அறிவியல் மன்றம் இன்ஸ்கோ சுப்பிரமணியன் கூறுகிறார்.

இடையறாது நிகழ்ந்து வரும் பரிணாம வளர்ச்சியின் இயக்கப் போக்கில் மனித மூளையானது ஏழாம் அறிவை எட்டிவிட்டது என்பதன் உறுதிப்பாடு, செயற்கரிய செயலாகும்.

மனித மூளையால் ஒளியின் வேகத்திற்கு அளவிற்கு (நொடிக்கு 3 லட்சம் கி.மீ.) சிந்திக்க இயலும் என்பதற்குச் சாட்சியாக இருக்கிறது லெம்மாயிர் நிகழ்த்திய சாதனை.

குழந்தை மேதைகளின் எண்ணிக்கை கணக்கற்றவை. பள்ளிக் குழந்தைகளில் மாநில மட்டத்தில் நடைபெறும் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் 100க்கு 100 பெறும் மாணவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் பலர் உள்ளனர்.

எலக்ட்ரான்கள் ஓர் ஆற்றல் மட்டத்தில் இருந்து பிறிதோர் ஆற்றல் மட்டத்திற்குப் பாய்ந்து செல்வது போன்று மனித மூளை ஆறாம் அறிவில் இருந்து ஒரு குவாண்டம் பாய்ச்சலில் ஏழாம் அறிவை எட்டிவிட்டதன் வெளிப்பாடே இந்நிகழ்வு. இஃது ஒரு குவாண்டம் நிகழ்வு. (Quantum Phenomenon).

பல்லாயிரம் ஆண்டு பரிணாம வளர்ச்சியின் விளைவாக இரட்டைச் சுருள் (Double Helix DNA) என்ற மூளை வளத்தைப் பெற்ற மானிடம், பரிணாமத்தின் அடுத்த கட்டத்தில், ஏழாம் அறிவு பெறும்.

மூளையின் நியூரான்கள் வெளிப்படுத்தும் மின் சமிக்ஞைகளை EEG (Electro Encephalograph) என்ற கருவியின் மூலம் பதிவு செய்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள். மேலும், ஆழமானதும் துல்லியமானதுமான கருவிகள் வடிவமைக்கும் போது, ஆறாம் அறிவையும் ஏழாம் அறிவையும் பிரித்தறிவது கைகூடும்.

பொருட்களுக்குத் திடம், திரவம், வாயு என்று மூன்று நிலைகள் மட்டுமே உண்டு என்ற அறிவியல் கருத்து இன்று மாறி விட்டது. இவற்றிற்கு அப்பால் ஒரு புதிய நிலையை (New State of Matter) 2001இல் மூன்று அமெரிக்க இயற்பியலாளர்கள் நிரூபித்து, நோபல் பரிசு பெற்றனர்.போஸ் – ஐன்ஸ்டின் குளிர் நிலை (Bose – Einstein Condensate) என்று அப்புதிய நிலைக்குப் பெயர்.

இதுபோலவே, ஏழாவது அறிவு ‘குவாண்டம் அறிவு’ (Quantum sense) என்ற பெயருடன் இவ்வுலகை ஆளும் என்கிறார் – இன்ஸ்கோ சுப்பிரமணியன்.

– சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்

2 Replies to “ஏழாம் அறிவு”

  1. பதிவிலிட்ட அனைத்துமே மறுதலிக்க முடியாத உண்மை, இப்போதைய பல தொலைக்காட்சி நிகழ்சிகளிலேயே இதை பார்க்க முடிகிறது. பல குழந்தைகள்,அவர்களது இந்த வயதிலேயே என்ன போடு போடுகிறார்கள் , இனி வரும் காலங்களில் ஏழாம் அறிவு சாத்தியமே.

Comments are closed.