ஐக்கிய நாடுகள் சபை உலகில் உள்ள பல நாடுகளை உறுப்பினராகக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு ஆகும்.
முதல் உலகப் போரின் முடிவில் ஏற்படுத்தப்பட்ட பன்னாட்டுக் கழகமான தேசங்களின் அணி என்னும் அமைப்பானது உலக அமைதியையும், பாதுகாப்பையும் நிலை நாட்டாத காரணத்தினால் இரண்டாம் உலகப்போர் ஏற்பட்டது.
கிபி. 1939 முதல் 1945 வரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஏற்பட்ட அழிவானது முதல் உலகப் போரைவிட அதிகமாகும். அதாவது 5 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்கள் உயிரினை இழந்தனர்.
எனவே அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் உலகத்தில் உடனடியாக நிரந்தரமான அமைதி ஏற்படுத்த ஒரு புதிய அமைப்பு தேவை என உணர்ந்தன. அதன் விளைவாக ஐக்கிய நாடுகள் சபை உருவானது.
ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றமும், தொடக்கக் கால திட்டங்களும்
உலக அமைதியை நிலைநாட்ட உருவாக்கிய பன்னாட்டு நிறுவனத்தின் அடிப்படைத் திட்டங்கள் அமெரிக்காவின் ஆதரவுடன் 1939ம் ஆண்டு உருவாயின.
உலக அமைதிக்காக செயலாற்றும் நேச நாடுகளைக் குறிப்பதற்காக ஐக்கிய நாடுகள் என்ற பெயரை அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத்தலைவர் பிராங்களின் டி ரூஸ்வெல்ட் உருவாக்கினார். 1942 சனவரி 1ம் நாள் அட்லாண்டிக் சாசனத்தில ஐக்கிய நாடுகள் என்ற பெயர் முதன் முதலில் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சாசனம்
பல்வேறு நாடுகளில் நடைபெற்ற மாநாடுகளின் முடிவில் ஐக்கிய நாடுகள் சபை உருவானது. ஐக்கிய நாடுகள் அவையின் சாசனத்தை எழுதுவதற்குச் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் ஒரு மாநாடு ஏப்ரல் 25ம் நாள் 1945ஆம் ஆண்டு கூட்டப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலக்குகள், நோக்கங்கள், விதிமுறைகள் ஆகியவற்றின் தொகுப்பே ஐக்கிய நாடுகள் சபை சாசனம் ஆகும். இச்சாசனத்தில் 50 நாடுகளின் பிரதிநிதிகள் 1945 ஜுன் 26ம் நாள் கையெழுத்திட்டனர்.
1945 அக்டோபர் 24ம் நாள் ஐக்கிய நாடுகள் அவை தமது செயல்பாட்டைத் தொடங்கியது. எனவே ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24ம் நாள் ஐக்கிய நாடுகள் சபை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
ஐ.நா.சபை உருவாக்குவதற்கு முன் கூட்டப்பட்ட மாநாடுகள்
1943 அக்டோபர் 30 – மாஸ்கோ
1943 டிசம்பர் 1 – டெக்ரான்
1944 செப்டம்பர் 21 – டம்பர்டன் ஓக்ஸ்
1944 அக்டோபர் 7 – டம்பர்டன் ஓக்ஸ்
1945 பிப்ரவரி 11 – யால்டா
ஐ.நா.சபையின் இலச்சினை, கொடி மற்றும் மொழிகள்
ஐந்து உள்வட்டங்களும் அதன் மீது வடதுருவத்திலிருந்து பார்த்தால் தெரியக்கூடிய வகையிலான உலகப் படத் தோற்றமும், அதனைச் சூழ்ந்து ஆலீவ் இலைக் கொத்துகளும் கொண்ட படம் ஐ.நாவின் இலச்சினையாக உருவாக்கப்பட்டுள்ளது.
உலக அமைதியை குறிக்கும் வண்ணம் ஆலிவ் இலை கொத்துகளும், உலக அமைதி மற்றும் பாதுகாப்பினை அடைவதே ஐ.நா.வின் முக்கிய இலக்கு என்பதனை எடுத்துரைக்க உலகபடமும் ஐ.நாவின் இலச்சினையாக உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிர் நீல நிறக் கொடியின் நடுவில் வெள்ளைநிறத்தில் ஐ.நா.வின் இலச்சினை பொறிக்கப்பட்ட கொடி, ஐ.நா.வின் கொடியாக அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ருஷியன், சீனமொழி மற்றும் அரேபியமொழி ஆகியவை ஐ.நாவின் பொது மொழிகளாக இருக்கின்றன.
