இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சிறந்த இசையமைப்பாளர். தன் இசையால் உலக மக்களை கவர்ந்தவர்.
“எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே” என்ற மந்திரச் சொல்லை உச்சரிப்பவர்.
நாம் இக்கட்டுரையில் ரகுமானின் வாழ்க்கை வரலாறு, இசைப் பயணம் மற்றும் சாதனைகள் ஆகியவற்றைப் பற்றி பார்ப்போம்.
பிறப்பு
ஏ.ஆர்.ரகுமான் 1966ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் பிறந்தார்.
இவருடைய தந்தை பெயர் சேகர். இவருடைய தாயார் பெயர் கஸ்தூரி. இவரது இயற்பெயர் திலீப் குமார் ஆகும். இவரது தந்தை மலையாள திரைப்படத் துறையில் பணியாற்றினார்.
இளமைப் பருவம்
ஏ.ஆர்.ரகுமான் தன் ஒன்பதாம் வயதில் தன் தந்தையை இழந்தார். எனவே இசைக் கருவிகளை வாடகைக்கு விடும் தொழிலை அவர் தாயார் செய்தார்.
அப்போது ரகுமான் கீபோர்டு, ஆர்மோனியம் ஆகிய கருவிகளை வாசிக்கப் பழகிக் கொண்டார். இவர் தன்ராஜ் மாஸ்டரிடம் இசையைக் கற்றார்.
ரகுமான் தன் 11ஆம் வயதில் இளையராஜாவின் இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பவராக சேர்ந்தார்.
ரகுமானின் மனைவியின் பெயர் ஷெரினா பானு. இவருக்கு காதிஜா, கீமா, அமின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இசைப்பயணம்
ஏ.ஆர்.ரகுமான் எம்.எஸ்.விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதன் ஆகியோரிடம் பணி புரிந்தார். இவர் லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியில் கிளாசிக்கல் இசையில் பட்டம் பெற்றார்.
ரகுமான் நிறைய விளம்பரப்படங்களுக்கு இசை அமைத்தார். பூஸ்ட், ஏர்டெல், ஏசியன் பெயிண்ட், லியோகாபி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
ரகுமான் 1992இல் மணிரத்தினத்தின் “ரோஜா” படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் பிரபலமாயின. இப்படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.
ரகுமான் ஜென்டில்மேன், கிழக்குச் சீமையிலே, திருடா திருடா, உழவன், டூயட், காதலன், கருத்தம்மா, மே மாதம், பம்பாய், இந்திரா, முத்து போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
மேலும் இவர் காதல் தேசம், இருவர், மின்சாரக்கனவு, ரட்சகன், ஜீன்ஸ், உயிரே, முதல்வன், சங்கமம், ஜோடி, காதலர் தினம், படையப்பா, அலைபாயுதே, ரிதம், தெனாலி, கன்னத்தில் முத்தமிட்டால், பாய்ஸ் மற்றும் எந்திரன் போன்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் உள்ள படங்களுக்கு இசையமைத்தார். எனவே இவர் “இசைப்புயல்” என்று அறியப்படுகிறார்.
ரகுமான் திரைபடப் பாடல்களுக்கு இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் பல ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். அவற்றில் “வந்தேமாதரம்”, “தீன் இசை மாலை”, “ஜன கண மன” ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
ஏ.ஆர்.ரகுமான் பெற்ற விருதுகள்
ரகுமான் 1992இல் “ரோஜா” படத்தில் இசையமைத்தற்காக முதல்
தேசியவிருதைப்பெற்றார்.இவர்1997இல் “மின்சாரக்கனவு”
படத்திற்கும், 2002இல் “லகான்” என்ற இந்தி படத்திற்கும், 2003இல் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்திற்கும் தேசிய விருதுகளைப் பெற்றார்.
“முத்து” திரைப்படம் ஜப்பானில் மாபெரும் வெற்றி பெற்றது. இவர் 2009ஆம் ஆண்டு “ஸ்லம்டாக் மில்லியனியர்” என்ற ஆங்கிலப் படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றார்.
இவருக்கு 2010ஆம் ஆண்டில் இந்திய அரசின் “பத்மபூசண் விருது” அளிக்கப்பட்டது. மேலும் ரகுமானுக்கு “கோல்டன் குலோப் விருது” மற்றும் “பாஃப்டா விருது” போன்ற விருதுகளும் வழங்கப்பட்டன.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் தனது “ஏ.ஆர்.ரகுமான் பவுண்டேசன்” மூலம் பல நற்பணிகளை செய்து வருகிறார்.
அவரது இசைப் பணியும் சமூகப் பணியும் மென்மேலும் சிறக்க கடவுளை பிரார்த்திப்போம். அவரது கடின உழைப்பையும், விடாமுயற்சியையும் நாமும் பின்பற்றுவோம்.
வாழ்கஇந்தியா!
வளர்க ரகுமானின் புகழ்!!
– பிரேமலதா காளிதாசன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!