ஒரு ஆண்டின் 12 மாதங்கள் 6 பருவங்கள் எனப் பிரிக்கப்படுகின்றன. இவை:
1.பின்பனி காலம் – தை, மாசி மாதங்கள்
2.இளவேனில் காலம் – பங்குனி, சித்திரை
3.கோடை, முதுவேனில் காலம்கி – வைகாசி, ஆனி
4.கார் (மழை) காலம் – ஆடி, ஆவணி
5.இலையுதிர்காலம் – புரட்டாசி, ஐப்பசி
6.முன் பனிக்காலம் -கார்த்திகை, மார்கழி
பருவங்கள் – தோஷங்களின் ஏற்றத் தாழ்வுகள்
தை, மாசி – பின்பனி – கபத்தின் வளர்ச்சி
பங்குனி, சித்திரை – இளவேனில் – கபத்தின் சீற்றம்
வைகாசி, ஆனி – கோடை – கபத்தின் சமநிலை வாயுவின் வளர்ச்சி
ஆடி, ஆவணி – மழை – வாயுவின் சீற்றம், பித்தத்தின் வளர்ச்சி
புரட்டாசி, ஐப்பசி – இலையுதிர் – வாயுவின் சமநிலை பித்தத்தின் சீற்றம்
கார்த்திகை, மார்கழி – முன்பனி – பித்தத்தின் சமநிலை
பனி(குளிர்) காலம்: (கார்த்திகை, மாசி)
குளிர் காலத்தில், அதாவது கார்த்திகையிலிருந்து மாசி வரை முன்பனி, பின்பனி என்று இரண்டு பருவங்கள் உள்ளன. இந்தக் காலத்தில் வயிற்றிலுள்ள தீ(அக்னி) வலுவுள்ளதாக இருக்கும்.
பசி அதிகமாகத் தோன்றும். எனவே குளிர் காலத்தில் வலுவூட்டும் உணவை அருந்த வேண்டும். குளிர் காலத்தில் குளிரின் சேர்க்கையால் வாயு உடலில் வளர்ந்து விடும். ஆக, நாம் உண்ணும் உணவு, உடலில் அதிகரித்துள்ள பசி, ஜீரண சக்திக்கு ஈடாகவும், வாயுவைத் தணிக்கக்கூடியதாகவும், இருக்க வேண்டும்.
அதனால் தான் குளிர்காலத்தில் பசையுள்ளதும், இனிப்பு, உப்பு, புளிப்புச் சுவையுள்ளதுமான உணவை உட் கொள்ள வேண்டும். வெல்லம், மாவு, இவைகளால் செய்த பொருட்கள், உளுந்து, கரும்புச் சாறு, பால், மாமிசம் இவற்றால் செய்த பொருட்கள், எண்ணெய், புதிய அரிசியால் சமைத்த அன்னம் ஆகியவற்றை உண்ண வேண்டும்.
உடற்பயிற்சி, எண்ணெய் குளியல், வெயிலில் உடல் படும்படி இருத்தல் இவை உடலுக்கு நன்மை வழங்கும். குளிப்பதற்கு வெந்நீரை பயன்பதுத்துவது நல்லது.
வசந்தம் (பங்குனி, சித்திரை)
பங்குனி, சித்திரை மாதங்களில் சூரியனின் வெப்பம் அதிகரிப்பதால் கபம் சீற்றமடைந்து அக்னி(வயிற்றுத் தீ) யைத் தணியச் செய்யும், ஜீரணசக்தி குன்றிவிடும். இதனால் பலவிதமான நோய்கள் தோன்றும். பொதுவாக கபம் சம்பந்தப்பட்ட நோய்களான சளி, இருமல், ஜுரம், சுவாசம் போன்ற நோய்கள் உடலைத் தாக்கும்.
இந்தப் பருவத்தில் உணவு, பழக்க வழக்கங்கள் கபத்தைக் குறைப்பதாகவும், வயிற்று அக்னியை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். வாய் கொப்புளித்தல், நஸ்யம், (மூக்கில் சொட்டு மருந்து) உடற்பயிற்சி ஆகியவை மிக அவசியம்.
