ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் என்ற இப்பாடல், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரும், பெரியாழ்வரின் செல்வப் புதல்வியுமான ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் இருபத்து ஐந்தாவது பாசுரம் ஆகும்.
திருப்பாவை பாடல் 25
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
விளக்கம்
கருணை மிகுந்த திருமாலான கண்ணனே, நீ கம்சனின் சிறையில் நிகரற்ற தேவகி அன்னையின் வயிற்றில் மகனாகப் பிறந்தாய்!
பிறந்த அன்று இரவே, ஆயர்பாடியில் நந்தகோபரின் நீ வளர்ந்த இல்லத்திற்கு மாற்றப்பட்டு, வேறுஒருத்தியான ஒப்பற்ற யசோதை அன்னையின் மகனாக ஒளிந்து வளர்ந்தாய்!
ஆயர்பாடியில் நீ வளர்ந்த காலத்தில், உன்னை தன்னுடைய பகைவன் எனக்கருதி கம்சன் அழிக்க எண்ணி உனக்கு தீங்கிழைத்தான்.
உன்னைக் கொல்ல வேண்டும் என்று எண்ணிய அவனுடைய செயல்பாடுகளை அழித்ததால், அவனுடைய வயிற்றில் பயம் நெருப்பு போல் பற்றிக் கொண்டது.
அப்பயத்தினை உண்டாக்கிய உயர்ந்த குணங்களை உடைய திருமாலே!
நாங்கள் உன்னுடைய அருளை பெற உன்னை நாடி வந்துள்ளோம்!
உனது அருளைத் தருவாயானால், உன்னுடைய செல்வச் சிறப்பையும், உன்னுடைய அடியவர்களுக்காக நீ புரிந்த வீரச்செயல்களையும் போற்றிப் பாடுவோம்!
உன்னுடைய பெருமையைப் பாடுவதால், எங்களுடைய வருத்தங்கள் நீங்கி பெரும் மகிழ்ச்சி அடைவோம்!