ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ என்ற இப்பாடல், திருவெம்பாவையின் நான்காவது பாடல் ஆகும்.

திருவெம்பாவை திருவாதவூரார் எனப் பேற்றப்படும் மாணிக்கவாசகரால், பிறவிப் பெருங்கடல் நோய்க்கு மருந்தான இறைவரான சிவபெருமானின் மீது பாடப்பட்டது.

மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் தங்கியிருந்தபோது திருவெம்பாவையை பாடினார். இப்பாடல் இன்றைக்கும் மார்கழியில் இறைவழிபாட்டின் போது பாடப்படுகிறது.

மார்கழியில் பாவை நோன்பிற்காக பெண்கள் அதிகாலையில் எழுந்து, இறைவனான சிவபரம்பொருளின் புகழினை பாடி, வழிபாடு செய்வதற்காக ஒன்றாக செல்ல வேண்டும் என்று தங்களுக்குள் முதல்நாள் பேசி வைத்துள்ளனர்.

மறுநாள் அதிகாலையில் பாவை நோன்பிற்கு செல்லும் போது, தங்களின் தோழி ஒருத்தி நோன்பிற்கு தயாராகாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கிறாள் என்பதை அறிகின்றனர்.

தோழிக்கும் அப்பெண்களுக்கும் இடையே நடந்த உரையாடலாக திருப்பாவையின் மூன்றாம் பாடல் அமைந்துள்ளது.

“உனக்கு மட்டும் இன்னும் பொழுது விடியவில்லையா?” என்று உள்ளிருக்கும் தோழியை பெண்கள் கேட்கின்றனர்.

அதற்கு உள்ளிருப்பவள் “நம்முடைய எல்லாத் தோழியரும் வந்து விட்டனரா?” என்று எதிர் கேள்வியை கேட்கிறாள்.

அதற்கு அவர்கள் “இறை பரம்பொருளை போற்றி வழிபாடு செய்வதற்கான நேரம் இது. ஆதலால் எத்தனை பேர் இங்குள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியாது.

நீ வேண்டுமானால் வந்து எண்ணிக் கொள். எவரேனும் குறைந்திருந்தால் மீண்டும் போய் தூங்கு” என்று கூட்டத்தினர் பதிலளிக்கின்றனர்.

இறைவழிபாட்டில் நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டு வாழ்நாட்களை வீணாக்காமல், உள்ளத்தில் அன்பு கொண்டு, உண்மையான அர்ப்பணிப்போடு, இறைவனை வழிபட்டு உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதையே இப்பாடல் உணர்த்துகிறது.

இனி திருவெம்பாவை நான்காவது பாடலைக் காண்போம்.

திருவெம்பாவை பாடல் 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ

எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்

கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்

உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து

எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்

விளக்கம்

பாவை நோன்பிற்காக அதிகாலையில் ஒன்றாகச் செல்ல வேண்டும் என்று தங்களுக்குள் முதல்நாளே பேசிக் கொண்டுள்ளனர்.

பாவை நோன்பின் வழிபாட்டிற்காக பெண்கள் கூட்டமாகச் செல்கின்றனர். ஆனால் வழிபாட்டின் அதிகாலையில் பெண்களின் தோழி ஒருத்தி தயாராகாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கிறாள்.

தோழியிடம் கூட்டத்தினர் “ஒளி பொருந்திய முத்தினைப் போன்ற பற்களை உடையவளே, இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா?” என்று கேட்கின்றனர்.

அதனைக் கேட்டதும் தோழியானவள் “அழகிய கிளியைப் போன்று கொஞ்சிப் பேசும் நம்முடைய தோழியர் அனைவரும் வந்து விட்டனரா?” எனக் கேட்கிறாள்.

உறக்கத்தின்றும் எழ மனமின்றியே தங்களுடைய தோழி, இக்கேள்வி கனையைத் தொடுக்கிறாள் என்பதை அப்பெண்கள் புரிந்து கொள்கின்றனர்.

அதற்கு கூட்டத்தினரோ “வந்திருக்கும் எல்லோரையும் கணக்கெடுத்து நாங்கள் பின்னர் தெரிவிக்கின்றோம். அதுவரையும் கண்களை மூடிக் கொண்டு உறங்கி காலத்தை வீணாக்காதே.

விண்ணவர்களான தேவர்களை ஆலகால நஞ்சியிலிருந்து காப்பாற்றி அவர்களுக்கு மருந்தாகவும், வேதங்களின் உயர்ந்த பொருளாகவும், கண்களுக்கு இனிமையாக காட்சியளிப்பவரும் ஆகிய சிவபரம்பொருளினைப் பாடி பரவசம் அடைகின்றோம்.

சிவபெருமானை பாடுகையில் உள்ளம் உருகி மெய் மறந்து நிற்கின்றோம். ஆதலால் நீயே வெளியில் வந்து தோழியரை எண்ணிக் கொள். தோழியர் எண்ணிக்கையில் குறைந்தால் நீ மறுபடியும் சென்று உறங்கு” என்கின்றனர்.

இறைவழிபாட்டில் ஒருவர் மற்றவர்களோடு தம்மை ஒப்பிட்டு வாழ்நாட்களை வீணாக்காமல், உள்ளன்போடு முழுமையான அர்ப்பணிப்புடன் இறைவனை சரணடைந்தால் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதே இப்பாடலின் உள்கருத்து.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.