வைரம் பாஞ்ச மரத்துக்கும் அதை
வெட்ட வந்த மனுசனுக்கும்
நடந்த கதையை கேளுங்க! நல்ல தீர்வு சொல்லுங்க!
ஒய்யாரமா தேரு செய்ய உன்னை நான் வெட்டனும்
உளியால் உன்னை செதுக்கனும் அழகு தேரை செய்யனும்
பைய்ய பைய்ய மக்கள் கூடி உன்னை இழுத்துச் செல்வதை
பல கோடி கண்கள் கண்டு ரசிக்கும்படி செய்யனும்
இலைதழைகளை இழந்து நிற்கும் என்னை நீ விட்டுறு
இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு தழைச்ச பின்னே வந்துரு
அதுவரைக்கும் பொறுத்திரு அப்புறமா உன் மனசுபோல அறுத்திடு
ஒய்யாரமா தேரு செய்ய உன்னை நான் வெட்டனும்
உளியால் உன்னை செதுக்கனும் அழகு தேரை செய்யனும்
சின்ன சின்ன இலைகள் இப்போ துளித்து நிற்கும் அழகைப்பார்
சிறிது காலம் கழித்து பூவும் மொட்டும் மலரும் பார்
அதுவரைக்கும் பொறுத்திரு அப்புறமா உன்மனசுபோல அறுத்திடு
ஒய்யாரமா தேரு செய்ய உன்னை நான் வெட்டனும்
உளியால் உன்னை செதுக்கனும் அழகு தேரை செய்யனும்
மணம் வீசும் மரங்களாலே காடு மணப்பதைப் பார் மானிடா
மலர்கள் காய்த்து பழமானால் பறவைகளுக்கு உணவாகும் தானடா
அதுவரைக்கும் பொறுத்திரு அப்புறமா உன் மனசுபோல அறுத்திடு
ஒய்யாரமா தேரு செய்ய உன்னை நான் வெட்டனும்
உளியால் உன்னை செதுக்கனும் அழகு தேரை செய்யனும்
பழங்களெல்லாம் விதைகளாக பரவிக் கிடக்கும் நிலையைப் பார்
பயணத்தை தொடர என்தன் பிள்ளைகளாய் மாறும் பார்
இப்போது என்னை எடுத்துச் செல் உன் மனம்போல தேரைச் செய்
எனச் சொன்ன வைரம் பாஞ்ச மரத்தைக் கண்ட
மனம் மாறிய மனிதன் சொன்னான்
வாழ்க்கைப் பயணம் பயனுறவே வாழும்
உன் வாழ்வெனெக்குப் பாடமாகும்…
ஆழ்மனதில் ஆசிரியனாய் இருப்பதே உன் இடமாகும் ….
நெடுந்தேர் ஒன்று செய்யும் போது நடுத்தூணாய்
உன்னை வைத்து வணங்கிடுவேன்
எனக்கூறி விலகிச் சென்றான் மனிதனுமே!
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!