ஒன்ரைக்காரு – மங்கம்மாள் பாட்டி

தப்புக் கடலை எடுக்க சின்ன களைவெட்டிய எடுத்துகிட்டு பாட்டு பாடியபடி கடலைக் காட்டின் மேற்கு பகுதியை நோக்கிப் போனாள் மங்கம்மாள் பாட்டி.

தப்புக் கடலை என்பது கடலை காட்டில் கடலையை பிடுக்கும்போது தப்பியதை எடுப்பது.

அதாவது நிலக்கடலை, கடலை செடியின் வேர்பகுதியில் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

கடலை எடுக்க, கடலைச் செடியை வேரோடு பறித்து பின்னர் அதிலிருந்து கடலையைப் பிரித்தெடுப்பர்.

கடலையைச் செடியை வேரோடு பறிக்கும் போது சில நேரங்களில் வேரின் அடிப்பகுதியில் உள்ள கடலை பூமியினுள் புதைந்து கொள்ளும். அவ்வாறு பூமியினுள் புதைந்திருக்கும் கடலையை தோண்டி எடுப்பதையே தப்புக் கடலை எடுப்பது என்பர்.

கடலைச் செடி நட்டு வைத்திருக்கும் இடத்திற்கு கீழே, நுனியில் கூர்மையாக உள்ள சின்ன களைவெட்டியால் தோண்டி தப்பு கடலை எடுப்பது வழக்கம்.

சில நேரங்களில் தப்புக் கடலை எடுப்பதற்கென்றே கூலி கொடுத்து ஆட்களை கடலை காட்டின் உரிமையாளர்கள் பணியமர்த்துவர்.

ஒருசில சமயங்களில் சிலர் தப்புக் கடலையை எடுத்து வரும் அளவில் பாதியை, கடலை காட்டின் உரிமையாளர்களுக்கு கொடுத்து விட்டு மீதிப்பாதி கடலையை கூலியாகத் தாங்களே வைத்துக் கொள்வர்.

மங்கம்மாள் பாட்டி முதல் வகையின் படி வேலைக்கு வந்தவள்.

கடலைக் காட்டின் மேற்குப் பகுதி முதல் குண்டில் இருந்த கடலையைச் செடி முழுவதையும் மல்லி உட்பட ஏழு பெண்கள் வேகமாக வேருடன் பறிந்திருந்தனர்.

மங்கம்மாள் பாட்டி முதல் குண்டில் இறங்கி கடலைச் செடி நட்டியிருந்த இடத்திற்கு கீழே தப்புக் கடலையைத் தேட ஆரம்பித்தாள்.

வேலை தொடங்கி ஒருமணி நேரத்தில் எட்டு வயது சிறுமியும், நாற்பது வயது பெண்ணொருத்தியும் தனத்திடம் வந்து கடலையை கூலியாகப் பெற்றுக் கொண்டு தப்புக் கடலை எடுக்க அனுமதி கேட்டனர்.

கூலி கொடுத்து தப்புக் கடலை எடுக்க ஆளை ஏற்கனவே பணியமர்த்தியதாக தனம் கூறியதும், ‘அந்த ஆள் யார்?’ என்று அந்தப் பெண் கேட்கும் போது அங்கே மாடசாமி வந்தான்.

‘என்ன சின்னத்தாயி ஏது இவ்வளவு தூரம்? மங்கம்மா கிழவிதான் தப்புக் கடலை எடுக்கா. போதுமா பதிலு.’ என்றான் மாடசாமி.

‘கிழவி கிட்ட செயிக்க முடியாது. ஏதோ கடலை தின்னு நாளாச்சேன்னு வந்தேன். சரி நான் போய்ட்டு வாரேன்ம்மா’ என்று கூறி புறப்பட்டாள் அப்பெண்.

