ஒட்டகம் போல் முன்னேறு

ஒட்டகம் போல் முன்னேறு என்ற கதை, இலக்கை நோக்கிய நம் பயணம் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்குகிறது.

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வில் முன்னேற வேண்டும் என்று எண்ணி செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு முன்னேறுவதில் பொறுமை மிகவும் அவசியமான ஒன்று.

இலக்கை அடைவது மட்டுமே வாழ்க்கை அல்ல. இலக்கை நோக்கி நடக்கும் வழிப்பயணமும் வாழ்க்கை தான்.

வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டே நிதானமாக, ஆனால் தொடர்ந்து நாம் முன்னேற வேண்டும். இதனை எடுத்துக் கூறும் சா அதி என்பவர் எழுதிய பாரசீகக் கதை இதோ. தொடர்ந்து படியுங்கள்.

 

பாலைவனப் பயணம்

நான் இளைஞனாக இருந்தபோது வலிமை மிக்கவனாய் இருந்தேன். ஒருநாள் பாலைவனத்தில் பயணம் மேற்கொண்டேன்.

இளமைத் துடிப்பில் பகல் முழுவதும் மிக வேகமாகப் பாலைவன மணலில் நடந்து சென்றேன். மாலை வேளையில் சூரியன் மறையத் தொடங்கியது.

வேகமாகச் சென்றதால் என்னுடைய உடலில் சோர்வு அதிகமாகிக் கொண்டே வந்தது. ஒருசமயத்தில் என்னால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை. களைப்பு மிகுதியால் மணல் மேட்டில் சாய்ந்து விட்டேன்.

அப்போது அவ்வழியே ஒரு ஒட்டக கூட்டத்தினர் சென்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு வயதான கிழவர் என்னை நோக்கி வந்தார்.

என்னிடம் “இங்கே ஏன் படுத்திருக்கிறாய்?. இது இளைப்பாறுவதற்கு சரியான இடம் இல்லை. எழுந்திரு” என்றார்.

“நான் மிகவும் களைத்துப் போயிருக்கிறேன். என்னால் காலைக்கூட அசைக்க முடியவில்லை. என்னால் எழுந்திருக்க இயலவில்லை” என்றேன்.

அதற்கு அவர் “விரைவாக ஓடிச் சென்று பாதி வழியிலேயே விழுவதைவிட மெதுவாக நடந்து சென்று இளைப்பாறுவது சிறந்தது;

உன்னுடைய பயணத்தின் எல்லையை அடைய விரும்பினால் முதலில் அவசரப்படக்கூடாது;

எடுத்த எடுப்பிலேயே தாவிச் செல்லும் அரபிக் குதிரை விரைவிலேயே களைத்துச் சோர்ந்து விடுகிறது;

ஆனால் ஒட்டகமோ மெதுவாக அடி எடுத்து வைத்தாலும், இரவு பகலாகத் தொடர்ந்து தனது பயணத்தின் இலக்கை அடைந்து விடுகிறது.” என்றார்.

 

நாம் நம்முடைய வாழ்வில் இலக்கினை அடைய வேண்டுமானால் குதிரைப் போல் வேகமாக ஓடாமல், நிதானமாக ஆனால் தொடர்ந்து செயல்பட்டு ஒட்டகம் போல் முன்னேற வேண்டும்.

நிதானமான தொடந்த செயல்பாடு நம்முடைய இலக்கினை அடைய சரியான வழி என்பதை ஒட்டகம் போல் முன்னேறு என்ற இக்கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.