ஐயப்பனின் அறுபடை வீடுகள்

ஐயப்பனின் அறுபடை வீடுகள்

ஐயப்பனின் அறுபடை வீடுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது போன்று கேரளாவில் ஐயப்பனுக்கு அறுபடை வீடுகள் உள்ளன.

ஐயப்ப பக்தர்கள் இந்த அறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபாடு சென்கின்றனர். அவ்வாறு அவர்கள் ஐயப்பனின் அறுபடைவீடுகளையும் வழிபாடு செய்வதை சிறப்பாகக் கருதுகிறார்கள்.

சபரிமலை, எருமேலி, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, பந்தளம் ஆகியவையே ஐயப்பனின் அறுபடை வீடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

சபரிமலை

சபரிமலை கேரள மாநிலத்தில் பத்தன்திட்டா மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.

இவ்விடம் மகிஷியுடனான போரில் அவளை அழித்து ஐயப்பன் வெற்றி பெற்ற பிறகு தியானம் செய்த இடம் என்றும், இப்பூவுலகை விட்டு செல்லும்முன் பந்தள மகாராஜாவின் வேண்டுகோளின்படி அம்பை எய்து கோவில் அமைக்க ஐயப்பன் தேர்வு செய்த இடம் என்றும் கூறப்படுகிறது.

48 நாட்கள் கடும்விரதம் இருந்து இருமுடி கட்டி இக்கோவிலில் இருக்கும் பதினெட்டுப்படிகளில் சென்று ஐயப்பனை வழிபடுவது மிகவும் சிறப்பானது என பக்தர்களால் கருதப்படுகிறது.

இக்கோவிலின் பின்புறத்தில் மளிகைப்புறத்து அம்மன் சந்ததி இருக்கிறது.

இக்கோவிலில் யோகச் சின முத்திரையுடன் அருள்பாலிக்கும் ஐயப்பனைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது குறிப்பிடத்தக்கது.

எருமேலி

எருமேலி சாஸ்தா கோவிலில் ஐயப்பன் கைகளில் வில், அம்பு கொண்டு வேட்டை கோலத்தில் காட்சியளிக்கிறார்.

எருமைத்தலை கொண்ட மகிஷியை ஐயப்பன் அழித்த இடம் எனக் கருதப்படுவதால் இவ்விடம் ‘எருமைகொல்லி’ என்று அழைக்கப்பட்டது. பின்னர் நாளடைவில் ‘எருமைகொல்லி’ என்ற சொல் மருவி ‘எருமேலி’ என்றானது.

மகிஷியை ஐயப்பன் அழித்ததைக் கொண்டாடும் விதமாக இவ்விடத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் வண்ணப்பொடிகளை தங்களின் உடலில் பூசிக் கொண்டு வெடி வெடித்து ஆடிப்பாடி மகிழ்கின்றனர். இந்நிகழ்ச்சி ‘பேட்டை துள்ளல்’ என்றழைக்கப்படுகிறது.

சபரிமலை செல்லும் கன்னிச்சாமிகள் பேட்டை துள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஆரியங்காவு

ஆரியங்காவு கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் தமிழ்நாட்டின் செங்கோட்டையிலிருந்து 23கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இங்கு தர்ம சாஸ்தா ‘மதகஜ வாகன ரூபனாக’ அதாவது மதம் பிடித்த யானையை அடக்கி வேட வடிவில் மாப்பிள்ளைக் கோலத்தில் புஷ்கலா தேவியுடன் திருமணக் காட்சி தருகிறார்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் தர்மசாஸ்தா-புஷ்கலை திருமணம்விழா சிறப்பு வாய்ந்தது.

பரசுராமரால் உருவாக்கப்பட்ட தொன்மையான தலங்களுள் இதுவும் ஒன்று என்று கருதப்படுகிறது.

அச்சன்கோவில்

அச்சன்கோவில் கேரள மாநிலத்தில் பத்தனாபுரம் வட்டத்தில் தமிழ்நாட்டின் செங்கோட்டையிலிருந்து 30கிமீ தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது.

இக்கோவில் பரசுராமரால் அமைக்கப்பட்ட கோயில் என்றும், இங்குள்ள தர்மசாஸ்தா சிலை மிகப்பழமையானது என்றும் கருதப்படுகிறது.

இங்கு ஐயப்பன் அமர்ந்தநிலையில் கையில் அமுதமும் காந்தமலை வாளும் ஏந்தி காட்சியளிக்கிறார்.

இவருக்கு இருபுறமும் பூரணம், புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போன்று காட்சியளிக்கின்றனர்.

இங்குள்ள ஐயப்பனை கல்யாண சாஸ்தா என்று அழைக்கின்றனர். இவரை வழிபட திருமணத்தடை நீங்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

இக்கோவிலில் வைக்கபட்டிருக்கும் வாள் மக்களின் அச்சத்தை போக்கி வளமான வாழ்வினைத் தருவதாக கருதப்படுகிறது. இங்குள்ள ஐயப்பன் பெரும் மருத்துவர் என்னும் பொருள்ள ‘மகாவைத்யா’ என்றழைக்கப்படுகிறார்.

பாம்பு உள்ளிட்ட விஷகடிகளுக்கு இங்குள்ள ஐயப்பனின் சந்தனமும் புனிதநீரும் தரப்படுகிறது. இச்சந்தனத்துடன் புனித நீரைக் கலந்து பூசினால் விஷம் நீங்கி குணம் பெறலாம் என்கின்றனர்.

குளத்துப்புழா

இக்கோவில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் குளத்துப்புழா என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இங்கு ஐயப்பன் பாலகனாக காட்சியளிக்கிறார்.

ஆதலால் இவரை ‘பால சாஸ்தா’ என்று அழைக்கின்றனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இக்கோயிலின் வாசல் சிறுகுழந்தைகள் நுழையும் அளவிற்கே உள்ளது.

இக்கோயிலில் உள்ள யட்சியம்மனிடம் குழந்தை வரம் கேட்போருக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

பந்தளம்

பந்தளத்தில்தான் ஐயப்பன் ராஜசேகரப் பாண்டியனால் சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்டார். மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்குதான் ஐயப்பனுக்குரிய திருவாபரணங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

மகரஜோதி வழிபாட்டின்போது இங்கிருந்தே திருவாபரணங்கள் சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பந்தளம் கோவிலில் ஐயப்பன் புலியுடன் நிற்பது போல் காட்சி தருகிறார்.

ஐயப்பனின் அறுபடை வீடுகள் பக்தர்களின் உடல்நலம் மனநலம் சிறக்க அருள்புரியும் வகையில் அமைந்துள்ளன.

சுபரிமலைக்கு புனிதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் ஐயப்பனின் அறுபடைவீடுகளையும் தரிசனம் செய்தால் சிறப்பான பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேலும் படிக்க

ஐயப்பன் பற்றிய கதை

சபரிமலை வழிபாடு

சபரிமலை பெருவழிப்பாதை

ஐயப்பன் 108 சரணங்கள்

ஐயப்பன் பாடல்கள்