ஏழையின் மதிப்பு – சிறுகதை

அன்று தெருவில் யாரும் வெளியே இல்லை.

‘இராயல் ஸ்டீரீட்’ என்னும் பணக்காரர்கள் வசிக்கும் அந்த தெருவில் அனைத்து வீட்டிலும் கறிக்குழம்பு மணமும், மீன்குழம்பின் வாச‌மும் தென்றலைப் போல அருமையாக வீசின.

ஞாயிற்றுக் கிழமை என்ற ஒருநாள் நம் மக்களுக்கு மிகப்பெரிய வரமான நாள்.

வேலைக்கு செல்லும் குடும்பத் தலைவர்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும், இறைச்சி, மீன், காய்கனி, மளிகை கடைகளுக்கும் பொன்னான நாள். வாரத்தில் கிடைக்கும் அந்த ஒரு ஓய்வுநாள் குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் கிடைக்காத பொக்கிஷம்.

கடைத்தெருவில் கோழிக்கறி கடைகளிலும், ஆட்டுக்கறி கடைகளிலும், மீன் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதின‌. ஆடுகளும், கோழிகளும், மீன்களும் உயிரினை இழந்து பிணமாக கிடந்தன.

வள்ளுவர் எழுதிய “புலால் மறுத்தல்” என்ற அதிகாரம் தந்த குறள்களைப் படிக்காதவர்களும், படித்தும் பயன்படுத்தாத‌ மனிதர்களும் அவைகளை வாங்கி சென்றனர்.

இன்றோடு உலகம் அழியப் போகின்றது போலவும், இனிமேல் வாழ்நாளில் இவையெல்லாம் கிடைக்காதது போலவும் கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம்.

கடைத்தெருவைக் கடந்து அசைவ மணம் வீசும் இராயல் தெருவில் நடந்தார் ஏழையான முத்து. அனைத்து வீடுகளும் மாடிவீடு. முத்துவின் வீடு கூரைவீடு.

அந்த தெருவில் வாழும் ஒரே ஒரு ஏழைக் குடும்பம் முத்துவின் குடும்பம். முதன் முதலில் குடியேறியது முத்துவின் குடும்பம்தான். அதன் பிறகுதான் பணக்காரர்களின் வீடுகள் அங்கே நிறைந்தன.

வயதான அம்மா, மனைவி, ஒரு பெண் குழந்தை என சிறு ஏழை குடும்பம். சுமை தூக்கும் தொழிலாளியான முத்து ஒரு தினக்கூலி.

லாரியில் வந்து இறங்கும் சிமெண்ட் மூட்டைகள், அரிசி மூட்டைகள், உப்பு மூட்டைகளைத் தூக்கி கடைகளில் இறக்கி வைத்து விட்டு, ஒரு மூட்டைக்கு ஐந்து ரூபாய் என்று கூலி பெறுபவர்.

எல்லா நாட்களும் லாரிகள் வருவது கிடையாது.

முத்து வசிக்கும் தெருவில் உள்ள பணக்காரர்கள் பேசிக் கொள்வது என்னவென்றால், “முத்துவின் கூரை வீட்டினால் நம்முடைய கௌரவமே போய்விட்டது. இந்த குடும்பமும், கூரைவீடும் எப்போது தொலையும்” என்பதுதான்.

அதனால் முத்துவின் வீட்டினை யாரும் கண்டு கொள்வதில்லை. வீட்டருகே வந்ததும் முத்துவின் மகள் ஓடி வந்து “அப்பா”வென கட்டிப் பிடித்தாள்.

அவர் மனைவி முருங்கை மரத்தில் கீரையைப் பறித்துக் கொண்டிருந்தார்.அவர் அம்மா “லொக் லொக்”கென இருமிக் கொண்டு வெற்றிலைப் பாக்கினை ‘டொக்டொக்’கென இடித்தார்.

