‘ஐயா’, ‘அய்யா’ எது சரி?

சிலர், “ஐயா”என்று எழுதுகின்றனர்.

ஆனால், சிலர் “அய்யா” என்று எழுதுகின்றனர்.

எப்படியும் எழுதலாம் என்பது ஒருமுறை.

ஆனால் இலக்கணம் இப்படித்தான் எழுத வேண்டும் என கூறுகிறது,

தமிழில் எழுத்துக்களை அவை ஒலிக்கும் மாத்திரை அளவினைப் பொறுத்து குறில் எழுத்துக்கள், நெடில் எழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்கள் என்று பிரித்துள்ளனர்.

கண் இமைப்பதற்கு ஆகும் நேரம் ஒரு மாத்திரை.

குறில் எழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும்.

நெடில் எழுத்துக்கள் இரண்டு மாத்திரைஅளவு நேரம் ஒலிக்கும்.

மெய்யெழுத்துக்கள் அரை மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும்.

எனவே தமிழில் ஒவ்வொரு சொல்லும் மிகவும் சிறப்புப் பெற்றனவாகத் திகழ்கின்றன.

உதாரணமாக ‘மகன்’ என்று சொல்லுக்கும் மகான் என்ற சொல்லுக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு.

பகவனுக்கும் பகவானுக்கும் வேறுபாடு உண்டு.

இவ்வாறாகப் பல உதாரணங்களைக் கூறலாம்.

எனவே சொல்லில் உள்ள எழுத்துக்களின் ஒலி அளவை கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ பொருள் மாறுபடும்!

ஐயா என்ற சொல்லில் ‘ஐ’ என்பது நெடில் எழுத்தாகும். இரண்டு மாத்திரை அளவு உள்ளது.

ஆனால், அய்யா என்ற சொல்லில் ‘அ’ என்பது குறில் எழுத்தாகும். ஒரு மாத்திரை அளவு உள்ளதாகும்.

‘ய்’ என்பது மெய்யெழுத்து அரை மாத்திரை அளவு உள்ளதாகும்.

எனவே “அய்” என்று எழுதினால் ஒன்றரை மாத்திரை அளவு தான் ஒலிக்கும்.

‘ஐ’ நெடில் = 2 அளவு

‘அ’ குறில் = 1 அளவு

‘ய்’ ஒற்று = ½ அளவு

அய் = 1+½ = 1 ½ அளவு

‘ஐ’ என்றால் தமிழில் ‘தலைவன்’ என்று பொருள். ‘ஐயா’ என்றால் ‘தலைவா’ என்று மரியாதை நிமித்தமாக அழைப்பது என்று பொருள்!

“அய்” என்றால் பொருள் ஏதும் இல்லை. “அய்யா” என்றாலும் பொருள் ஏதும் இல்லை.

எனவே மரியாதை நிமித்தமாகப் பயன்படுத்தும் ஒரு சொல்லைக் குறைத்து ஒலிப்பதும் கூறுவதும் எழுதுவதும் தவறாகும்.

நாம் செய்யும் மரியாதையில் பிழை ஏற்பட்டு விடும்.

எனவே “ஐயா” என்றே கூற வேண்டும்; எழுத வேண்டும்; படிக்க வேண்டும்.

“அய்யா” என்ற பொருளற்ற சொல்லைத் தவிர்க்கலாம்.