ஐ.நா.வின் செயல்கள்
அமைதியை நிலைநாட்டல், முரண்பாடுகளை களைதல், அகதிகளுக்கு பாதுகாப்பு அளித்தல், தீவிரவாதம் தடுத்தல், படைவலிமைக்குறைப்பு, மக்களாட்சியை மேம்படுத்தல், தொடர் வளர்ச்சி, பன்னாட்டு மக்கள் மற்றும் குழந்தைகள் நலன் மேம்படுத்தல், அம்மை நோயினால் ஏற்படும் இறப்பு விகிதத்தைக் குறைத்தல், போலியோ நோயை ஒழித்தல், மலேரியா இறப்புகளைத் தடுத்தல், உணவு உற்பத்தியைப் பெருக்குதல்.
ஐ.நா.சபையின் நோக்கங்கள்
உறுப்புநாடுகளுக்கு இடையே ஏற்படும் வேறுபாடுகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணுதல்
உலக அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்டல்
நாடுகளிடையே நட்புறவுகளை உருவாக்குதல்
உலகப் பொருளாதாரம், சமூகப் பண்பாடு மற்றும் மனித இனம் சார்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஒத்துழைத்தல்
சமூக முன்னேற்றம்
தரமான வாழ்வு மற்றும்
மனித உரிமைகளை மேம்படுத்துதல் ஆகியன ஐ.நா.சபையின் நோக்கங்களாகும்.
ஐ.நா.சபையின் ‘ஆயிரம் ஆண்டு குறிக்கோள்’
இந்த ஆயிரம் ஆண்டில் (கி.பி.2000), கீழ்க்கண்ட குறிக்கோள்களை ஐ.நா. அவை வகுத்துள்ளது.
1) மிகுதியான ஏழ்மையையும், பட்டினியையும் நீக்குதல்.
2) அனைவருக்கும் தொடக்கக்கல்வி அளித்தல்.
3) பாலின சமத்துவத்தையும், பெண்களுக்கு அதிகாரமளித்தலையும் உருவாக்குதல்.
4) குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைத்தல்
5) அன்னையர் உடல் நலம் பேணுதல்
6) எய்ட்ஸ், ஹெச்ஐவி, மலேரியா போன்ற நோய்களைக் களைய நடவடிக்கை எடுத்தல்.
7) சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்தல்
8) முன்னேற்றப்பணிகளுக்காக உலகளாவியத் தோழமையை உருவாக்குதல்.
ஐ.நா. சபையின் அமைப்புகள்
ஐ.நா. சபையானது, ஆறு முக்கிய அமைப்புகளைக் கொண்டு செயல்படுகிறது. அவைகளாவன:
1) பொதுப்பேரவை
2) பாதுகாப்புப் பேரவை
3) பொருளாதார மற்றும் சமூகப் பேரவை
4) பன்னாட்டு நீதிமன்றம்
5) அறங்காவலர் பேரவை
6) பன்னாட்டு செயலகம்.
பொதுப்பேரவை
ஐ.நா.வின் அனைத்து அமைப்புகளில் மிகமுக்கியமான அங்கம் பொதுப்பேரவை ஆகும். இது மனித இனப் பாராளுமன்றம் என்று அழைக்கப்படுகிறது. பொதுப் பேரவையில் அனைத்து உறுப்பு நாடுகளின் பிரதிநதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாக்கு உண்டு. ஒவ்வோர் உறுப்பு நாடும் ஐந்து பிரதிநிதிகளைப் பொதுப் பேரவைக்கு அனுப்பமுடியும். ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூடும். பெரும்பாலும் செப்டம்பர் மாதத்தில் பொதுக்குழுக்கூட்டம் நடைபெறும். பாதுகாப்புப் பேரவையின் வேண்டுகோளின்படி தேவைப்படும் போது அவசரக் கூட்டமும் நடைபெறும்.
பொதுப்பேரவையின் தலைவராக 1954 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர், திருமதி.விஜயலட்சுமி பண்டிட் ஆவார்.
முக்கிய நடவடிக்கைகளான, அமைதி, பாதுகாப்பு, புதிய உறுப்புநாடுகளைச் சேர்த்தல், வரவு, செலவு திட்டங்களை நிறைவேற்றுதல் ஆகியவற்றிற்கு 3ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மற்றத் தீர்மானங்களுக்கு சாதாரணப் பெரும்பான்மையே போதுமானது.
பொதுப் பேரவையின் முக்கியச் செயல்பாடுகள்
1) தலைவரையும், 21 துணைத் தலைவர்களையும் தேர்ந்தெடுப்பது.
