ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீடு

ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீடு அறிக்கையினை மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு 14.06.2018 அன்று வெளியிட்டுள்ளது.

இக்குறியீடானது மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களின் நீர் மேலாண்மை செயல்திறனை மதிப்பீடு செய்யவும், அதனை மேம்படுத்தவும் உதவும் என இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உகந்த மற்றும் சரியான தண்ணீர் பயன்பாட்டைப் பெறவும், தேவைப்படும் பொழுது நீரினை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதை ஊக்குவிப்பதும் இதனுடைய நோக்கம் ஆகும்.

மத்திய நீர் ஆதார அமைச்சகம், மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் உள்ள நீர் பற்றிய தகவல்களைச் சேகரித்து இக்குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது இதற்கான வலைப் பின்னலையும் (web portal) மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

நீர் மேலாண்மை குறியீட்டின் அவசியம் என்ன?

இந்தியா, தனது வரலாற்றில் தற்போது மோசமான தண்ணீர் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் பிரச்சினையினால் கோடிக்கணக்கான உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது 60 கோடி இந்தியர்கள் தண்ணீர் பற்றாக்குறையினால் அதிகபட்ச அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தூயநீரினைப் பெறுவதற்கு போதிய வாய்ப்பில்லாமல் 2 இலட்சம் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இறக்கின்றனர்.

2030-ல் இந்தியாவில் தண்ணீரின் இருப்பைப் போல் இரு மடங்கு தண்ணீர் தேவை அதிகரிக்கும் அபாயம் ஏற்படும்.

எதிர்காலத்தின் நீர்வள ஆதாரங்களின் வரம்பு மற்றும் நீரின் தேவை அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது நீர் ஆதாரங்களின் நிலையான மேலாண்மை முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது.

ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீடானது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே கூட்டுறவு மற்றும் போட்டியிடும் கூட்டாட்சி முறையை நிறைவேற்றும்.

ஆதலால் நீர் மேலாண்மை குறியீடு அவசியானது என மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கூட்டு நீர் மேலாண்மை குறியீட்டின் முக்கிய கூறுகள்

இக்குறியீடு வழங்க நிலத்தடி நீர், நீர் ஆதாரங்களின் பராமரிப்பு, பாசனம், பண்ணை நடைமுறைகள், குடிநீர் உள்ளிட்ட 9 பரந்ததுறைகளில் 28 குறிகாட்டிகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

இந்தக் குறியீடானது மாநிலங்கள், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரகங்கள் மற்றும் துறைகளுக்கு நீர் வளங்களை மேம்படுத்துவதற்கான பொருத்தமான உத்திகளை உருவாக்கவும் அவற்றை செயல்படுத்தவும் உதவுகிறது.

விவசாயத்துடன் நேரடியாக தொடர்புடைய நீர் மேலாண்மை நுட்பங்களை சரிவர செயல்படுத்தாத மாநிலங்களுக்கு அழுத்தம் கொடுத்து அவ்விடங்களில் நீர் மேலாண்மையை, நுட்பங்களை நன்மறையில் செயல்படுத்த இம்முறை உதவுகிறது.

பகுப்பாய்வு நோக்கத்திற்காக இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை 1.வடகிழக்கு மற்றும் இமாலய மாநிலங்கள் 2.பிற மாநிலங்கள்.

2016-17 ஆண்டிற்கான நீர் மேலாண்மை குறியீடு பட்டியலில் குஜராத் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்கள் உள்ளன.

வடகிழக்கு மற்றும் இமயமலைப் பகுதிகளுக்கான பட்டியலில் திரிபுரா முதலிடத்தில் உள்ளது. இமாசல பிரதேசம், சிக்கிம், அஸ்ஸாம் மாநிலங்கள் அதனைத் தொடர்ந்து உள்ளன.

பிற மாநிலங்கள் பட்டியல்

வரிசை மாநிலம் மதிப்பெண் (100-க்கு) தரவரிசை
1 குஜராத் 76 1
2 மத்திய பிரதேசம் 69 2
3 ஆந்திர பிரதேசம் 68 3
4 கர்நாடகா 56 4
5  மகாராஷ்டிரா 55 5
6   பஞ்சாப் 53 6
7  தமிழ்நாடு 51 7
8 தெலுங்கானா 50 8
9 சட்டிஸ்கர் 49 9
10 ராஜஸ்தான் 48 10
11 கோவா 44 11
12 கேரளா 42 12
13 ஒடிசா 42 13
14 பீகார் 38 14
15 உத்திர பிரதேசம் 38 15
16 ஹரியானா 38 16
17 ஜார்கண்ட் 35 17

 

வடகிழக்கு மற்றும் இமாலய மாநிலங்கள் பட்டியல்

வரிசை மாநிலம் மதிப்பெண் (100-க்கு) தரவரிசை
1 திரிபுரா 59 1
2 இமாசலபிரதேசம் 53 2
3 சிக்கிம் 49 3
4 அஸ்ஸாம் 31 4
5 நாகலாந்து 28 5
6 உத்திரகண்ட் 26 6
7 மேகலாயா 26 7

 

நிதி ஆயோக் அமைப்பானது ஆண்டு தோறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான நீர் மேலாண்மை தரவரிசைப் பட்டியல் மற்றும் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீடு பற்றிய தகவல்களை வெளியிட முடிவு செய்துள்ளது.

வ.முனீஸ்வரன்

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.