அவள் சென்றதும் ‘ஏமாத்துக்கார கழுதம்மா அவ. கடலை கூலிக்கு தப்பு கடலை எடுக்குறேன்னு சொல்லிட்டு, எடுத்த கடலைல பாதிக்கு மேல மறைச்சிட்டு கொஞ்சக் கடலையைக் காட்டிட்டு ‘இவ்வளவுதான் தப்பு கடலை’ன்னு பொய் சொல்லுவா. ஆனா கிழவி ஏமாத்த மாட்டா.’ என்றான் மாடசாமி.

மதிய வேளை நெருங்கியது. எல்லோரும் சாப்பிட அமர்ந்தனர்.

அப்போது மல்லி, ‘ஏன், மங்காத்தா ஏதோ ஒன்ரைக்காரு பத்திச் சொல்றேன்னு சொன்னியே, என்னது அது?’ என்றாள்.

‘அதுவா, சொல்றேன். கல்யாணம் ஆகி முதன்முதலா நானும் எங்க வீட்டுக்காரரும் டவுனுக்கு போகனும்முன்னு நினைச்சோம்.

அம்மையப்புரத்தில இருந்து இராசபாளையம் டவுன் 8 கிமீ தொலைவுலதான் இருக்கு.

எப்பவாவது டவுனுக்குப் போறதா இருந்தா, எங்க வீட்காரரு வாடகைக்கு சைக்கிள எடுத்திட்டு டவுனுக்கு போவாக.

நான் பிறந்ததில இருந்து அதுவரைக்கும் டவுனுக்கு போனதில்ல.

‘காருல (பஸ்ல‌) டவுனுக்க போகையில சன்னலுக்கு பக்கத்தில உட்கார்ந்தா நல்லா சிலுசிலுன்னு காத்து வரும்முன்னு’ எங்கிட்ட அடிக்கடி சொல்லுவாக.

அதனால ‘டவுனுக்குப் போகனும்முன்னா என்னை காருல கூட்டிட்டுப் போங்கன்னு’ நான் சொன்னேன்.

‘சரி, ஒன்ரைக்காருக்கு போவோம்முன்னு’ சொன்னாக.

நாங்க ரெண்டு பேரும் மதியானம் வீட்ட விட்டு கிளம்பி அரச மரத்து பிள்ளையாரு கோயிலுக்கிட்ட காருக்குக் காத்திருந்தோம்.

பிள்ளையாரு கோயிலுக்கிட்ட இருந்த கண்ணையா கடையில எங்க வீட்டுக்காரரு பப்பர மிட்டாய் (ஆரஞ்சு மிட்டாய்) வாங்கிக் கொடுத்தாரு.

‘காரு சிலருக்கு ஒத்துக்காது. வாந்தி வரும். நீ இதுவரைக்கும் காருல போனதில்லங்க. இந்த மிட்டாய வாயில ஒதுக்கிக்கோ. வாந்தி வராதுன்னு’ சொன்னாரு.

நானும் பப்பர மிட்டாய வாங்கி வாயில போட்டேன். ரொம்ப இனிச்சிச்சு. கடிச்சு தின்னுட்டேன்.

அத பார்த்த எங்க வீட்டுக்காரரு ‘பப்பர மிட்டாய உன்ன வாயில ஒதுக்கத் தானே சொன்னேன். கடிச்சு ஏன் தின்னே?’ ன்னு கேட்டாரு.

‘இல்ல, நல்லா இருந்திச்சு. அதான் தின்னுட்டேன்.’ ன்னு சொல்லிட்டு அசட்டுதனமா சிரிச்சேன்.

‘சரி, காரு ஏறினதுக்கு அப்புறம் இன்னொரு பப்பர மிட்டாய தாரேன்.’ சொன்னாரு.

கொஞ்ச நேரம் அங்கேயே நின்னோம்.

அரச மரத்தில இருந்த காக்கா பழத்த கொத்தி கீழே போட்டுச்சு. பழம் என் தலையில வந்து விழுந்துச்சு.

‘என்னடா, இதுன்னு யோசிச்சேன். அரசம்பழம். நல்லவேளை கடவுளு இந்த மரத்துக்கு பூசணிக்கா மாதிரி பெரிசா பழத்த கொடுக்கல. இல்லேன்னா, இப்ப என் தலை வீங்கியிருக்கும்ன்னு நினைச்சேன்.’