மேலும் கோரைக் கிழங்கு, சுக்கு முதலியவை சேர்த்துக் காய்ச்சிய தண்ணீர், அல்லது சந்தனம், கருங்காலி சேர்த்துக் காய்ச்சிய நீர் இவற்றைப் பருக வேண்டும்.
எளிதில் ஜீரணமாகத உணவுகள் குளிர்ப் பொருட்கள், பகல் தூக்கம், எண்ணெய் பசை, உப்பு, புளிப்பு, இனிப்புச் சுவைகள் சேர்ந்த உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
கோடைக்காலம் (வைகாசி, ஆனி)
இந்தப் பருவத்தில் சூரியனின் வெப்பத்தினால் பூமியும், தாவரங்களும், உயிரினங்களும் சூடாகவும், வறண்டும் போய்விடுகின்றன. வறட்சித் தன்மை மிக அதிகமாகிவிடுவதால் உடலில் வாயு அதிகமாக வளர்ந்து விடுகின்றது. ஜீரண சக்தி குறைந்து விடுகிறது.
இந்தப் பருவத்தில் அதிக உடற்பயிற்சி, வெய்யிலில் செல்லுதல், காரம், புளிப்பு, உப்பு, என்னும் சுவைகள் உஷ்ண வீரியம் உள்ள பொருட்கள் இவற்றைப் பயன்படுத்தக் கூடாது. மதுவை அருந்தக் கூடாது. அருந்தினால் வறட்சி, தளர்ச்சி, எரிச்சல், மயக்கம் இவை தோன்றக் கூடும்.
நெய் கலந்த கஞ்சி, நீரான குளிர்ந்த சாதம், பால், நெய், இளநீர், சர்க்கரை இவற்றைப் பயன்படுத்தலாம். உடல் மீது சந்தனம் பூசிக் கொள்வது உஷ்ணத்தைத் தணிக்கச் செய்யும். இரவில் திறந்த வெளியில் உறங்குவது நல்லது.
வெட்டி வேர், சந்தனம், போன்ற குளிர்ச்சியான பொருட்களைச் சேர்த்த நீரை குடிப்பது நல்லது.
கார் (மழை) காலம் (ஆடி, ஆவணி)
இந்தக் காலத்தில் ஜீரண சக்தி குறைந்தே இருக்கும். கோடை காலத்தில் வளர்ந்த வாயு, மழைக் காலத்தில் சீற்றம் அடைகிறது. ஆகவே, இந்தப் பருவத்தில் உடலில் வாயு சம்பந்தமான நோய்கள் தோன்றும்.
முட்டி வலி, கால், இடுப்பு பகுதிகளில் வலி ஆகியவை ஆகியவை அதிகமாகும். வாயுவின் சீற்றத்திற்கு முக்கியமான சிகிச்சை வஸ்தி (enema) சிகிச்சையாகும். மழைக் காலத்தில் இந்த சிகிச்சையைப் பயன்படுத்துவது அவசியம்.
மழைக் காலத்தில் பித்தமும் வளர்ச்சி பெறும். அரிசி, கோதுமை இவைகளால் செய்த கஞ்சியை அருந்த வேண்டும். தண்ணீரைக் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
மழை அல்லது காற்றுள்ள நாட்களில் உடலில் உள்ள ஈரப்பசை, வாயு இவைகளைப் போக்கக் கூடிய உலர்ந்த, எளிதில் செரிக்கக் கூடிய உணவை இனிப்பு, புளிப்பு, உப்பு சுவைகளுடன் கலந்து சூடாகப் பயன்படுத்த வேண்டும். சிற்றின்பம், உடற்பயிற்சி இவைகளில் அதிகமாக ஈடுபடுதலையும், பகல் தூக்கம், வெய்யில் இவைகளையும் தவிர்க்க வேண்டும்.