மிளகுரசம் அடுப்பில் தயாராகும் மணமும், அரசாங்கம் கூட்ட நெரிசலில் கொடுக்கின்ற பழுப்புநிற ரேஷன் அரிசியில் சாதம் கொதிக்கும் காட்டமான வாடையும் வீட்டை நிறைத்தன.

கையில் வைத்திருந்த பையை மனைவியிடம் கொடுத்தார் முத்து. ஐந்து தக்காளியும், மூன்று வெங்காயமும், ஒரு சிறிய பொட்டலத்தில் மிளகாய்பொடியும், கடலை மிட்டாய் இரண்டும் இருந்தன.

பக்கத்தில் உள்ள மாடி வீட்டுப் பையன் வெளியில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தான்.

முத்து தன் மனைவியிடம், “பக்கத்து வீட்டில் யாரும் இல்லையா? இஞ்சினியர் பையன் தனியாக விளையாடுறான்” என்றார்.

“அவன் அப்பாவும், அம்மாவும் அவசரமா எங்கேயோ போனாங்க?” என்றாள்.

இரவு பொழுது நிலவின் குளிரோடு தொடங்கியது. உறங்கும் நேரம் வந்த பின்பும் பக்கத்து வீட்டில் யாரும் வரவில்லை.

இஞ்சினியரின் மகன் நேரம் செல்லசெல்ல பயத்தில் அழத் தொடங்கினான். அனைத்து வீடுகளிலும் மின் விளக்குகள் அணைந்தன.

முத்து தனியாக நிற்கும் பையனை வீட்டிற்கு அழைத்தார். முதலில் வர மறுத்த பையன் பிறகு முத்துவோடு அவர் வீட்டிற்கு வந்தான். அவர் மனைவி கடலை மிட்டாய் ஒன்றைக் கொடுத்தாள்.

வீட்டிற்கு வந்த இஞ்சினியரும் அவர் மனைவியும், முத்துவின் வீட்டில் பையன் இருப்பதைக் கண்டு கோபம் அடைந்து பையனை அடித்து இழுத்துச் சென்றனர். அவன் கையில் இருந்த கடலை மிட்டாயைப் பிடுங்கி எறிந்தனர்.

முத்துவிற்கும் அவர் மனைவிக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. திகைத்து நின்றனர். நன்றி சொல்ல வேண்டியவர்கள் நடந்து கொண்ட செயலை நினைத்து வருந்தினர்.

அடுத்தநாள் அங்கு வாழும் பணக்காரர்கள் ஒன்று கூடி தெருவில் ஒரு பிள்ளையார் கோவில் கட்டலாம் என முடிவெடுத்து பேசிக் கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு வீட்டிற்கும் எவ்வளவு தொகை எனவும், யார் யார் என்னென்ன பணிகளைச் செய்ய வேண்டும் எனவும் கலந்துபேசி முடிவெடுத்தனர்.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த முத்து அங்கு சென்று, “எல்லாருக்கும் வணக்கம் நானும் இங்கு வசிப்பவன்தான், என்னால் முடிந்த தொகையை, நான் கொடுக்கலாமா?” என்று பணிவாக கேட்டார்.

அப்போது ஏளனமாக சிரித்தபடி கூட்டத்தில் இருந்த பணக்காரர் ஒருவர், “ஆமாம், நீ அப்படியே ஆயிரம், ரெண்டாயிரம்னு குடுத்துடுவ, நீ குடுக்குற சில்லரைய வச்சு ஒன்னும் பன்ன முடியாது. அன்னதானம் போடுறப்போ குடும்பத்தோட வந்து சாப்பிடுட்டு போ” என்றதும் அங்கு கூடியிருந்த அனைவரும் சிரித்தனர்.

மனசாட்சியே இல்லாத அந்த மனிதாபிமானம் மறந்த மனிதரின் பதிலினைக் கேட்டு மனம் நொந்து வீட்டிற்கு சென்றார் முத்து.

