ஐயடிகள் காடவர்கோன் நாயனார் – சேத்திர வெண்பாவை இயற்றியவர்

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் சிவாலயங்களை தரிசித்து சேத்திர வெண்பா என்னும் நூலை இயற்றிய பல்லவ மன்னர்.

காடவர் என்பது பல்லவ மன்னர் குலத்தினைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனின் அடிகள் என்பதன் மரூவாகும். ஐயடிகள் காடவர்கோன் என்பது ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருளினைக் கொடுக்கும்.

புகழ்பெற்ற காஞ்சியினைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவர்கள் வழித்தோன்றலாக உதித்தவர் ஐயடிகள் காடவர் கோன்.

வீரத்தில் சிறந்த இவர் திறமையான ஆட்சியாளராகவும் விளங்கினார். தம்முடைய ஆட்சித் திறத்தால் குடிமக்களுக்கு வறுமை வராமல் பாதுகாத்து வளமையான வாழ்வினை அளித்தார்.

தம்முடைய ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள எல்லா உயிர்களும் இனிது இருக்கும்படி செங்கோல் செலுத்தி, எங்கும் சிவநெறி விளங்கி இருக்கும்படி நல்லாட்சி செய்தார்.

இவர் தமிழிலும் வடமொழியிலும் பெரும் புலமை மிக்கவராக இருந்தார். இதனால் இரு மொழிகளிலும் இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல கலைகளைச் சிறந்தோங்கச் செய்தார்.

சிவனிடத்தில் கொண்டிருந்த பேரன்பு நாள்தோறும் அவருக்கு பெருகிக் கொண்டே வந்தது. இதனால் அரச பதவி சிவனை வழிபட்டு வாழ்வதற்கு இடையூறாக இருக்கும் என்ற எண்ணம் உண்டானது.

அதனால் தம்முடைய மகனுக்கு முடிசூட்டி, அரசநீதிப்படி நாடு காக்கும் பெருங்கடமையை இன்னவாறு ஆற்ற வேண்டுமென்று தம் மகனுக்கு அறிவித்து அரசாட்சியை அவன்பால் ஒப்படைத்து தாம் விரும்புகின்ற
சிவத் தொண்டைச் செய்ய முற்பட்டார்.

சிவபிரான் எழுந்தருளியுள்ள திருத்தலங்களுக்கெல்லாம் சென்று தரிசிக்க வேண்டும் என்ற பேராவல் அவரிடம் உண்டானது.

ஒவ்வொரு திருக்கோவிலுக்கும் சென்று தம்மால் இயன்ற திருத்தொண்டினைச் செய்தார்.

தமிழ்ப் புலமை படைத்தவராதலின் ஒவ்வொரு தலத்துக்கும் ஒவ்வொரு வெண்பாவைப் பாடி வழிபடும் வழக்கத்தை மேற்கொண்டார்.

அவர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பு ‘சேத்திர வெண்பா‘ என்ற பெயரில் தொகுக்கப்பட்டு பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் குருபூஜை ஐப்பசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

சிவாலயங்கள் சென்று இறைவழிபாடு செய்து சேத்திர வெண்பா பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனாரை சுந்தரர் திருத்தொண்டத் தொகையில்ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்‘ என்று போற்றுகிறார்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.