2) பாதுகாப்புப் பேரவையின் நிரந்தர உறுப்பினரல்லாதவர்களையும், ஐ.நா. சபையின் பிற அமைப்புகளுக்கான உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பது.
3) ஆண்டு வரவு, செலவுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது.
4) பாதுகாப்புப் பேரவையின் பரிந்துரையின்படி, பொதுச் செயலர் மற்றும் பன்னாட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை நியமனம் செய்வது.
பாதுகாப்புப் பேரவை
ஐ.நா.அவையின் இரண்டாவது முக்கிய அமைப்பு பாதுகாப்பு அவை ஆகும். இது ஐ.நா.அவையின் நிர்வாக அமைப்பாக விளங்குகிறது. பாதுகாப்பு பேரவையானது 5 நிரந்தர உறுப்பினர்களையும், 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கி, மொத்தம் 15 பேரைக் கொண்டது.
ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சீனா ஆகியவை நிரந்தர உறுப்பினர்கள். மற்ற நிரந்தரமற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும். இவர்கள் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பாதுகாப்புப் பேரவையின் உறுப்பினர்கள் மாதம் ஒருமுறை கூடி புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பர். 2ஃ3 பங்கு உறுப்பினர்களின் ஆதரவின் அடிப்படையில் முடிவுகள் தீர்மானிக்கப்படும். நிரந்தர உறுப்பு நாடுகளுக்குத் தடுப்புரிமை ஆணை (Veto Power) உண்டு. இதனைப் பயன்படுத்தி ஒரு நிரந்தர உறுப்பு நாடு எந்த ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாமல் தடுக்க இயலும்.
பாதுகாப்புப் பேரiயின் முக்கியச் செயல்பாடுகள்:-
1) உலக அமைதியையும், பாதுகாப்பையும் நிலை நிறுத்துதல்.
2) உறுப்பு நாடுகளிடையே எழும்பிரச்சனைகளை அமைதி வழியில் தீர்வு காணுதல்
3) புதிய உறுப்பினர்களைச் சேர்க்கப் பரிந்துரைத்தல்
4) பாதுகாப்புப் பேரவையின் பொதுச் செயலர் தேர்தலில் பங்கெடுத்தல்.
பொருளாதார மற்றும் சமூகப் பேரவை
இப்பேரவை ஐ.நா.வின் பொருளாதார, சமூகச் செயல்பாடுகளையும், மற்றும் ஐ.நாவின் சிறப்பு நிறுவனத்தின் பணிகளையும் ஒருங்கிணைக்கிறது. இதன் 54 உறுப்பினர்கள் ஒவ்வொரு மூன்றாம் ஆண்டும் பதவி விலகுவர். பின்னர் அதில் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இப்பேரவை, தேவை ஏற்படும்போதெல்லாம் ஆண்டு முழுவதும் கூடும். இந்தப் பேரவையின் முக்கியக் கூட்டம் ஜுலை மாதம் நடைபெறும். இதில் பொருளாதாரப் பிரச்சனைகள், சமூக – மனிதாபிமானப் பிரச்சனைகளான, சமூக வளர்ச்சி, பெண்கள் நிலை, குற்றங்களைத் தடுத்தல், போதை மருந்துகள் ஆகியவைப் பற்றி விவாதிக்கப்படும்.
அறங்காவலர் பேரவை
தன்னாட்சி அதிகாரம் பெறாத 11 நாடுகளை நிர்வகிக்க 7 உறுப்பினர் கொண்ட அறங்காவலர் பேரவை அமைக்கப்பட்டது. பேரவை மேற்பார்வை செய்த நாடுகள் தன்னாட்சி பெற உதவியது. 1994ஆம் ஆண்டுக்குள் இந்நாடுகளனைத்தும் சுதந்திரம் அடைந்தன.
இப்பணி தற்போது நிறைவுற்றதால், வருங்காலத்தில் தேவை ஏற்பட்டால் அறங்காவலர் பேரவை செயல்பட தொடங்கும் வகையில் அறங்காவலர் பேரவை மாற்றியமைக்கப்பட்டது.
பன்னாட்டு நீதிமன்றம்
பன்னாட்டு நீதிமன்றம் ‘உலக நீதிமன்றம்’ என அழைக்கப்படுகிறது. இது ஐ.நா. அவையின் முக்கிய நீதி அமைப்பாகும். இந்நீதிமன்றத்துக்கான 15 நீதிபதிகள் பொதுக்குழுவாலும், பாதுகாப்புப் பேரவையாலும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
உறுப்பு நாடுகளிடையே எழும் பிரச்சினைகளை இந்நீதிமன்றம் தீர்த்துவைக்கும். மேலும், ஐ.நா. அவைக்கும், அதன்கீழ் செயல்படும் சிறப்பு நிறுவனங்களுக்கும் தேவையான அறிவுரைகளையும் இது வழங்கும். இது ஹாலந்து நாட்டில் உள்ள ஹேக் என்ற நகரில் அமைந்துள்ளது.