கோவில் கட்டும் பணிகள் தொடங்கின. முத்துவின் மகள் தந்தையிடம் பணிவாக கேட்டாள், சில கேள்விகளை.

“ஏன்ப்பா இந்த தெருவுல உள்ள யாரும் நம்மகூட பேச மாட்ராங்க, கோவில் கட்டுவதற்கு பூமி பூஜை போட்டப்ப கூட நம்மல கூப்புடலையே. என்ன காரணம்பா?” என மகள் கேட்டதும், முத்துவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“இல்லம்மா நம்ம பணமில்லா ஏழையாக இருப்பதால் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை” என்றார்.

ஆனால் பள்ளிக்கூடத்துல அத்தனை பணக்காரப் பிள்ளைகள் படிச்சாலும், நானும் அங்கதான் படிக்கிறேன் பள்ளிக்கூடம் என்னை ஒதுக்க வில்லையே, இவர்கள் மட்டும் ஏன் ஒதுக்குறாங்கப்பா என்றதும், முத்துவிற்கு தன் மகளின் சிந்தனைக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

“பள்ளிக்கூடம் அனைவர்க்கும் சமம்” என்றார் முத்து. “கோவிலும் அப்படிதானப்பா” என்றாள் பதிலுக்கு.

இதனை பார்த்த முத்துவின் மனைவி தன் மகளை சாப்பிட வருமாறு அழைத்து கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

அடுத்தநாள் காலையில் நன்றாக உறங்கிய முத்துவை, அப்பா “எந்திரிங்க, எந்திரிங்க என்கூட வாங்க” என அவசரமாக எழுப்பி மகள் வாசலுக்கு அழைத்துச் சென்றாள்.

முத்து பார்த்ததும் கையெடுத்து கும்பிட்டார். களிமண்ணால் ஆகிய ஒரு பெரிய பிள்ளையார் சிலையை மிக சிறப்பாக செய்திருந்தாள் முத்துவின் மகள். மகளை கட்டிப் பிடித்து மகிழ்ச்சியடைந்தார் முத்து.

தினமும் சிலைக்கு பூ வைத்து அந்த ஏழை குடும்பம் வணங்கியது. ஏழையின் சிரிப்பில் இறைவன் மகிழ்ந்தார்.

பணக்காரர்கள் கட்டிய கோவிலை வணங்கி சென்றவர்கள் ஏழை முத்துவின் வீட்டு வாசலில் உள்ள பிள்ளையார் சிலையையும் வணங்கி சென்றனர். ஏழை மனங்கள் அதனைக் கண்டு மகிழ்ந்தன.

முத்துவிடம் மகள் கேட்டாள். “ஏன்ப்பா நாம் ஏழைதானே, ஏன் நம் சிலையை மட்டும் இவர்கள் வணங்குகிறார்கள்?”

“இறைவன் எங்கு இருந்தாலும் மக்கள் வணங்குவார்கள்” என்றார் முத்து.

‘மனிதர்களுக்கு அப்படியில்லை, இருக்கும் இடத்தைப் பொறுத்தே மதிப்பு’ என மனதால் நினைத்து சலித்துக்கொண்டார்; இந்த நிலை எப்போதுதான் மாறுமோ என பெருமூச்சுவிட்டார் முத்து.

“என்று தணியும் இந்த

ஏழைகளின் தாகம்

என்று மடியும் இந்த

பணக்கார மோகம்” என

இன்று பாரதியார் வாழ்ந்தால் பாடியிருப்பாரோ…

கி.அன்புமொழி

கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்

One Reply to “ஏழையின் மதிப்பு – சிறுகதை”

  1. அருமையான கதை. “ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம்”; தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் ஏழைகளின் மனதிலும் இருப்பான் வீட்டிலும் இருப்பான் என்பதை ஏற்காத இந்த சமூகத்தில் அருமையான கதை மூலம் அந்த‌ தெளிவை சொன்னதற்கு வாழ்த்துக்கள்!

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.