அப்ப கவர்மண்ட் காரு ஒன்னு வந்திச்சு. எங்க வீட்டுக்காரரு ஓடிப்போயி ஏறப் போனாரு.

‘ஏங்க நில்லுங்க. ஒரு காரு தான வந்திருக்கு. இன்னும் அரைக்காரு வரணும்ல. அதக்குள்ள நீங்க அவசரப்பட்டு போயி ஏறுதீகன்னு’ சொன்னேன்.

‘என்ன சொல்றே நீ? இதுதான் ஒன்ரைக்காரு. ஏறுவோம்; வா’ன்னு சொன்னாரு.

நான் மறுபடியும் ‘நீங்கதான ஒன்ரைக்காரு வருமுன்னு சொன்னீக. இப்ப ஒரு காரு தான வந்திருக்கு. இன்னும் அரைக்காரு வரும். அதுல போவோம்’முன்னு சொன்னேன்.

அப்ப கண்டெக்குடெரு ‘ஏம்மா, இதுதான் ஒன்ரைக்காரு. ஏறப்போறீகளா? கார எடுக்கச் சொல்லவா?’ன்னு கேட்டாரு.

எங்க வீட்டுக்காரரு என் கையப் பிடிச்சு தரதரன்னு இழுத்து காருல‌ ஏத்திட்டு அவரும் ஏறிட்டாரு.

காரு பெரிசா இருந்திச்சு. ஆளுக உட்கார இருக்கைகள் இருந்திச்சு. ரெண்டு கதவு, நிறைய சன்னலுக இருந்திச்சு.

நான் சன்னலோர இருக்கையில உட்கார்ந்தேன். பக்கத்துல உட்கார்ந்த என் வீட்டுக்காருகிட்ட ‘இன்னும் அரைக்காரு வர்றதுக்குள்ள இப்படி காருக்குள்ள ஏத்திவிட்டீகளே?’ன்னு கேட்டேன்.

‘அடக்கழுத! ஓன்ரைக்காருங்குறது ஒன்ரை மணிக்கு வர்ற காரு. நீ என்னடான்னா ஒரு காரு வந்திருச்சு. இன்னும் அரைக்காரு வரலங்கிற. இப்பவாவது புரியுதா நான் சொன்னது’ ன்னு கேட்டாரு.

எனக்கு அவரு சொன்னது புரிஞ்சிச்சு.

அப்பதான் நான் சன்னல கவனிச்சேன். சன்னலுக்கு வெளியே மரம், செடியெல்லாம் எனக்கு எதுக்க‌ ஓடி வர்றத பார்த்தேன். எனக்கு பயம் வந்திருச்சு. பயத்துல வேர்க்க ஆரம்பிச்சிருச்சு. மயக்கம் வர்ற மாதிரி இருந்துச்சு.

சிலுசிலு சன்னல் காத்து பட்டதும் கொஞ்சம் மயக்கம் தெளிஞ்சு நல்லா இருந்திச்சு. அப்ப எங்க வீட்டுக்காரரு பப்பர மிட்டாய் ஒன்னக் குடுத்து வாயில ஒதுக்கச் சொன்னாரு. நானும் வாங்கி வாயில ஒதுக்கிட்டேன்.

இன்னைக்கும் எங்க வீட்டுக்காரரு ஒன்ரைக்காரு வருமான்னு கேட்டு என்னக் கேலி பண்ணுவாரு.’ என்று சொல்லிச் சிரித்தாள்.

எல்லோரும் மங்கம்மாள் பாட்டி கூறியதைக் கேட்டு குலுங்கிக் குலுங்கி சிரித்தனர்.

‘சரி சாயங்காலம் வீட்டுக்குப் போகையில சாம்பாருக்கு காசு கொடுத்த கதையைச் சொல்றேன்.’ என்று சொல்லி தப்புக் கடலையை எடுக்கச் சென்றாள் பாட்டி.

( பாட்டி கதை தொடரும்)

வ.முனீஸ்வரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.