ஓடிசியஸ் என்னும் மாபெரும் வீரனின் கதைதான் ஒடிசி காவியம். அவன் கடற்பயணம் செய்வதில் மிகுந்த ஆவல் உள்ளவன்; மிகச் சிறந்த சிந்தனையாளன். அவனுடைய மூளை மிகவும் கூர்மையானது. கிரேக்க மக்கள் ஒடிசியஸை மிகவும் கொண்டாடினார்கள். அவன் கிரேக்க மக்களுக்குத் தனது மதி நுட்பத்தால் நல்ல சட்ட திட்டங்களை வகுத்துக் கொடுத்தான்.
அவனுக்கு மிகுந்த அழகும், கற்புமுடைய மனைவி இருந்தாள். அவள் பெயர் பெனிலோப். ஓடிசியஸ் பத்து ஆண்டுகள் போரில் கழித்தான். அதுபோல் பத்தாண்டுகள் பல்வேறு தீவுகளுக்குப் பயணம் செய்தான்.
ஒரு தீவில் ஓர் அழகிய தேவதையைச் சந்தித்தான்; அவளது காதல் வலையில் தேனுண்டு மயங்கிய வண்டு போல எட்டு ஆண்டுகள் மயங்கிக் கிடந்தான்.
ஒடிசியஸின் மனைவி பெனிலோப் கணவனுக்காக இருபது ஆண்டுகள் காத்திருந்தாள். கிரேக்க இளைஞர்கள், அவளின் அழகில் மயங்கி அவள் பின் அலைந்தனர்.
இந்தத் தொல்லை பொறுக்க முடியாத நிலையில் ஒரு போட்டி ஏற்பாடு செய்தாள். இந்தப் போட்டியில் ஒடிசி தவிர வேறு யாராலும் வெற்றி பெற முடியாது என்பது பெனிலோப்பிற்குத் தெரியும்.
போட்டி நடைபெற்றது; அதில் ஒருவன் வெற்றி பெற்றான். ஆனால், அவளோ, அவனை ஏற்க மறுத்தாள்.
வெற்றி பெற்றவனோ தான்தான் ஒடிசியஸ் எனக் கூறவும், பெனிலோப் நம்பவில்லை.
அவனைப் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று, ஒடிசியஸிற்கு மட்டுமே தெரிந்த அந்த படுக்கையறையின் சிறப்பைக் கேட்க, அதற்கு அவன் சரியான பதில் சொன்னதும்தான் அவள் நம்பினாள். இதுவே ஒடிசி காவியம்.
உலகிலேயே மிகச் சிறந்த மேல் நாட்டுப் பெண் குணசித்திரம் பெனிலோப்!
– சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்