செயலகம்
செயலகமானது ஐ.நா.சபையின் பொதுக்குழு, பாதுகாப்புப் பேரவை, மற்றும் பிற அமைப்புகளின் வழிக்காட்டுதலின்படி நிர்வாகப் பணிகளைச் செய்கிறது. பொதுச் செயலரின் தலைமையிலும், வழிகாட்டுதலிலும் செயலகத்தின் நிர்வாகப் பணிகளானது நடைபெறுகின்றன.
இச்செயலகத்தில் பல்வேறு துறைகளில் அலுவலர்கள், ஊழியர்கள் என 7500 பேர் பணிபுரிகிறார்கள். திறமை, நேர்மை, தகைமை ஆகிய உயர்ந்த பண்புகள் அடிப்படையிலேயே இதன் அலுவலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஐ.நா. அவை மேலும் 30 சிறப்பு நிறுவனங்களின் துணையுடன் இலக்கினை அடைய அரும்பாடுபடுகிறது.
ஐ.நா.சபையின் முக்கிய சில சிறப்பு நிறுவனங்கள்:-
FAO – உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனம்
(Food and Agricultural Organization)
ILO – பன்னாட்டுத் தொழிலாளர் நிறுவனம்
(International Labour Organization)
IMF – உலக நிதி நிறுவனம்
(International Monetary Fund)
UNICEF- ஐ.நா. உலக நாடுகள் குழந்தைகள் நலநிதி
(United Nations Interanational & Children Emergency Fund)
UNESCO- ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம்
(United Nations Educational Scientific and Cultural Organization)
WHO – உலக மக்கள் நல நிறுவனம்
(World Health Organisation)
WTO – உலகளாவிய வணிக நிறுவனம்
(World Trade Organisation)
ஐ.நா. அவையின் சாதனைகள்
உலக நாடுகளிடையே போரைத் தவிர்த்து, அமைதியையும், பாதுகாப்பையும் ஐ.நா. அவை உருவாக்கி வருகிறது. உறுப்பு நாடுகளிடையே உள்ள சமூக, கலாச்சார, பொருளாதார, மனிதாபிமானப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது.
1946ல் ஈரானிலிருந்து ரஷ்யப் படைகளைத் திரும்பப் பெறவும், சிரியா, லெபனான் நாடுகளிலிருந்து பிரிட்டன், பிரான்ஸ் படைகளைத் திரும்பப் பெறவும் செய்தது.
1947ல் டச்சு நாட்டின் பிடியிலிருந்து இந்தோனேசியாவுக்கு விடுதலை வழங்கியது.
1956ல் சூயஸ்கால்வாய் பிரச்சனையை முடிவுக்குக் கொணர்ந்து அதை அனைத்து நாடுகளின் பயன்பாட்டிற்குப் பொதுவாக்கியது.
1962 மற்றும் 1973ல் எழுந்த, மத்திய கிழக்கு நாடுகள் பிரச்சனையையும், கியூபா ஏவுகணைப் பிரச்சனையையும் முடிவுக்கு கொண்டு வந்தது.
1988ல் ஏற்பட்ட ஈரான் – ஈராக் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
1989ல் ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யப்படைகளைத் திரும்ப பெற செய்தது.
1990ல் குவைத் நாட்டிற்கு மேலாண்மையினை பெற்றுத் தந்தது.கம்போடியா, எல் சால்வேடர், கௌட்டாமேலா, மொசாம்பிக் ஆகிய நாடுகளின் உள்நாட்டுப் போர்களை முடிவுக்கு கொண்டுவந்தது.
ஐ.நா.சபையின் சிறப்பு அமைப்பான உலக சுகாதார நிறுவனம் (WHO) பெரியம்மையை முழுவதும் நீக்கியதுடன் போலியோ, மலேசியா, காசநோய் ஆகியவற்றை உலகிலிருந்து நீக்கவும் உறுதியேற்று செயல்பட்டு வருகிறது.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் மேலாணையர் அலுவலகம் அகதிகளுக்கு ஆற்றிய சேவைக்காக 1954 மற்றம் 1981 ஆம் ஆண்டுகளில் நோபல் பரிசு பெற்றுள்ளது.
வருங்காலத் தலைமுறையினருக்கு அமைதியான, பாதுகாப்பான உலகை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபையும் அதன் பிற நிர்வாக அமைப்புகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.